மனு சாகவில்லை இதோ அவர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 30, 2020

மனு சாகவில்லை இதோ அவர்கள்!

'வாழை மரத்துக்குக் கட்டிவை!'



"பிராமணப் பெண்கள் தட்சணை தர முடியாமல் அதற்காக இன்னொரு ஜாதிக்காரனை திருமணம் செய்து கொள்வது சரியல்ல. பெற்றோர்கள் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் வாழை மரத்திற்கு அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்து விடுங்கள். பிறகு அந்த வாழை மரத்தை வெட்டி விடுங்கள். இப்போது அந்தப் பெண் விதவையாக ஆகி விட்டாள் என்று விதவைக் கோலம் கொடுத்து விடுங்கள். அந்த நோன்பை வாழ்நாள் முழுமையும் இருந்து கன்னியாகவே அவள் நம் தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும்!" என்று சொன்னவர் காஞ்சி மூத்த சங்கராச்சாரியார்.


- பாரதி சிந்தனை மன்ற விழாவில்


தோழர் தா. பாண்டியன் ('தாய்' 8.3.1987).


உடன்கட்டை ஏறுவதற்குப் பச்சைக்கொடி!


கேள்வி: பெண்கள் உடன்கட்டை ஏறுவது போன்ற மூடப் பழக்கங்களை மதங்கள் ஆதரிக்கின்றதே?



காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி: வரதட்சணைக் கொலை என்று நிறைய பேர் இறந்து போறாங்க. அதை எல்லாம் விட்டு விட்டு, ஏன் உடன்கட்டை ஏறுவதை மட்டும் கேட்கிறீங்க? இந்தக் கால கட்டத்தில் யாரோ ஒரு தலைவனுக்காக கட்சித் தொண்டர்கள் தீக்குளிக்கிறார்கள். அந்தக் காலத்தில் கணவனைத் தெய்வமாக மதித்து வாழும் பெண்மணி அதைச் செய்தது ஆச்சரிய மில்லையே! உடன்கட்டை ஏறச் சொல்லி எந்த சாஸ்திரத்திலேயும் இல்லை. பெண்களின் உணர்வைக் காட்டும் வழி அது  ('ஆனந்த விகடன்' 1.3.1998).


சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி


"ஆஞ்சநேயரின் வாலில் வைத்த நெருப்பு ஸீதையின் 'பாதி வரத்யத்தால் (கற்புச் சக்தியால்) அவரைப் பாதிக்காமலேயே இருந்தது. குமாரில பட்டர் உமிக் காந்தல் அக்னியில் கருகியபோது எதிரே நின்ற (சங்கர) ஆசார்யாரின் ஸாந்தியத்தால் அவருக்கு உஷ்ணமே தெரியாமல் ஜில்வென்று இருந்தது. அநேக பதிவிரதைகளுக்கு அவர்களுடைய பதி பக்தியினாலேயே சிதாக்னி சந்தனமாக இருந்திருக்கிறது. அவர்கள் கட்டியிருந்த புடவை அத்தனை அக்னியிலும் எரியாமலே இருக்குமாம். அதை எடுத்துப் பூஜை பண்ணுவதுண்டு" மறைந்தகாஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி (தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி - பக்கம் 967, 968).


குறிப்பு: சீனியர் சங்கராச்சாரியாருக்கும், ஜூனியர் சங்கராச் சாரியாருக்கும் இடையே ஏதோ "இடிக்கிறதே" - கவனித்தீர்களா?


பெண்கள் வேதம் ஓதக் கூடாது!



பெண்கள் வேதம் ஓத உரிமை கிடையாது என்று கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒரு பெண்ணை வேதத்தைக் கூற விடாமல் மேடையிலிருந்து கீழே இறங்கச் செய்தார் பூரி சங்கராச்சாரியார்.


(இதனைக் கண்டித்து திராவிடர் கழகத் தின் சார்பில் திராவிடர் கழக மகளிரணியினர் தமிழ்நாடு எங்கும் பூரி சங்கராச்சாரியாரின் கொடும்பாவியை எரித்தனர் - (17.2.1994).


"பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடாது!"


- ஜெயேந்திர சரஸ்வதி


Sankaracharya against quota for women politics. virtually rejected for the demand for seperate reservation for women.
('The Pioneer' 17.3.1997)


"விதவைப் பெண்கள் தரிசு நிலம்!"


விதவைப் பெண்கள் தரிசு நிலத்திற்குச் சமமானவர்கள்.


 -  ('தினமணி' தீபாவளி மலர்).


காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி தினமணி தீபாவளி மலரில் கூறிய கருத்தினைக் கண்டித்த காஞ்சிமடம் முன் திராவிடர் கழக மகளிரணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். (9.3.1998).


வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கக் குறைவானவர்கள் என்று சொன்னவரும் இதே சாட்சாத் ஜெயேந்திர சரஸ்வதிதான்.


ஆணின் தேவையை நிறைவேற்றாத மனைவியை விரட்டிவிட வேண்டும்


- மோகன் பாகவத்



பெண் கல்வியையும், பெண்ணின் சுதந்திரத்தையும் மறைமுகமாக தாக்கிப் பேசிய மோகன் பகவத் மேலும் ஒரு சர்ச்சைக்குரிய உரையை கூறினார். அதா வது மனைவி, கணவனுக்கு சேவகம் செய் வதே கடமையாகக் கொள்ள வேண்டும்.


பெண்கள் இந்தக் கடமையிலிருந்து விலகிவிட்டால் அந்த பெண்ணை விலக்கி விடுவது நல்லது. திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம் (சோசியல் காண் ராக்ட்) மாத்திரமே என்று தன்னுடைய பேச்சில் கூறினார். மனைவி என்பவள் கணவனின் தேவைகளை நிறைவேற்றுவதை மட்டுமே தலையாய கடமையாக கொள்ள வேண்டும். வீட்டை கவனிக்க வேண்டும். கணவனின் தேவை களைப் பூர்த்தி செய்ய வேண்டும். கணவனுக்கு இன்பம் தர வேண்டும். இது பெண்ணின் கடமை; இந்தக் கடமையிலிருந்து ஒரு பெண் விலகிவிட்டால் அவள் தேவையில்லை. அவர்களுக் கான ஒப்பந்தம் முடிந்து விட்டது. விலக்கிவிட வேண்டும். கணவ னின் தேவைகளை நிறைவேற்றாத மனைவியை உடன் வைத்திருப் பதால் கணவனுக்கு என்ன பலன்? ஆகையால் திருமணம் என்னும் ஒப்பந்தத்தை முடித்து விடவேண்டும் என்று கூறினார்.


 மோகன் பாகவத் 8.11.2014 அன்று அசாமில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது “கற்பழிப்புகள் இந்தியாவில் தான் நடக்கும்; பாரதத் தில் கற்பழிப்புகளே நடப்பதில்லை” என்று சொல்லியிருக்கிறார். மேலும், இந்தியாவின் கிராமப்புறங்களிலோ காடுகளிலோ இது போன்ற கற்பழிப்புச் சம்பவங்கள் நடப்பதே இல்லை என்றும், நகரங் களில் மட்டுமே நடப்பதாகவும் பழங்கால பாரதக் கலாச்சாரத்தை மீண்டும் கொண்டு வர வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.


 இப்படிப் பெண்களை இழிவுபடுத்தியவர்கள் குற்றவாளிகள் இல்லையாம்! இழிவுபடுத்தியதை எடுத்துச் சொன்ன திருமாவளவன்தான் குற்றவாளியாம்! இதிலும்கூட வருணப் பார்வைதானா? மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதிதானே!


No comments:

Post a Comment