‘பூண்டோடு' ஒழிக்கப் பார்க்கிறார்களா?
வேளாண் திருத்தச் சட்டங்களால் விவசாயிகளின் விளை பொருட்களுக்குக் குறைந்த விலை உறுதியாகிறது: - நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர்.
இந்த சட்டங்களால் யாருக்கு விற்கவேண்டும் என்ற உரிமை விவசாயிகளுக்கு உள்ளதாம். உண்மையில் 'யாருக்கு' உள்ளதாம்? அந்தக் கார்ப்பரேட்டுகள் கூட்டணி வைத்துக்கொண்டு முடிவு செய்து, விவசாயிகள்மீது நிர்பந்தங்களை உண்டாக்கமாட்டார்களா?
பூண்டு, வெங்காயம் சாப்பிடாத பரம்பரையினருக்கு இது எல்லாம் எங்கிருந்து தெரியப் போகிறது?
‘பராக்' ‘பராக்'
அறிவிப்பா?
தமிழகத்தில் திரையரங்குகளைத் திறப்பது குறித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பார்: - அமைச்சர் கடம்பூர் ராஜூ.
பள்ளிகள் திறப்பதுபற்றி முதலமைச்சர் அறிவிப்பார்; திரையரங்குகள் திறப்பதுபற்றி முதலமைச்சர் அறிவிப்பார். எல்லாம் 'பராக்' 'பராக்'தானா? அறிவிப்பார்.... ஆனாலும், அறிவிக்கமாட்டார்!
மத்திய அரசின்
வரி ஏய்ப்பு?
தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய ஓ.பி.ரவீந்திரன் மனுமீது அக்டோபரில் 16 இல் தீர்ப்பு.
இராதாபுரம் தி.மு.க. வேட்பாளர் அப்பாவு தொடுத்த வழக்கில், வாக்குகள் எண்ணப்பட்டும் - தீர்ப்பு இதுவரை வெளிவரவில்லை. அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலும் வரப் போகிறது. இரவீந்திரனின் மனுமீது மட்டும் என்ன அவசரமோ! நல்ல தேர்தல் - நல்ல தீர்ப்பு. 'இரசிக்கலாம்!'
வேறு யார்?
ஜி.எஸ்.டி. நிலுவையை உடனடியாக அளிக்கக் கோரி மாநில அரசுகள் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன.
ஜி.எஸ்.டி. என்பது விற்பனை வரி என்றால், அந்த வரி பாக்கியை மாநிலங்களுக்கு அளிக்காததும் ஒரு வகையில் வரியை ஏமாற்றும் வேலைதானே!
கேட்டால் மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியில் கடன் பெற்றுக் கொள்ளலாமாம்! ஏன் மத்திய அரசே ரிசர்வ் வங்கியில் கடனாகப் பெறக் கூடாது? அதற்கான காரணம்பற்றி இன்று வெளிவந்த 'இந்து' (தமிழ்) ஏட்டின் சிறப்புக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசே கடன்களைப் பெற்றால், பன்னாட்டு மதிப்பீடு நிறுவனங்கள் இந்தியாவைத் தங்கள் தர வரிசையில் கீழ் இறக்கிவிடும் என்ற அச்சம்தானாம். ஏமாற்றும் தந்திரத்தில் நமது மத்திய அரசை அடித்துக் கொள்ள வேறு யார்?
பா.ஜ.க. என்றால் பரிசுத்தம்!'
நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப்ரே (பா.ஜ.க.) குற்றவாளி.
பா.ஜ.க. என்றால் பரிசுத்தம் என்று பொருள். நம்புங்கள் - மூச்சுவிடாதீர்கள்!
மல்லையாக்கள் அல்ல!
வீட்டை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுத்ததால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயி தற்கொலை.
அப்பாவி விவசாயி விஜய் மல்லையாக்களா - வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ? தப்பிப் பிழைக்க வேண்டுமானால், வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய் கடன் வாங்கவேண்டும். கொசுறு தொகையைக் கடன் வாங்கினால் வாழ்க்கையும் கொசுறுதான்.
No comments:
Post a Comment