* பாபர் மசூதி இடித்த குற்றவாளிகள் அனைவரும் விடுதலையா?
* சி.பி.அய்.மீதும் - நீதிமன்றத்தின்மீதும் வைத்த நம்பிக்கை என்னாவது?
* பாபர் மசூதியை இடித்தது மாபெரும் குற்றச் செயல் என்று உச்சநீதிமன்றம் சொன்ன பிறகும்- குற்றவாளிகள் தண்டிக்கப்படாதது ஏன்?
நாடு மதவாத வன்முறை சக்திகளிடம் அடைக்கலமா?
அண்ணல் காந்தியாரின் பிறந்த நாளில் சிந்திப்போம்!
பாபர் மசூதி இடித்த குற்றவாளிகள் அனைவரும் விடுதலையா? சி.பி.அய்.மீதும் - நீதிமன்றத்தின்மீதும் வைத்த நம்பிக்கை என்னாவது? பாபர் மசூதியை இடித்தது மாபெரும் குற்றச் செயல் என்று உச்சநீதிமன்றம் சொன்ன பிறகும் - குற்றவாளிகள் தண்டிக்கப்படாதது ஏன்? அடுத்த திட்டம் மதுராவும் - காசியுமாம்! நாடு மதவாத வன்முறைச் சக்திகளிடம் அடைக்கலமா? அண்ணல் காந்தியாரின் பிறந்த நாளில் சிந்திப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஆதாரப்பூர்வ அறிக்கை வருமாறு:
1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் - இந்திய வரலாற்றின் மதச்சார்பின்மைக்குக் கரைபடியச் செய்த மிக மோசமான வரலாற்றுக் கருப்பு நாளாகும். இதன் விளைவாக இந்தியா முழுவதும் ஏற்பட்ட மதக் கலவரங்களும், வன்முறைகளும் ஏற்படுத்திய உயிர்ச் சேதமும், பொதுச் சொத்து நாசமும் மிக அதிகமானவை மட்டுமல்ல - அநாகரிகத்தின் அச்சமற்ற வெளிப்பாடாக இந்த இடிப்பு அமைந்ததின் விளைவாக, அரசமைப்புச் சட்டத்தின் அடித்தளத்தையே நொறுக்குவதற்கு அச்சாரமிடப்பட்ட நாளாக அந்நாள் இன்றும் என்றும் கருதப்படும்.
இந்நிலையில் இதில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள்மீது 28 ஆண்டுகளுக்குப் பிறகு - அதுவும் ஜஸ்டிஸ் லிபரான் கமிஷன் போன்றவைகள் அறிக்கைகளைக் கொடுத்து பல ஆண்டுகளுக்குப் பிறகு சிவில், கிரிமினல் வழக்குகளான இவ்விரண்டு வழக்குகளில் சிவில் வழக்கை விசாரித்து முடித்து, உச்சநீதிமன்றம் மற்ற வழக்குகளையெல்லாம் விட முன்னுரிமை கொடுத்து நாள்தோறும் விசாரித்து, இராமர் கோவில் கட்ட இடம் தர ஆணையிட்டது; அதுபோல வேறு இடத்தில் மசூதி கட்டவும் இடம் தர அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
விமர்சனத்தில் சிக்கிய ஒன்றாகவே அமைந்தது!
இராமர் பிறந்த இடம்தான் அது என்பதற்கு வெறும் நம்பிக்கைதான் அடிப்படை என்பதை அந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறிப்பிட்டதே விமர்சனத்தில் சிக்கிய ஒன்றாகவே அமைந்தது!
அத்தீர்ப்பின் அமர்வில், தீர்ப்பு தந்து ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி, ஒரு சில மாதங்களில் மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டு, பதவி ஏற்றதும் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியது!
பாபர் மசூதி இடிப்பு சட்டத்தை மீறிய செயல்: உச்சநீதிமன்றம்
சென்ற ஆண்டு (2019) நவம்பர் 8 ஆம் தேதி இராமன் கோவில் கட்ட இட ஒதுக்கீடு செய்து உச்சநீதிமன்ற அமர்வு அளித்த அத்தீர்ப்பில்கூட, பாபர் மசூதி இடித்ததைக் குறிப்பிட்டு, மிக மோசமான சட்டத்தை மீறியச் செயல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில்தான் 30.9.2020 அன்று லக்னோ சி.பி.அய். தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் (தனி ஒரு நீதிபதி) ‘‘பாபர் மசூதி இடித்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் (32 பேரும்) விடுதலை; அவர்கள்மீது குற்றம், ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. சமூக விரோதிகள்தான் அதை இடித்துவிட்டனர்; அப்படி நடக்காமல் இருக்கத்தான் இந்தத் தலைவர்களும் (குற்றம் சுமத்தப்பட்டவர்கள்)முயற்சி செய்துள்ளார்கள்; எனவே இவர்கள் சதி செய்து அதன் பிறகே, பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்பட்டது என்பதற்கான போதிய ஆதாரங்கள், சாட்சியங்கள் இல்லை. சரியான வீடியோ சாட்சியங்கள் தாக்கல் செய்யப்படவில்லை'' என்று 2000 பக்கத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது!
லிபரான் கமிஷன் விசாரணையில் திட்டமிட்ட சதிப்பற்றித் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கமிஷனின் அறிக்கை சட்ட வலிமை உடையதாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால், நியாய வலிமைகூடவா இருக்கக்கூடாது என்பதே நடுநிலையாளர்கள், பொதுவானவர்களின் கேள்வியாகும்.
சி.பி.அய். சார்பில் வலுவான சாட்சியங்கள் - தரவுகள் வைக்கப்படாதது ஏன்?
உச்சநீதிமன்றம் சென்ற ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து தனது கடும் கண்டனத்தை அத்தீர்ப்பில் பதிவு செய்த பிறகு, ஓராண்டு நடந்த வழக்கு விசாரணையில், சி.பி.அய். சார்பில் போதிய வலுவான சாட்சியங்கள், தரவுகள் வைக்கப்படாதது ஏன் என்ற கேள்வி எழாதா?
பொதுவாக மாநிலங்களில் வழக்குகள் வரும்போது உடனடியாக ‘சி.பி.அய்.க்கு மாற்றுங்கள்' என்ற கோரிக்கை வைப்பதன் தத்துவம், மற்ற விசாரணைகளைவிட அது நடுநிலை தவறாமல், எதையும் துல்லியமாகக் கண்டறிந்து தரவுகளை ஒழுங்குபடுத்தி, குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்தி, தண்டனை பெற்றுத்தரும் என்பதால்தானே!
இந்த வழக்கு பிரபலமானவர்கள், பெரும் பெரும் அரசியல் தலைவர்கள், மேனாள் உள்துறை அமைச்சர், மத்திய அமைச்சர், முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் முதலியோர் ஈடுபட்ட வழக்கு மட்டுமல்ல, ஊடகங்களில், தொலைக்காட்சிகளில் டிசம்பர் 6 நிகழ்வுப் பதிவுகள் பலமான பதிவுகளாக ஒளிபரப்பப்பட்டன என்பது உலகறிந்ததாகும்.
அப்படி இருந்தும், ஆதாரங்கள் தரப்படவில்லை என்றால், அதற்கு என்ன முக்கிய காரணம்? உலகறிந்த கேள்விகளும் - பதிலும் அதிலேயே அடங்கியுள்ளன!
அன்றைய உ.பி. முதலமைச்சர் கல்யாண்சிங், - கரசேவை நடந்தது உண்மைதான் என்றெல்லாம் சொன்னது பதிவான செய்திகள் அல்லவா?
உமாபாரதியின் ஒப்புதல் வாக்குமூலம்!
குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ஒருவரான உமா பாரதி அவர்கள், ‘‘நான்தான் இடித்தேன் என்பதை பெருமையுடன் கூறுகிறேன். அதற்குத் தூக்குத் தண்டனை தந்தாலும் ஏற்பேன்'' என்ற வாக்குமூலம் எல்லாம்கூட - பயன்படாத சாட்சியங்கள் என்றால், என்னே விசித்திரம்!
அன்றைய மத்திய அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ், நாடாளுமன்றத்தில், ‘‘நாங்கள் இடித்தோம்; உங்களால் என்ன செய்ய முடியும்?'' என்று சவால் விடவில்லையா?
அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த அய்.பி.எஸ். அதிகாரி, லிபரான் கமிசன் முன்பு ஆஜராகி, ‘‘இடிப்பதற்குக் கரசேவகர்களுக்கு உத்தரவிட்டார்'' என்று சொல்லவில்லையா?
உள்துறையின் முன்னாள் செயலாளர் மாதவ் கோட் போலே கூறுகையில், ‘‘உளவுத்துறையின் அறிக்கை, பாபர் மசூதியை இடிக்க சதி நடக்கிறது என தெளிவாக கூறப்பட்டுள்ளது. உ.பி.யில் கல்யாண் சிங் ஆட்சியை கலைத்திட வேண்டும் என்ற என் பரிந்துரையை நரசிம்ம ராவ் அரசு ஏற்கவில்லை. அதன்பிறகு எனது பதவியை ராஜினாமா செய்தேன். இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவேண்டும். உரிய முறையில் ஆவணங் களைத் தராத சி.பி.அய். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
‘‘பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சி யளிக்கிறது'' என உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.பி.சாவண்ட் கருத்து தெரிவித்துள்ளார்.
தாமதிக்கப்பட்ட நீதி இது; ஆம், 28 ஆண்டுகள் கழித்து - அதுவும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சிலர் இறந்தும் போன நிலையில், தீர்ப்பு - அதுகூட உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக காலக்கெடு நிர்ணயித்து அதற்குள் வழக்கு முடிக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்ட பிறகு வந்த தீர்ப்பு - மறுக்கப்பட்ட நீதியாகவே ஆகிவிட்டது என்பது வேதனைக்குரியது;
'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு
பெருமிதம் பொங்க எழுதியது!
1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் எதிரொலி யாக நாடு முழுவதும் கொலை, கலவரங்கள் நடந்து கொண்டிருந்தபோது, தமிழ்நாடு மட்டும்தான் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த ஒரு மாநிலமாகக் காட்சியளித்தது; நம் மாநிலத்து காவல் படை, பிற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது. அப்போது ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டில் ஒரு கட்டுரை வெளியாகியது; ''இது திராவிட பூமி! பெரியார் பண்படுத்திய மண் ஆனதால், இங்கு மதவெறிக்கு இடமில்லை'' என்று பெருமிதம் பொங்க எழுதியிருந்தது - இப்போதும் நினைவூட்டத்தக்க ஒன்றாகும்!
இத்தீர்ப்பின் விளைவு, வடநாட்டில் வருங்காலத்தில் எப்படிப்பட்ட விளைவுகளை உருவாக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மீண்டும் மதவெறித் தீயைப் பரப்பி,
அரசியல் குளிர்காய - லாபம் அடைய...
சமூக விரோதிகள் செய்தார்கள் என்று கூறப்பட் டாலும், அதேநேரத்தில், ‘‘காசி, மதுரா எங்கள் அஜெண்டாவில் உள்ளது'' என்று கூறி, தீர்மானம் நிறைவேற்றும் செய்திகள் வருவது மிகவும் கவலை யளிப்பதாகவும், மீண்டும் மதவெறித் தீயைப் பரப்பி, அரசியல் குளிர்காய - லாபம் அடைய மதவாத சக்திகள் தங்களை ஆயத்தப்படுத்தும் நிலையில், இத்தீர்ப்புகள் அதற்கு உரமிடுவது போல் ஆகும் ஆபத்தாகாதா என்பதை நாடும், நல்லவர்களும், சட்டம் - ஒழுங்கு, பொது அமைதியில் கவலை உள்ளவர்கள் அனைவரும் சிந்திக்கவேண்டும்!
அண்ணல் காந்தி பிறந்த நாளில் (அக்.2) இதைச் சிந்திப்போம்!
சென்னை தலைவர்,
2.10.2020 திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment