இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?
அய்.நா.வில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கருத்துக்குக் கடும் எதிர்ப்பு
நியூயார்க், அக்.4 இந்தியாவில் பெண்கள் பாது காப்பாக இருக்கிறார்களா? அய்.நா.வில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கருத்துக்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசியில் 19 வயதான தாழ்த்தப்பட்ட பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை யடுத்து அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் உயிரிழந்தார். அவரது உடலை உரிய முறையில் மரியாதையோடு அவர்கள் வழக் கப்படி புதைப்பதற்கு கூட அனுமதிக்காமல் சாலை ஓரத்தில் அவசர அவசரமாக காவல் துறையினர் எரித்துவிட்டனர்
ஹத்ராஸ் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குக் கண்டனம் தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த சூழலில் அய்க்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கான மாநாட்டில் இந்தி யாவின் சார்பில் மத்திய பெண்கள் மற்றும் குழந் தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்றார்.
அப்போது அவர் கூறுகையில், ‘‘கரோனா நோய்த்தொற்று காலத்தில் போதிய சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பெண்கள் நலன் காக்க இந்திய அரசு தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றிற்கு முக்கியத் துவம் அளிக்கப்படுகிறது. பணியிடங்களில் பெண் களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு, குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் ஆகியவற்றிற்கு கடுமையான தண்டனைகள் கிடைக்கும் வகையில் இந்தியாவில் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இதன்மூலம் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது” என்று கூறியிருந்தார்
சில வாரங்களில் மட்டும் உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் எட்டுக்கும் மேற்பட்ட கூட்டு பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில் சமூகத்தில் கீழ் நிலையில் இருக்கும் பெண்கள் மீதும், குழந்தைகள் மீதான பாலியல் வக்கிரங்கள் இந்தியாவில் அதிகரித்து காணப்படுகின்றன. இப்படியொரு சூழலில் ஸ்மிருதி இரானியின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இறந்து போன பெண்களுக்கு தீர்வு கிடைக் காமல் குடும்பத்தினர் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறு எப்படி பேசலாம் என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர். ஸ்மிருதி இரானி உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஆவார். அதேசமயம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருக்கிறார்.
இந்த சூழலில் உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவத்திற்கு ஸ்மிருதி இரானி குரல் எழுப்பாமல் மவுனம் காப்பது ஏன்? என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அதன்பின்னர் குற்றவாளிகள் நிச்சயம் தூக்கிலிடப்படுவர் என்று எதிர்பார்ப்ப தாக ஸ்மிருதி இரானி தனது கண்டனத்தை பதிவு செய்தார். இப்படி கொந்தளிப்பான சூழல் இந்தியாவில் நிலவும் சூழலில், அய்.நா.வில் நமது பெருமைகளை அடுக்கிக் கூறுவது எந்த வகை யில் நியாயம்? என்று கண்டித்து பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக ட்விட்டரில் ஒரு பெண், ‘‘எங்களுக்கு பணியிடங்களில் பாலின சமத்துவம் மட்டும் போதாது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகளும் தேவை. ஹத்ராஸ் சம்பவம் மனிதத்தன்மை அற்ற செயல். ஒரு பெண் அரசியல்வாதியாக பெண்களை பாதுகாக்கும் வகையில் சட்டங்களை மேலும் கடுமையாக்க ஸ்மிருதி இரானி முன்வர வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை, அவ மானமாக இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஹத்ராஸ் சம்பவத்திற்கு குரல் கொடுக் காமல் அய்.நா.வில் போய் குரல் கொடுப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை என்று சிலர் பதிவிட்டுள்ளனர்.
இதே அமைச்சர் தான் 2013 ஆம் ஆண்டு நடிகராக இருக்கும் போது நிர்பயா என்ற புனைப்பெயர் சூட்டப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்து இறந்த போது தலைவிரி கோலமாக மேக் அப் கலையாமல் டில்லி சாலையில் போராட்டம் நடத்திக்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்போது இவர் பெண்கள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக கேபினெட் தகுதியில் உள்ளார். இவர் முன்னின்று பொறுப் பேற்கவேண்டிய பாலியல் வன்கொடுமை நிகழ்வு களை கண்டுகொள்ளாமல் இங்கே எல்லாம் நன்றாக உள்ளது என்று அய்க்கிய நாடுகள் அவையில் பேசியுள்ளார்.
இது எப்படி உள்ளதென்றால் 2009 ஆம் ஆண்டு ஈழப்படுகொலை நடந்து முடிந்த பிறகு பலத்த எதிர்ப்பிற்கு இடையே அய்க்கிய நாடுகள் அவையில் பேசிய ராஜபக்சே சிறிலங்காவில் தமிழர்கள் அனைவரும் அமைதியாக சுதந்திர மாக வாழ நாங்கள் வழிவகை செய்துள்ளோம் என்று கூறியதைப் போன்று உள்ளது.
ஸ்மிருதி இரானிக்குக்
காங்கிரஸ் கண்டனம்!
அய்க்கிய நாடுகள் அவையில் உண்மையை மறைத்துப் பேசிய ஸ்மிருதி இரானியை எதிர்த்து காங்கிரசார், ஸ்மிருதி இரானியின் காரை மறித்து தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராசியில் 19 வயது தாழ்த்தப்பட்ட பெண் கூட்டு பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து வாராணசியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் காரை மறித்து காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வாரா ணசியில் விவசாயிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாட ல் நிகழ்ச்சியில் பங்கேற்க தனது காரில் சென்றார். அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் ஹாத்ராசியில் கூட்டு பாலியல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென ஸ்மிருதி இரானியின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப்பிரதேச அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பிய அவர்கள், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் முழக்கமிட்டனர்.
இசட் பிளஸ் பாதுகாப்பு கொண்ட கேபினெட் அமைச்சரையே பொதுமக்களோடு காங்கிரசாரும் சேர்ந்து, சென்றுகொண்டு இருக்கும் காரை வழிமறித்து போராட்டம் நடத்திய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment