வீரமங்கை மெஹபூபா முப்தி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 16, 2020

வீரமங்கை மெஹபூபா முப்தி!

பதினான்கு மாதங்களுக்குப் பிறகு, ஜம்மூ-காஷ்மீர் அரசாங்கம் தனது காவலை ரத்து செய்ததை அடுத்து பொது பாதுகாப்புச் சட்டத்தின் (பிஎஸ்ஏ) கீழ் சிறை வைக்கப்பட்டிருந்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி விடுதலை செய்யப்பட்டார்.


விடுவிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட்ட குரல் பதிவுச் செய்தியில், ஜம்மு-காஷ்மீர் மக்கள்மீது ஆகஸ்ட் 5ஆம் தேதி நடந்த “கொள்ளை மற்றும் அவமானத்தை” மறக்க முடியாது என்றும், ஜம்மு மற்றும் ஜம்முவிற்கு வெளியே  பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளையும் விடுவிக்கக் கோரியதாகவும் அவர் கூறினார்.


”புது டில்லி சட்டவிரோதமாகவும், ஜனநாயக விரோதமாகவும், நம்மிடமிருந்து பறித்ததை நாம் திரும்பப் பெற வேண்டும். இது தவிர, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்யும் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான போராட்டத்தை நாம் தொடர வேண்டும். இந்த பாதை எளிதானது அல்ல என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் இந்த பாதையைக் கடக்க தைரியமும், உறுதியும் நமக்கு உதவும் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் அந்த செய்தியில் கூறியுள்ளார்.


தடுப்புக்காவல் ரத்து செய்யப்பட்டு விடுதலை ஆகியிருக்கும், மெஹபூபா முப்தி வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசுவார் எனத் தெரிகிறது. உள்துறை செயலாளர் ஷலீன் கப்ரா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவில், “ஜம்மு-காஷ்மீர் அரசு பொது பாதுகாப்புச் சட்டம், 1978 இன் பிரிவு 19 (1) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, திருமதி மெஹபூபா முப்தியின் தடுப்புக்காவல் உத்தரவை உடனடியாக ரத்து செய்கிறது” என்று தெரிவித்திருந்தார்.


முப்தியின் மகள் இல்திஜாவை ஊடகவியலாளர்கள் தொடர்பு கொண்ட போது, தனது தாயின் விடுதலையை அவர் உறுதிப்படுத்தினார்.  “திருமதி முப்தியின் சட்டவிரோத தடுப்புக்காவல் இறுதியாக முடிவுக்கு வருவதால், இந்த கடினமான காலங்களில் என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று அவர் தனது தாயின் சுட்டுரை தளத்தில் இருந்து பதிவு செய்துள்ளார்.


 கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு தகுதி நீக்கத்திற்கு முன்பாக அம்மாநிலத்தின் அனைத்து முக்கிய எதிர்கட்சி தலைவர்கள்,  அமைப்புகளின் தலைவர்கள் என அனைவருமே கைதுசெய்யப்பட்டு வீட்டுச்சிறையிலும் தனிமைச் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.


 இதில் பல முக்கியத் தலைவர்களை, போராட்டம் நடத்த மாட்டோம் என்று உறுதியளித்தால் விடுவிக்கத் தயார் என்று மத்திய அரசின் உள்துறை சார்பில் விடுதலைக்கான சில நிபந்தனைகள் விதித்த போது அவர்கள் அதை எற்க மறுத்துவிட்டனர்.


பா.ஜ.க. கூட்டணி சார்பில் கடைசியாக ஒருங்கிணைந்த ஜம்மு-காஷ்மீர் முதல்வராக இருந்த மெஹபூபா முப்தி இரண்டு முறை தனிமைச்சிறைக்கு அனுப்பப்பட்டார். அவரது மகள் கூட அவரைத் தொடர்பு கொள்ள முடியாத படி சிறைவாசம் மிகவும் கடுமையாக இருந்தது, இந்த இடைவெளியில் அய்ந்து முறை மத்திய உள்துறை அமைச்சகம் போராட மாட்டேன் என்று எழுதிக்கொடுத்தால் நீங்கள் விடுதலை செய்யப்படுவீர்கள் என்று நிபந்தனை விதித்தது. ஆனால் அதற்கு அவர் மறுத்து "ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கான எனது போராட்டம் எனது மரணத்தில் முடியும்" என்று உறுதியாகக் கூறிவிட்டார் - அந்த வீராங்கனை! ராணுவ கண்காணிப்புக் கொண்ட விருந்தினர் மாளிகையில்  சிறைவைத்தனர். அவருக்கான உணவைக் கூட அதிகாரிகள் கூறும் நேரத்தில் தான் கொடுக்கவேண்டும் என்ற கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன, அவருக்கு வரும் கடிதங்கள் அனைத்தும் அதிகாரிகள் பிரித்துப் படித்த பிறகுதான் முப்தியின் கைகளுக்குச் சென்று சேரும்; அவரது மகளிடம் கூட அலைப்பேசியில் பேசமுடியாமல் நெருக்குதல் கொடுத்தனர்.


 இருப்பினும் அவர் எதற்கும் அஞ்சாமல் "எம் மக்களுக்காக அனைத்தையும் தாங்கிக் கொள்வேன், மீண்டும் வெளியே வரும் போது மக்களோடு சேர்ந்து மீண்டும் பழைய வாழ்க்கையை மீட்போம்" என்று கூறினார். இந்த நிலையில் பன்னாட்டு அமைப்புகள் இந்தியாவில் வீட்டுச்சிறையில் உள்ள தலைவர்கள் குறித்து அய்க்கிய நாடுகள் அவையில் குரல் எழுப்புவோம் என்று சமீபத்தில் கூட்டாக அறிக்கை விடுத்ததை அடுத்து வேறு வழியிலலாமல் அவரை விடுதலை செய்துள்ளது மத்திய அரசு.


ஒரு இஸ்லாமிய சமுதாயத்தில், கொண்ட கொள்கைக்காக கிஞ்சிற்றும் தலை சாயாமல் நிமிர்ந்து நின்ற இந்த வீராங்கனை போற்றுதலுக்கு உரியவரே!


சர்வ அதிகாரம் கொண்ட பாசிசத்தை எதிர்கொள்ள முதுகெலும்போடு நின்று வெற்றி கொண்ட வீரமங்கையை - பாராட்டுகிறோம்!


No comments:

Post a Comment