செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 21, 2020

செய்தியும், சிந்தனையும்....!

‘புண்ணியம்!'


‘நீட்' தேர்வில் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் முதல் பத்து இடத்தில் வந்துள்ளனர்: - எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர்.


பா.ஜ.க. தலைவராக வருவதற்கு முதல் தகுதி - இதுபோன்ற அண்டப் புளுகுகளைக் கொட்டித் தீர்ப்பதில் யாருக்கு முதல் பரிசு என்பதுதானா?


பா.ஜ.க. தலைவர் முருகன் அவர்களே, நீங்கள் சொன்ன அந்த முதல் 10 பேர் பட்டியலை வெளியிட்டு உங்களின் நம்பகத்தன்மையை நிரூபித்தால் கோடி ‘புண்ணியம்' ஆகும்.


பண்டிகை -


ஓர் எச்சரிக்கை!


பண்டிகை, பருவ மழைக் காலம் வருவதால், கரோனா தொற்று அதிகம் பரவக் கூடிய சவால் நிறைந்த காலகட்டம்: - சி.விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.


பண்டிகைகள், கடவுள், மதம் சம்பந்தப்பட்டவைதானே - இவற்றில் ஆபத்து என்பதை மக்கள் இப்போதாவது புரிந்துகொண்டால் சரி!


தீபாவளி பண்டிகைக்கு அதிகப் பேருந்துகள், சிறப்பு இரயில்கள் என்று இன்னொரு பக்கத்தில் அரசு அறிவிப்பு!


என்ன விநோதம் பாரு!


மத்திய பிரதேசத்தில் உஜ்ஜயினியைச் சேர்ந்த விக்ரம் பத்ரி - ஒரு பெண்ணை மானபங்கம் செய்த வழக்கில் நீதிபதி அளித்த விநோத தண்டனை.


குற்றம் இழைத்த ஆசாமி தன் மனைவியுடன் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்குச் சென்று அப்பெண்ணுக்கு ராக்கிக் கயிறு கட்டவேண்டும்; அன்பளிப்பாக ரூ.11,000 அளிக்கவேண்டுமாம்...


ஊருக்குத்தானே -  எவ்வளவு உபதேசங்களும் செய்யலாம். இதுவே தங்கள் வீட்டில் நடந்திருந்தால்...


குற்றவாளி யார்?


சென்னை திரு.வி.க. நகர் அடுத்த வெற்றி நகர் ராமசாமி தெருவில் வசிக்கும் பழனி என்பவர் தற்கொலைக்கு முயன்றார். மனைவியையும், குழந்தைகளையும் விஷம் கொடுத்துக் கொன்றார்.


என்ன காரணம்? கரோனாவால் வியாபாரம் பாதிக்கப்பட்டு, தொழில் நடத்த முடியாத நிலையில், இந்தச் சோக முடிவாம்.


இதற்கு யார் பொறுப்பு?


கரோனாவா? அல்லது மாநில முதல்வரும், மத்திய நிதியமைச்சரும் கூறும் கடவுளா?


கையாலாகாதவர்க்குக் கடவுள் துணை என்பர் - அரசுகள் கடமையைச் செய்ய வக்கின்றி கையாலாகாதனத்தில் உள்ளன என்பதுதான் உண்மை!


தேவை


முதுகெலும்பு


வீட்டில் இருந்தபடியே வேலை செய்தால் முதுகுத்தண்டு பிரச்சினை: - மருத்துவர்கள் எச்சரிக்கை.


முதுகுத் தண்டு பல வகைகளிலும் முக்கியமானது. முதுகு எலும்போடு செயல்படு என்று சொல்லுவது இல்லையா?


தேர்வு நடத்த


தகுதி உண்டா?


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வில் நடைபெற்ற முறைகேட்டில் சம்பந்தப்பட்ட 97 அரசுப் பணியாளர்கள் கைது.


மத்திய (நீட்), மாநில அரசுகள் நடத்தும் தேர்வுகளில் தில்லுமுல்லுகள் நடைபெறுகின்றன. தேர்வு நடத்தவே தகுதி திறமை இல்லாதவர்கள்தான் தகுதி - திறமையானவர்களை வேலைக்குத் தேர்வு செய்கிறார்களாம்.


வழிகாட்டுமா உச்சநீதிமன்றம்?


மாநில அரசுகள் தேவையின்றி மேல்முறையீடு செய்யக் கூடாது: - உச்சநீதிமன்றம் அறிவுரை


தமிழ்நாடு அரசின் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டம் ஒன்பதாவது அட்டவணையில் பாதுகாக்கப்பட்டும், அதன்மீது ஒவ்வொரு ஆண்டும் வழக்குத் தொடுக்கப்படுவதை உச்சநீதிமன்றம் எப்படி அனுமதிக்கிறது? முதலில் உச்சநீதிமன்றம் வழிகாட்டட்டும்!


காரணம் மதமே!


கேரளாவில் கரோனா அதிகம் பரவியதற்குக் காரணம் ஓணம் பண்டிகை என்ற பெயரால் மக்கள் அதிகம் கூடியதுதான்: - மத்திய அமைச்சர் ஹர்ஸ்வர்தன்


கடவுளும், மதமும் மக்களுக்கு நல்லது செய்யாவிடினும் உபத்திரம் செய்யாமல் இருந்தால் போதாதா?


இப்பொழுதாவது பகுத்தறிவுவாதிகளின் குரலை மதிக்கக் கற்றுக் கொள்ளட்டும்.


வழியாயில்லை?


தேர்தல்களில் பி.ஜே.பி. வெற்றி பெற விடக் கூடாது - காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுக்கு காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்.


மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு மதவாத அரசு - சமூகநீதிக்கு எதிரான உயர்ஜாதி மக்களுக்கான அரசு என்பதை முன்னிறுத்தி இந்தியா முழுவதும் மக்களிடத்தில் பிரச்சார வெள்ளம் கரைபுரண்டு ஓட தேசிய கட்சியான காங்கிரஸ் திட்டம் வகுத்தால்தான் இது சாத்தியம். அதற்கு முதல் பரிசோதனை மய்யமாக நடக்க இருக்கும் பீகார் மாநில சட்டப் பேரவைத்


தேர்தலைக் கையில் எடுத்துக் கொள்ளலாமே!


No comments:

Post a Comment