அராஜகத்தின் வேட்டைக்காடா உ.பி. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 2, 2020

அராஜகத்தின் வேட்டைக்காடா உ.பி.

அராஜகத்தின் வேட்டைக்காடா உ.பி.?


உத்தரப்பிரதேசத்தில் சாமியார் ஆதித்தியநாத் தலைமை யிலான பிஜேபி ஆட்சி அராஜகத்தின் வேட்டைக்காடாகி விட்டது. வன்முறை அன்றாட பொழுதுபோக்காகி விட்டது. சங்பரிவாரின் சோதனைக்கூடம் இது தான் என்று விளங்கும்படி ஆகி விட்டது. தாழ்த்தப்பட்டவர்கள் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்கள் பாலியல் வேட்டைக்குப் பலியாவது பழகிப் போன ஒன்றாகி விட்டது.


உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் நகரில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட நிலையில், பல்ராம்பூர் மாவட்டத்திலும் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு உள்ளார். ஹத்ராஸ் பகுதியில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் ஏற்படுத்திய அதிர்வலை அடங்குவதற்குள் பல்ராம்பூரில் அடுத்த சம்பவம் நடந்துள்ளது.


பல்ராம்பூரில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பம் வாங்கிவிட்டு வீட்டுக்குத் திரும்பியபோது 4 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அதன்பின் அந்தப் பெண்ணை அவரின் வீட்டின் முன் அந்தக் கும்பல் வீசிவிட்டுத் தப்பியது.


அந்தப் பெண்ணின் கால்கள் உடைக்கப்பட்டு, இடுப்பு எலும் புகளும் உடைக்கப்பட்டதாக பெண்ணின் தாயார் குற்றம் சாட்டினார். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். அந்தப் பெண்ணின் உடலும் பெற்றோர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, நேற்று எரியூட்டப்பட்டது.


"பெண் குழந்தைகளைக் காப்போம் என்பது பாஜகவின் முழக்கம் அல்ல. அதில் உண்மைகளை மறைப்போம்; ஆட்சியைக் காப்போம் என்பதுதான் கோஷம்” எனக் கண்டனம் தெரிவித்து 'பல்ராம்பூர் ஹாரர்' எனும் ஹேஷ்டேக்கை ராகுல் பதிவிட்டுள்ளார்.


காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி   தமது சுட்டுரையில்  பதிவிட்ட  கருத்தில், “ஹத்ராஸில் நடந்த கொடூரமான சம்பவம், பல்ராம்பூரிலும் நடந்துள்ளது. தாழ்த்தப்பட்ட பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கால்களும், இடுப்பு எலும்பு களும் முறிக்கப்பட்டுள்ளன. ஆசம்கார்க், பாக்பத், புலந்த்சாஹரில் பெண்கள் காட்டுமிராண்டித்தனமாக கொல்லப்பட்டார்கள்.


உத்தரப் பிரதேசத்தில் காட்டாட்சி எல்லையில்லாமல் பரவுகிறது. சட்டம் - ஒழுங்கு என்பது வெறும் வார்த்தையிலும், விளம்பரத்திலும் மட்டுமே இருக்கிறது. உத்தரப்பிரதேச முதல்வர் தனது நம்பகத் தன்மையைக் காப்பாற்றும் நேரம் இது. முதல்வரிடம் இருந்து நம்பகத் தன்மையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தமது சுட்டுரையில் பதிவிட்ட கருத்தில், “உத்தரப் பிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கு உயிருடன் இருக்கிறதா அல்லது செத்துவிட்டதா? அரசமைப்புச் சட்டப்படி நடக்கும் அரசா அல்லது கிரிமினல்களுக்காக நடக்கும் அரசா? ஹத்ராஸ், பல்ராம்பூர் சம்பவத்தைத் தொடர்ந்து ஏன் இன்னும் முதல்வர் ஆதித்தியநாத் பதவியை ராஜினாமா செய்யவில்லை?” எனக் கேள்வி எழுப்பி யுள்ளார்.


உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17- வயது சிறுமியை, கடந்த 2017ஆம் ஆண்டு, பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகார் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்ட பாதிக் கப்பட்ட சிறுமியின் தந்தை, மர்மமான முறையில் உயிரிழந்தார்.  இதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்திய நாத்தின் வீட்டு முன்பு, பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரது தாயும் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றனர். இதனையடுத்து குல்தீப் சிங் கைது செய்யப்பட்டு  ஓராண்டாக சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.  இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உன்னாவ் சிறுமி பயணித்த காரின்மீது லாரி ஒன்று மோதியது. இதில் சிறுமிக்கும், அவரது வழக்குரைஞருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் தீவிர மருத்துவச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக் கப்பட்டனர். மேலும், சிறுமியுடன் பயணித்த அவரின் இரண்டு பெண் உறவினர்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பெண், `தன்னை கொலை செய்வதற்கான முயற்சிதான் அந்த சாலை விபத்து` என்று புகார் அளித்தார்.


உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர்  சதீஷ் சர்மா என்னும் வழக்குரைஞர், இவர் மாநில பாஜகவின் முக்கிய பிரமுகராகவும் உள்ளார்.  இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் வழக்குரைஞர் ஒருவரை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன் கொடுமை செய்துள்ளார். அதைப் படமாக எடுத்துள்ளார். இதைக் காட்டி பலமுறை அந்தப் பெண் வழக்குரைஞரை பாலியல் வன் கொடுமை செய்து மிரட்டியுள்ளார்.  இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கச் சென்ற போது காவல்துறையினர் அந்தப் பெண் வழக்குரைஞர் மீதே வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் அவர் குறித்து பல்வேறு தவறான தகவல்களையும் சமூகவலை தளத்தில் பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் பெரும் அரசியல் வாதிகளின் தலையீட்டினால் தனக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறி அப்பெண் வழக்குரைஞர் சாலை நடுவே அமர்ந்து தன்னுடைய தலையை மொட்டை அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடு பட்டார். இவ்விவகாரம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.  மொட்டை அடித்துக் கொண்ட அந்த பெண் வழக்குரைஞர் ஊடகவியலாளர்களிடம் தனக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து பேட்டியளித்தார்.   ஊடகவியலாளர் சந்திப்பின் போதும் காவல் துறையினர் அங்குவந்து அவ்வழக்குரைஞரை மிரட்டி அவ் விடத்தில் இருந்து வெளியேற்றினர்.


இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான வக்கிரப் போக்கு நாளும் வளர்ந்து வருவது அன்றாடச் செய்தியாகி விட்டது.


அதிலும் குறிப்பாக பிஜேபி ஆளும் மாநிலங்களிலும், அதிலும் முக்கியமாக உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை என்பது தலைக்கால் புரியாமல் துள்ளிக் குதிக்கிறது.


இதுதான் இந்து ராஜ்ஜியம் - ராம்ராஜ்ஜியம் புரிந்து கொள்வீர்!


No comments:

Post a Comment