உத்தரவாதம் இல்லை!
கரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தோரிடத்தில் எதிர்ப்பு சக்தி ஏழு மாதங்கள் வரை நீடிக்கும்: - இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு.
அதற்காக அலட்சியம் வேண்டாம் - அடுத்தடுத்த பாதிப்பு உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
கோதாவுக்குள்....
முதல்வரை மாற்ற திரிபுராவில் பா.ஜ.க.வில் கலகம்.
சிறப்பாக நடந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை ஒழித்ததன் பலனை இப்பொழுது அனுபவிக்கிறார்கள். லெனின் சிலையை உடைத்தார்கள்; இப்பொழுது அவர்கள் ஆட்சியை அவர்களே உடைக்கக் கோதாவுக்குள் குதித்துள்ளனர்.
அது என்ன விவகாரம்?
மருத்துவப் படிப்பில் 50 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம்; தீர்ப்பு ஒத்தி வைப்பு: - 'தினமணி' தலைப்பு.
அது என்ன விவகாரம்? ஓ, அவர்களுக்கு விவகாரம்தான் - நமக்குத்தானே வாழ்வாதாரம்!
இன்னொன்று - மத்திய அரசின் மறுப்பை மறைத்து, தீர்ப்பு ஒத்தி வைப்பு என்று செய்தி வெளியீடு!
பார்ப்பனர்களின் இத்தகைய அசைவுகளைத் துல்லியமாக அறிவதற்கு ஈரோட்டு நுண்ணாடி தேவை.
பெண்கள் வயது!
பெண்கள் திருமண வயது விரைவில் முடிவு.
குறைந்தபட்சம் ஒரு பெண் பட்டதாரியாக ஆகும் வயது வரையாவது திருமண வயதை நிர்ணயம் செய்வது அவசியம்.
இன்னும்....
ரேஷன் கடைகளில் பழைய முறைப்படி பொருள்கள் வழங்கப்படும்.
விஞ்ஞானக் கருவிகளைக் கையாளுவதில் நாடு இன்னும் அஞ்ஞான யுகத்தில்தான் இருக்கிறதோ!
சிண்டுக்குள் சிக்கல்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு. ஆளுநர் முடிவெடுக்கும் வரை கலந்தாய்வு இல்லை: - தமிழக அரசு அறிவிப்பு.
சபாஷ், சரியான முடிவு! ஆளுநர் முடிவு எடுக்க முடியாத அளவுக்கு இடியாப்பச் சிக்கலா இது! பா.ஜ.க., சங் பரிவார் சிண்டுக்குள் சிக்கிக் கிடக்கிறது என்பதுதான் உண்மை.
பிரதமர் பராக்!
பீகாரில் 12 பொதுக் கூட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
அப்படியா?
கடந்த தேர்தலில் பிரதமர் மோடி பீகார் பக்கம் வரவேண்டாம் என்று சொன்ன முதலமைச்சர் தானே இந்தத் தேர்தலிலும் முதலமைச்சருக்கான வேட்பாளர்!
ஆதாயம் இல்லாமலா?
கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதில் முதலிடத்தில் டாடா குழுமம்.
ஆதாயம் இல்லாமலா கார்ப்பரேட்டுகள் ஆற்றைக் கட்டி இரைப்பார்கள்?
பிரதமர் மோடியை அழைக்காதவரை சந்தோஷமே!
செயற்கை நுண்ணறிவுபற்றி பன்னாட்டு விஞ்ஞான மாநாடு ஓசையின்றி நடந்து முடிந்துள்ளது.
பிரதமரை அந்த மாநாட்டில் பங்கேற்க அழைக்காதவரை சர்வ சந்தோசம்.
தலையில் எழுதியவன் எங்கே போனான்?
இந்திய மக்களின் ஆயுள் காலம் 59.6 ஆண்டிலிருந்து 70.8 ஆண்டாக உயர்வு.
ஆயுளை ஆண்டவன் அன்றே எழுதினான் என்ற புரூடா எல்லாம் இனி நடக்காது- மருத்துவ அறிவியல் வளரச்சியே இதற்கு அடிப்படை.
வாயு பகவான்மீது குறையா?
உலகளவில் காற்று மாசுபட்டதற்கு இந்தியா போன்ற நாடுகளே காரணம்: - அமெரிக்க அதிபர் டிரம்ப்.
அபச்சாரம்! அபச்சாரம்!! வாயு பகவானை மாசுபடுத்த முடியுமா?
No comments:
Post a Comment