'நீட்' தேர்வில் தேனி மாவட்டம் சில்வார்பட்டியைச் சார்ந்த அரசு மாதிரி மேல் நிலைப் பள்ளியில் படித்த ஆடு வளர்ப்புத் தொழில் செய்யும் ஒருவரின் மகனான ஜீவித்குமார் என்ற மாணவர் 'நீட்' தேர்வில் 720க்கு 644 மதிப்பெண் பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 1823ஆம் இடம். தேசிய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களில் ஜீவித்குமார் முன்னிலையில் இருக்கிறார்.
திருப்பூர் வெள்ளக்கோயிலைச் சேர்ந்த தனியார்ப் பள்ளியில் படித்த மாணவர் சிறீஜன் 'நீட்' தேர்வில் 720க்கு 710 பெற்றார். அகில இந்திய அளவில் எட்டாம் இடமும், தமிழக அளவில் முதல் இடமும் பெற்றுள்ளார்.
நாமக்கல்லைச் சேர்ந்த மோகனப்பிரியா என்ற மாணவி 705 மதிப்பெண் பெற்று தமிழகத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
இந்த மூன்று பேர்களுடைய மதிப்பெண்களை வெளி யிட்ட 'தினமலர்' என்னும் திரிநூல் ஏடு என்ன சொல் லுகிறது?
"தமிழக மாணவர்கள் அதிலும் குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களால் 'நீட்' தேர்வில் வெற்றி பெற முடியாது, அவர்களால் மருத்துவக் கனவை நனவாக்கும் வகையில் மருத்துவப் படிப்பில் சேர முடியாது. என தமிழக கட்சிகளும், சில அரசியல்வாதிகளும் கூறி வந்தனர். அவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி தரும் வகையில் அரசுப் பள்ளி மாணவர் ஜீவித்குமார் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்.
எனவே அது போன்ற அரசியல்வாதிகள் இனி மேல் வாயை மூடிக் கொள்வது நல்லது என ஆசிரியர்களும் பெற்றோர்களும் தெரிவிக்கின்றனர்" என்று வித்தாரமாக செய்தி வெளியிட்ட 'தினமலர்' 'அரசியல்வாதிகள் இனி வாயைப் பொத்தலாம்' என்று தலைப்புக் கொடுத்துள்ளது.
'இமயமலையை இலைச்சோற்றில் மறைப்பது' என்று சொல்லுவார்கள். இந்தத் 'தினமலர்' ஏடோ, ஏதோ உலகப் பரப்பையே தன் பூணூலால் முடிச்சுப் போடும் போலி ருக்கிறது!
இரண்டு மாணவர்கள், ஒரு மாணவி ஆகியோர் 'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றது குறித்துச் சிலாகித்து எழுதுகிறது "தினமலர்". நாமும் வாழ்த்துகளை மூவருக்கும் தெரிவித்துக் கொள்ளவும் செய்கிறோம்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த மூவரில் ஒரே ஒரு மாணவன் தான் அரசுப் பள்ளியில் படித்தவன் என்று இதே 'தினமலர்' ஒப்புக் கொள்கிறது. அரசுப் பள்ளியில் படித்த ஒரே ஒரு மாணவன் 'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று விட்டதால் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் எல்லோருமே 'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று விட்டார்கள் என்று கூற வருகிறதா 'தினமலர்?'
அப்படி இருந்தால் பட்டியலை வெளியிட வேண்டியதுதானே! அந்த ஒரு மாணவனும் 'நீட்'டில் அதிக மதிப்பெண் பெற்றது எப்படி, அந்த மாணவனின் பின்னணி எப்படி அமைந்தது என்பதையும் இதே 'தினமலரில்' வெளியிடப்பட்டுள்ளதே!
கடந்த 2018-2019ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 படித்த ஜீவித்குமார் பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 548 மதிப்பெண் பெற்றுள்ளான். அப்போது 'நீட்' தேர்வு எழுதி 720-க்கு 190 மதிப்பெண் பெற்றார். அரசு மருத்துவக் கல்லூரியில் சேர, இன்னும் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதால் மீண்டும் 'நீட்' தேர்வை எழுத முடிவு செய்தார். அவரது நம்பிக்கையைப் பாராட்டி, ஆசிரியர்கள் நிதி திரட்டி, தனியார் பயிற்சி மய்யத்தில் ஓராண்டு சிறப்புப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தனர். இதையடுத்து இரண்டாம் முறையாக இந்த ஆண்டு 'நீட்' தேர்வை எழுதினார். அதில் 664 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார் என்கிறது 'தினமலர்'.
அரசுப் பள்ளியில் படித்த ஒரே ஒரு மாணவர் 'நீட்'டில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். அதுவும் முதல் ஆண்டில் போதிய மதிப்பெண் பெறாததால் இரண்டாம் ஆண்டு எழுதி இந்தளவு மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். ஆசிரியர்கள் நிதி திரட்டிக் கொடுத்து தனிப் பயிற்சி மய்யத்தில் ஓராண்டுப் படித்து இந்த அளவு மதிப்பெண்ணை அந்த மாணவர் பெற்றுள்ளார் என்பது எதைக் காட்டுகிறது?
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர் முதல் முறையாக 'நீட்' தேர்வு எழுதி அதிக மதிப்பெண்களைப் பெற முடியாது, பலரும் நிதி உதவி செய்து, தனியார்ப் பயிற்சி மய்யத்தில் சேர்ந்து ஓராண்டுப் படித்தால்தான் அதிக மதிப்பெண் பெற முடியும் என்பதை இதே தினமலரே ஒப்புக் கொண்டு விட்டதா இல்லையா?
அரசுப் பள்ளியில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எல்லா மாணவர்களுக்கும் இந்த வாய்ப்புக் கிடைக்குமா? அதற்குத் 'தினமலர்'கள் ஏற்பாடு செய்யுமா?
மற்ற இரு மாணவ - மாணவிகளான சிறீஜன், மோகனப் பிரியா ஆகியோர் தனியார் பள்ளிகளில் படித்தவர்கள். அந்த இருவரும் நாமக்கல்லில் ஒரு தனியார்ப் பயிற்சி மய்யத்தில் சேர்ந்து, ஓராண்டு படித்துதான் 'நீட்'டில் அதிக மதிப்பெண் பெற்றனர் என்ற தகவலையும் 'தினமலர்' தான் தன்னை அறியாமலேயே செய்தியாக வெளியிட்டுள்ளது.
ஒரு தகவலைத் தங்கள் வசதிக்கு ஏற்ப ஜோடனை செய்து வெளியிட்டு, மக்களின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவும் பித்தலாட்டத்தைப் பார்த்தீர்களா? இதில் இவர்கள் கை தேர்ந்தவர்கள் ஆயிற்றே! இத்தகைய ஒர் ஏட்டை தமிழர்கள் காசு கொடுத்து வாங்குகிறார்களே!
சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தின் அடிப்படையில் 'நீட்' நடத்தப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் படிக்கும் கல்வித் திட்டம் வேறு மாதிரியானது - வசதி வாய்ப்புகளும் குறைவு - அதுவும் கிராமப்புறப் பள்ளிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்!
கடந்த 2018-2019 மருத்துவக் கல்லூரி சேர்க்கை என்ன சொல்லுகிறது?
ஓராண்டுக் காத்திருந்து 'நீட்' பயிற்சி மய்யங்களில் சேர்ந்து படித்து 'நீட்' தேர்வு எழுதியவர்களில் -
அரசு மருத்துவக் கல்லூரிகளில் கிடைத்த இடங்கள் - 1277
தனியார்க் கல்லூரிகளில் கிடைத்த இடங்கள் - 557.
சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் கிடைத்த இடங்கள் - 611.
அவர்களுக்குத் தனியார்க் கல்லூரிகளில் கிடைத்த இடங்கள் - 283.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர் களுக்குக் கிடைத்த இடங்கள் வெறும் 27 தான். தனியார்க் கல்லூரிகளில் கிடைத்த இடங்கள் வெறும் 4 மட்டுமே!
உண்மைகள் இவ்வாறு இருக்க 'தினமலர்' பார்ப்பனக் கும்பல் திட்டமிட்ட வகையில் பொய்யை மைக்கூடாக்கி பித்தலாட்டமாகப் பேனாவை இந்த 2020லும் ஓட விடுகிறது என்றால் பார்ப்பனர் அல்லாதவர்களை -அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டோரை, கிராமப்புற ஏழை, எளிய மக்களை இன்னும் ஏறி மிதிக்கலாம் என்ற வஞ்சம் தானே இதன் பின்னணியில் கொத்து கொத்தாக படமெடுத்தாடுகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுப்ப வர்களைப் பார்த்து "வாயைப் பொத்து!" என்று சொல்லும் அளவுக்கு 'தினமலர்'கள் சிண்டு விறைத்து நிற்பது எப்படி? எந்தத் தைரியத்தில்? மத்தியில் அதிகாரத்தில் - மனுவாதக் கூட்டத்தின் கைகளில் அதிகாரம் இருக்கிறது என்கிற திமிர் தானே!
அதிகார மமதையில் ஆட்டம் போடலாம் என்று 'தினமலர்' வகையறாக்கள் தினவெடுத்து மனப்பால் குடிக்க வேண்டாம்!
"தோட்டத்துப் புடலங்காயா தமிழர் நாடு, கருஞ்சிறுத்தைகள் - கண் விழித்தால் தெரியும் சேதி!" என்ற புரட்சிக் கவிஞரின் வரிகள் நினைவில் இருக்கட்டும்.
இந்தியா முழுவதும் பார்ப்பனர் அல்லாதார் போராட்டக் களம் காணும் நிலையை உருவாக்குவோம்!
இது போதாது - இன்னும் துள்ளுங்கள்! துள்ளுங்கள்!! பெரும்பான்மையின மக்களுக்குச் சொரணை வரும் அளவுக்குத் துள்ளுங்கள்! துள்ளுங்கள்!! அதனை வரவேற்கிறோம்! வரவேற்கிறோம்!! வட்டியும் முதலுமாக ஒடுக்கப்பட்ட மக்கள் வரிப் புலியாய்க் கிளர்ந்து எழுவார்கள் என்பதில் அய்யமில்லை.
No comments:
Post a Comment