டாக்டர் கோபாலகிருஷ்ணன் படத்திறப்பு - இரங்கல் நிகழ்வு என்பது நன்றி உணர்ச்சிக் காட்டக் கூடிய ஒன்றே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 19, 2020

டாக்டர் கோபாலகிருஷ்ணன் படத்திறப்பு - இரங்கல் நிகழ்வு என்பது நன்றி உணர்ச்சிக் காட்டக் கூடிய ஒன்றே!

பெரியார் கல்வி நிறுவனங்களில் ஓரிடத்திற்கு டாக்டர் கோபாலகிருஷ்ணன் பெயர் சூட்டப்படும்!


படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வில் தமிழர் தலைவர் அறிவிப்பு!



சென்னை, அக்.19- இந்தியன் வங்கி மேனாள் தலைவர் மறைந்த கோபாலகிருஷ்ணன் அவர்களுடைய பெயர் என்பது அது சரித்திரத்தில் இருக்கும்; அவருடைய பழிகள் போக்கப்படும். அதற்கு அடையாளமாகத்தான், பெரியார் கல்வி நிறுவனங்களில் உள்ள ஓரிடத்திற்கு கோபாலகிருஷ் ணன் அவர்களுடைய பெயர் சூட்டப்படும் என்று திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்கள் தமது இரங்கலுரையில் குறிப்பிட்டார்.


மறைந்த கோபாலகிருஷ்ணன்


படத்திறப்பு - இரங்கலுரை


நேற்று (18.10.2020) முற்பகலில்  நடைபெற்ற இந்தியன் வங்கி மேனாள் தலைவர் மறைந்த கோபாலகிருஷ்ணன் அவர்களின் படத்தினை காணொலி காட்சிமூலம் திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்   இரங்கலுரையாற்றினார்.


அவரது இரங்கலுரை வருமாறு:


புகழஞ்சலி நிகழ்வின் தலைவர்


வேந்தர் விசுவநாதன்


மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்த வராகிவிட்ட மிகப்பெரிய எடுத்துக்காட்டான ஒரு வள்ளல், கல்வி வள்ளல், சிறப்பான கடமை வீரர், நாட்டின் வளர்ச் சிக்காகத் தன்னுடைய வளர்ச்சியை மெழுகுவத்திபோல அழித்துக் கொண்டவர்; ஒரு மாமேதை; மாமனிதர்இந்தியன் வங்கி மேனாள் தலைவர் அருமை டாக்டர் திரு. எம்.கோ பாலகிருஷ்ணன் அவர்களுடைய நினைவேந்தல் நிகழ்ச் சிக்கு புகழஞ்சலி நிகழ்ச்சிக்குப் பொருத்தமான தலைவராக அமைந்துள்ள வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியின் வேந்தர் அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய அருமை சகோதரர் டாக்டர் ஜி.விசுவநாதன் அவர்களே,


'சட்டக்கதிர்' நிறுவன ஆசிரியர்


வி.ஆர்.எஸ்.சம்பத்


இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, மிகச் சிறப்பான அறி முகத்தோடு, யார் யாரெல்லாம் டாக்டர் கோபாலகிருஷ் ணன் அவர்களிடம் மிக நெருக்கமாகவும், அன்போடும் பழகினார்களோ, அவர்களையெல்லாம் தொடர்பு கொண்டு அழைத்து, ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக இந்தப் புகழஞ்சலி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்குக் காரண மான, 'சட்டக்கதிர்' நிறுவன ஆசிரியரும், சிறந்த தமிழறி ஞரும், பொருளாதார மேதையுமான அன்பிற்குரிய டாக்டர் வி.ஆர்.எஸ்.சம்பத் அவர்களே,


கே.எஸ்.அழகிரி- ஜெகத்ரட்சகன் எம்.பி.,


இந்நிகழ்வில் கலந்துகொண்டு இங்கே சிறப்பாக அய்யா கோபாலகிருஷ்ணன் அவர்களுடைய தொண்ட றத்தைப்பற்றி  மிக விளக்கமாக உரையாற்றவிருக்கின்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறப்புமிகு தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களே,


பாரத் பல்கலைக் கழக வேந்தர் அன்பிற்குரிய அருமைச் சகோதரர் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., அவர்களே,


மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சிறந்த மூத்த வழக்குரைஞரும், சட்ட வல்லுநருமான அருமைச் சகோதரர் மானமிகு சண்முகசுந்தரம் அவர்களே,


மிகச் சிறந்த பொருளாதார நிபுணரும், லீ மெரிடியன் விடுதி குழுமத்தின் நிறுவன தலைவரும், பேராசிரியருமான டாக்டர் பழனி ஜி.பெரியசாமி அவர்களே,


இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பாக உரையாற்றிய வி.ஜி.பி. நிறுவனங்களின் தலைவர் அன்பிற்குரிய அய்யா டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்களே,


AMET  பல்கலைக் கழக வேந்தர் அன்பிற்கும், பாராட் டிற்கும் உரிய சகோதரர் டாக்டர் நா.சே.இராமச்சந்திரன் அவர்களே,


இந்தியன் வங்கியின் முன்னாள் செயல் உறுப்பினர் அய்யா திரு.ஜி.ஆர்.சுந்தரவடிவேலு அவர்களே, நிர்வாக ஆலோசகர் வி.முரளி அவர்களே,


இறுதியில் நன்றியுரை கூறவிருக்கின்ற நம்முடைய குடும்பத்தைச் சார்ந்த அருமைச் சகோதரர் டாக்டர் கே.காந்தராஜ் அவர்களே,


காணொலிமூலமாக இங்கே சிறப்பாக அவருக்கு இதய அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கக்கூடிய அருமை சான்றோர் பெருமக்களே, உலகம் முழுவதும் இந்நிகழ் வைப் பார்த்து, கேட்டுக் கொண்டிருக்கக் கூடிய பெரியோர் களே, நண்பர்களே, தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். எத்தனையோ நிகழ்ச்சிகளில், மகிழ்ச்சிகர மாக நாம் சந்தித்திருக்கின்றோம், இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்ற அறிஞர்கள், தலைவர்கள், தொழிலதி பர்கள் எல்லோரும்.


நன்றி உணர்ச்சியைக் காட்டக் கூடிய


ஒரு புகழஞ்சலி


ஆனால், இந்நிகழ்ச்சி, நமக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய நிகழ்ச்சியல்ல. ஆனால், அதேநேரத்தில், ஒரு மனநிறை வைத் தரக்கூடிய நிகழ்ச்சியாகும். காரணம், இது வெறும் புகழஞ்சலி அல்ல. ஒவ்வொருவரும் நாம் எந்த வகையிலோ கடமைப்பட்டு இருக்கிறோம் என்று சொல்லக்கூடிய அளவிலே, நன்றி உணர்ச்சியைக் காட்டக் கூடிய ஒரு புகழஞ்சலி.


தமிழ்நாடு இன்றைக்கு இந்த அளவிற்கு வளர்ந்திருக் கிறது; தொழில்கள் வளர்ந்திருக்கின்றன; கல்விக் கூடங்கள் வளர்ந்திருக்கின்றன. நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் வளர்ந்திருக்கின்றன. கல்லூரிகள் பெருகியிருக்கின்றன. தொழில் நிறுவனங்கள் சிறப்பாக இருக்கின்றன. எல்லா வகைகளிலும் தமிழ்நாடு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது என்றால், அதற்கு மிகப்பெரிய தோன்றாத் துணையாக, டாக்டர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் இந்தியன் வங்கியின் தலைவராக இருந்த நேரத்தில், எவ்வளவு சிறப்பாக, அந்த வங்கியை - ஒரு பொதுத் துறை வங்கியின் நோக்கம் என்ன? ஏன் தனியார் துறையில் இருந்த வங்கி கள் பொதுத் துறைக்கு மாற்றப்பட்டன, இந்திரா காந்தி அவர்களால்? அதனுடைய விளைவு, அந்த வங்கியின் மூலமாக தனியார் லாபம் பெறுவதைவிட, பொதுமக்கள், ஏழை, எளிய மக்கள், குறிப்பாக அடித்தளத்தில் இருக்கின்ற மக்கள் சிறப்பாக அவர்கள் பயன்பெறவேண்டும்; அதனு டைய விளைவுகள் அங்கே போய்ச் சேரவேண்டும் என் பதுதான்.


மக்கள் பணம் சேமிக்கப்படுகிறது என்று சொன்னாலும், அந்த சேமிப்பின் மூலமாக பணம் உருளவேண்டும்; Elasticity of Circulation of Money    அதுதான் வங்கியினுடைய தத்துவம். அந்த வங்கியினுடைய தத்துவத்தை, இதுவரை யில் எவர் கையாண்டதைவிட, அதிகமான அளவிற்குச் சிறப்பாகக் கையாண்ட பெருமை அய்யா நம்முடைய மறைந்தும் மறையாதவராக, இன்றைக்கும் நம் நெஞ்சங் களில் நிறைந்திருக்கக் கூடிய டாக்டர் கோபாலகிருஷ்ணன் அவர்களைச் சார்ந்ததாகும்.


ஏனென்றால், மக்கள் துறையில் அவர்கள் வங்கியைச் செலுத்துகின்ற நேரத்தில், அந்தப் பணம் அடைகாக்கப்படக் கூடாது; மக்கள் மத்தியில் போய்ச் சேரவேண்டும்; அதுதான் Elasticity of Circulation  அது வெளியிலே சுழலவேண்டும்.


படமாகவும் இருக்கிறார்;


பாடமாகவும் இருக்கிறார்


கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு திரைப்படத் தில், ''எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்'' என்ற பாடலைப் பாடுவார். அப்படிப்பட்ட நிலையில், அந்தப் பணத்தை சேகரிக்க வங்கிகள் வந்த நேரத்தில், அந்த வங்கிகள் மூலமாக பொது அமைப்புகளும், கல்வி அமைப்புகளும், ஏழை, எளியவர்களும், அடித்தளத்து மக்களும் பயன்பெறவேண்டும் என்பதுதான் நாட்டு டைமையாக்கப்பட்ட வங்கிகளுடைய தத்துவம். அந்தத் தத்துவத்தை நூற்றுக்கு நூறு சரியாக செய்தவர்தான் படத்திலே இருக்கக் கூடிய நம்முடைய அருமை அய்யா டாக்டர் கோபாலகிருஷ்ணன் அவர்கள். படமாகவும் இருக்கிறார்; பாடமாகவும் இருக்கிறார்.


மிகப்பெரிய அளவிற்கு, அவருடைய பாடம் என்ன வென்று சொன்னால், ஏதோ நாம் பதவியில் இருந்தோம்; சென்றோம் என்று இருக்கக்கூடாது. அந்தப் பதவி மக்களுக்குப் பயன்படவேண்டும். மக்கள் நலத்திற்கு உதவி செய்யக்கூடியதாக இருக்கவேண்டும். தொண்டறம் பரவ வேண்டும் என்று சொல்லி, அதை ஒரு தொழிலாக நினைக்காமல், ஒரு தொண்டாக நினைத்துக்கொண்டு, ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் அவர்.


அவர் அப்பழுக்கற்ற வாழ்க்கையில் ஒரு சிறு இடத்திலேகூட ஒரு கையூட்டு என்றோ, வேறு எந்தக் குற்றமோ அவர்மீது சொல்ல முடியாது.


இங்கே நண்பர் விசுவநாதன் அவர்களும், சம்பத் அவர்களும் சிறப்பாக சொன்னதைப்போல, ''அழுக்காறு உடையாருக்கு அதுசாலும்'' என்று சொல்வதைப்போல,


மேயர் இராதாகிருஷ்ணனின் மகன்!


அவரைப் பார்த்து பலருக்குப் பொறாமை ஏற்பட்டது. அதுவும், அவர் பாரம்பரியமான குடும்பத்தைச் சார்ந்தவர். அதை அழகாக இங்கே சம்பத் அவர்கள் சொன்னார்கள். மேயர் இராதாகிருஷ்ணன் அவர்களுடைய அருமைச் செல்வர் அவர். இராதாகிருஷ்ணன் அவர்களின் குடும்பம் என்பது, காங்கிரஸ் காலத்திலிருந்து மிகப்பெரிய அள விற்கு, கவுரவமான ஒரு சிறப்பான குடும்பம்; மேயர் என்று சொன்னாலே, அவர் பெயரோடு மேயர் இணைந்தே இருக்கும் - மேயர் இராதாகிருஷ்ணன் அவர்கள் என்று.


அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்த கோபாலா கிருஷ்ணன் அவர்கள், ''தம்மின் தம்மக்கள் அறிவுடைமை'' என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மிகச் சிறப்பான வகையிலே, அய்யா கோபாலகிருஷ்ணன் அவர்கள், அவரு டைய தந்தையின் பெயரை உயர்த்தினார்கள். படிப்படியாக வளர்ந்து வந்தார். மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர், ஆற்றலோடு, உழைப்போடு, நாணயத் தோடு - இங்கே சுட்டிக்காட்டியபடி, படிப்படியாக வளர்ந்த வர் அவர்.


தகுதி, திறமை என்பதில்


எந்தக் குறையும் கிடையாது


இதுவரையில் இந்தியாவில் நாட்டுடைமை ஆக்கப் பட்ட மிகப்பெரிய வங்கிகளில், அதனுடைய எக்ஸிக்யூட் டிவ் டைரக்டர் என்கிற நிர்வாக செயல் இயக்குநராக இருந்ததைத் தாண்டி, தலைவராகவே வந்த பெருமை அவரையே சாரும். அவர்தான் முதல்; அவர்தான் கடைசி என்று சொல்லக்கூடிய அளவிற்கு, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு ஆற்றல் உண்டு. தகுதி, திறமை என்பதில் எந்தக் குறையும் கிடையாது. அந்தத் தகுதி, திறமை என்பது இருக்கிறதே, அது மற்றவர்கள் பொறாமைப்படக் கூடிய அளவிற்கு உள்ள தகுதி, திறமையாகும்.


அந்தத் தகுதி திறமை தன்னை உயர்த்திக் கொள்வதற் காக அல்ல. தன் சமுதாயத்தை, தன் மக்களை, தன்னுடைய நாட்டை உயர்த்துவது என்ற அளவில், அவர் அந்தப் பணியை சிறப்பாக செய்தார். இங்கே விழாத் தலைவர் வேந்தர் அவர்கள் மிக அழகாகச் சொன்னார்.


எப்படி அவர் உதவி செய்தார்? எவ்வளவு துரிதமாகச் செய்தார்? இதுதான் அவர்மீது சாட்டப்பட்ட குற்றம். எந்த நோக்கத்திற்காக பொதுத் துறைக்கு வங்கிகள் மாற்றப்பட் டனவோ - அந்த நோக்கத்தைப் பிசிறு தட்டாமல் நிறை வேற்றக் கூடிய அளவிற்கு செய்ததுதான் அவருடைய உச்சமான கடமை உணர்வும், எடுத்துக்காட்டான செயல் திறனும்.


வேதனையால் துடிக்கிறோம் நாம், இன்னமும்!


அந்தச் செயல் திறன், கடமை உணர்வுக்கு அவர் பெற்ற பரிசுதான், இன்று 18 ஆம் தேதி அவருடைய படத்தைத் திறக்கிறோமே, 18 வழக்குகள் அவர்மீது என்று சுட்டிக்காட்டினாரே, அதனை எண்ணிப்பார்க்கும்பொழுது, வேதனையால் துடிக்கிறோம் நாம், இன்னமும்!


பழி, தேவையில்லாத வீண் பழி. தவறான பழி. இலக் கியத்தில், கோப்பெருஞ்சோழன் மன்னன் தவறான முடிவுக்கு வந்தான் என்று சொல்வதைப்போல இதுபோன்ற தவறான முடிவு, அவருடைய இறுதி வாழ்க்கையை நாசப்படுத்தியது; அமைதியற்ற சூழலை ஏற்படுத்தியது.


ஒரு மனிதர், அவருடைய உதவியைப் பெறாதவர்களே கிடையாது. அது, சாதாரண அடித்தளத்தில் இருக்கக் கூடியவர்களாக இருந்தாலும், மிகப்பெரிய தொழிலதி பர்களாக இருந்தாலும், கல்வி அறிஞர்களாக இருந்தாலும், யாருக்கும், ஜாதி, மதம், கட்சி எதையும் பார்க்காமல் உதவி செய்தவர்.


அந்த உதவியை, நீக்குப் போக்குத் தாண்டி செய் வார்கள். சில நேரங்களில்               சட்டம் என்பது, அது மனிதாபி மானத்திற்கு விரோதமாக இருக்கும். அதன் நோக்கத்தைப் பார்க்கவேண்டுமே தவிர, வெறும் வார்த்தைகளைப் பார்க்கக் கூடாது; வெறும் வரிகளைப் பார்க்கக் கூடாது; சுவர் நடுவில் எழுப்பப்படக் கூடாது என்பதை மிகத் தெளிவாக உணர்ந்து. ஓர் எடுத்துக்காட்டான நிர்வாகியா கத்தான் அவர் இந்தியன் வங்கியின் தலைவராக இருந்து ஏராளமானோருக்கு உதவி செய்தார்.


எந்தவிதமான குற்றத்தையும்


அவர்மீது எவரும் சொல்ல முடியாது


உதவி செய்வதில் என்ன தவறு? அவர் கையூட்டு வாங்கிக்கொண்டு உதவி செய்திருந்தால், அது தவறு. அப்படி எந்தவிதமான குற்றத்தையும் அவர்மீது எவரும் சொல்ல முடியாது. அப்பழுக்கற்ற மாமனிதர்; நேர்மைக்கும், நீதிக்கும், நாணயத்திற்கும் பெயர் போனவர். ஆனாலும் கூட, பழியும், பாவமும் அவர்மீது எப்படியெல்லாம் சுமத் தப்பட்டு, அவர் சிறைச்சாலைக்குப் போனார் என்று சொல்கிறபொழுது, நாங்கள் வேதனையால் துடித்தோம்.


எத்தனையோ பேர் அவரால் பலன் பெற்றிருக்கிறார்கள்; நாங்கள் பெரிய அளவிற்கு அவரால் பலன் பெற்றவர்கள் கிடையாது. இன்னுங்கேட்டால், கடன் வாங்குவதற்குத் தயங்கிய நேரத்தில்கூட, ''ஏன் நீங்கள் தயங்குகிறீர்கள்? ஆதாரங்களைக் காட்டி நீங்கள் வாங்கலாமே!'' என்று தெளிவாகச் சொன்னவர்.


எந்தக் கல்வி நிறுவனமும், அவரிடத்தில் இருந்து பயன் பெற்றவர்கள் யாரும் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இல்லை. எல்லோரும் முறையாக திரும்பச் செலுத்தியிருக் கிறார்கள். ஏமாற்றியவர்கள் பெரிய தொழில் திருடர்களாக இருக்கலாம்; அதனால், அந்தப் பழி அவரைச் சார்ந்ததல்ல என்பதை இங்கே அழகாக எடுத்துச் சொன்னார்கள்.


இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பெரிய பெரிய நிறுவனங்களாக இருக்கலாம்; தொலைக்காட்சி நிறுவனங்களாக இருக்கலாம்; தொழில் நிறுவனங்களாக இருக்கலாம்; கல்வி நிறுவனங்களாக இருக்கலாம்; அவரு டைய உதவி என்ற அந்தக் கரம் படாமல் யாரும் வளர்ந் ததே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு மாமேதை; கருணை உள்ளம் படைத்தவர். அந்தக் கருணை உள்ளத்திற்கு அவர் கூலி வாங்கியது இல்லை.


கனிந்த மனம்; ஏழைகளுக்கு இரங்கிய மனம்


அவருடைய மனம் கனிந்த மனம்; ஏழைகளுக்கு இரங்கிய மனம்; ''வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்'' என்று சொன்ன வள்ளலார் பிறந்த மண் இந்த மண். சமூகநீதி வளரவேண்டும் என்று சொன்ன தந்தை பெரியார் பிறந்த மண் இந்த மண். அதுமட்டுமல்ல, எல்லோ ரும் படிக்கவேண்டும் என்பதற்காக கல்வி வள்ளலாகத் திகழ்ந்த காமராசர் பிறந்த மண் இந்த மண். அதுபோலவே, அனைவருக்கும் அனைத்தும் தரவேண்டும் என்று சொன்ன அண்ணா ஆண்ட மண் இந்த மண்; கலைஞர் ஆண்ட மண் இந்த மண் என்ற பெருமைக்குரிய பாரம் பரியம் உள்ள இந்தத் தமிழ்நாட்டில், இவருடைய இடம் என்பது இருக்கிறதே, தனி இடம்; மற்றவர்கள் எளிதில் எட்ட முடியாத ஒரு இடமாக - அவர் பதவியில் இருந்த காலத்தில் சிறப்பாகப் பணியாற்றினார். எல்லோருக்கும் உதவி செய்தார். இதுதான் அவர்மீது சுமத்தப்பட்ட குற்றம்.


'தமிழ்நாடு பவுண்டேசன்'


எந்த அளவிற்கு அவருடைய ஆற்றல் சிறப்பாக இருந்தது என்பதற்கு, இந்த நாட்டிலே மட்டுமல்ல நண்பர் களே, "தமிழ்நாடு பவுண்டேசன்'' என்ற அமைப்பினை அய்யா பழனி ஜி.பெரியசாமி அவர்களும், அவருடைய நண்பர்களும் அமெரிக்காவில் எளிய முறையில் தொடங் கினார்கள். தமிழர்களுக்கெல்லாம் உதவி செய்யவேண்டும். அந்த வகையில், பிறந்த மண்ணை மறந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் 'தமிழ்நாடு பவுண்டேசன்' அமைப் பைத் தொடங்கினார்கள்.


அதற்குப் பிறகு அவர்கள் இங்கே வந்த பிறகு, நண்பர் துக்காராம் அவர்கள், தமிழ்நாடு பவுண்டேசன் அமைப் பிற்குத் தலைவராக இருந்த காலத்தில், ஒவ்வொரு முறை யும் இங்கே இருந்து அழைக்கின்றபொழுது, அய்யா கோபாலகிருஷ்ணன் அவர்கள் சென்றிருந்தார்.


தலைசிறந்த பொருளாதார மேதை


எப்படியெல்லாம் முதலீடு செய்வது? என்று அங்கே வாழக் கூடிய தமிழர்கள், மற்றவர்கள் கேட்ட நேரத்தில், விளக்கமாக அதற்குப் பதில் சொன்னார்கள். அதேநேரத் தில், தவறான செய்திகள் எதையும் சொல்லாமல், தவறான யூகங்களுக்கோ, ஆசைகளுக்கோ இடந்தராமல், இன் னென்ன முறைகளில் செய்தால், இன்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லி, உலகத் தமிழர்கள் மத்தியில்கூட ஒரு சிறந்த நம்பிக்கையையும், அங்கிருந்து இங்கே முதலீடுகள் வரக்கூடிய அளவிற்கு ஒரு வாய்ப்பை உண்டாக்கிய தலைசிறந்த பொருளாதார மேதையாக அவர்கள் இருந்தார்கள்.


இந்த இனம், தமிழ் இனம் பெருமைப்படக் கூடிய அளவிற்கு, தமிழ்நாடு பெருமைப்படக் கூடிய அளவிற்கு, இந்திய நாடே, இப்படிப்பட்ட ஒரு சிறந்த அறிவாளி, ஒரு மேலாண்மை நிர்வாகி இருக்கிறார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு சிறந்த பண்புள்ள மாமனிதராக அவர்கள் இருந்தார். அப்படியெல்லாம் இருந்த அவர்கள், ஓய்வு பெறுகின்ற நிலையில், இப்படி ஒரு தொல்லை என்று சொன்னால், அதை என்ன சொல்லுவது என்பதை நினைத்துப் பார்க்கிறோம்.


நல்லவராக இருப்பது எவ்வளவு பெரிய ஆபத்து


நம்முடைய தேசப்பிதா அண்ணல் காந்தியார் அவர்கள் மறைந்த நேரத்தில், உலகம் முழுவதும் பலர் பல கருத்துகளைச் சொன்னார்கள் என்பதை எல்லோ ரும் அறிவோம். அந்த நேரத்தில் உலக அறிஞர் என்று கருதப்படுகின்ற பெர்னாட்ஷா அவர்கள் ஒரு வரியில் சொன்னார், ''மிகப்பெரிய அளவிற்கு சிறந்த அளவிற்கு நல்லவராக இருப்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது'' என்று.


அதைத்தான், காந்தியார் அளவிற்கு இவர் ஒப் பிடக் கூடியவரா என்கிற கேள்வியை சிலர் கேட்கலாம்; அவருடைய துறை வேறு. தொண்டறம் என்று வருகிறபொழுது, இவருடைய எல்லையில் நின்று பார்க்கின்ற நேரத்தில், மிகச் சிறந்த மனிதராக இருந்த காரணத்தினால்தான், மிக அதிக விலையைக் கொடுக்க வேண்டிய வாழ்க்கையை, மன உளைச்ச லுக்கு ஆளாகக் கூடிய அளவிற்கு ஆளானார் என் பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.


வள்ளுவர் சொன்னதைப்போல,


ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்


செத்தாருள் வைக்கப் படும்.


மற்றவருடைய துன்பத்தைத் தன்னுடைய துன்பம் போல கருதிக்கொண்டுதான், அந்த இடத்தில் உடன டியாக உதவி செய்தார். குறுக்கே சட்டம் நின்றாலும்; சட்டங்கள் யாருக்காக? சமுதாயத்திற்காகச் சட்டமே தவிர, சட்டத்திற்காக சமுதாயம் இல்லை. இன்றைக்கு இருக்கின்ற சிக்கலே அதுதான். சட்டங்கள் என்பது சமுதாயத்திற்காக- மனிதகுலத்தின் மேம்பாட்டிற்காக - மனிதர்களுடைய முன்னேற்றத்திற்காக. அந்த முன் னேற்றமும், வளர்ச்சியும் ஏற்படுவதற்குத்தான், இவர் கள் முகவர்களைப்போல, துணைவராக இருக்க வேண்டியவர்கள் நிர்வாகிகள் - அந்தக் கடமையை மிகச் சிறப்பாக நழுவாமல், வழுவாமல் செய்த பெருமை அய்யா கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு உண்டு.


சொத்தை விற்று வழக்கை நடத்தினார்


அதன் காரணமாகத்தான், அவர்கள் தனக்கென்று எதுவும் சேர்த்துக் கொள்ளாதவர்கள். இங்கே சொன்ன தைப்போல, தன்னுடைய வழக்கை நடத்துவதற்குக் கூட, அவர்கள் தன்னுடைய சொத்தை விற்று வழக்கை நடத்தக்கூடிய கட்டத்திற்கு வந்தார் என்றால், அவரு டைய நேர்மை, அவருடைய நாணயம் அப்பழுக்கற்ற தல்லவா!


பெரியார் கல்வி நிறுவனங்களை


சுற்றிக் காட்டினோம்!


என்னதான் மற்றவர்கள் பழி சொன்னாலும், உண்மை ஒருக்காலும் மறையப் போவதில்லை. உண்மை தெளிவாக இறுதியில் வெளியில் வர வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அந்த வாய்மைப் போரை கடைசிவரையில் அவர்கள் நடத்தினார்கள். எங்களைப் போன்றவர்கள் எந்த அளவிற்கு உதவ முடியும் என்று நினைத்தோம். அவ ரால் நாங்கள் பயன் பெற்றவர்கள் அல்ல. அதேநேரத் தில், அவர்களிடம் எங்கள் கல்வி நிறுவனங்களைச் சுற்றிக் காட்டியபோது, ''என்ன உதவி வேண்டும், கேளுங்கள்'' என்று கேட்டார்.


அய்யா, உங்களிடத்தில் உதவியைப் பெறுவதை விட, உங்களைப் போன்றவர்கள் இந்த நிலையில் இருக்கிறீர்களே, அதைப் பார்த்துப் பார்த்து பெருமைப் படுவதுதான் பெரியார் தொண்டர்களாகிய எங்களைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி என்று சொன்னோம்.


யாரைப் பார்த்தாலும், என்ன உதவி வேண்டும் என்று கேட்டு, கேட்டு தன்னுடைய வாழ்நாள் முழுவ தும் செய்தார். அந்த உதவிக்கு அவர் என்றைக்கும் கைம்மாறு எதிர்பார்த்ததில்லை; யாரும் அப்படி சொன்னதும் கிடையாது.


அப்படிப்பட்ட ஒரு மாமேதை; ஒடுக்கப்பட்ட சமுதாயக்காரர்களுக்குத் தகுதி உண்டு, திறமை உண்டு, அறிவு உண்டு, ஆற்றல் உண்டு, நேர்மை உண்டு, ஒழுக்கம் உண்டு என்பதற்கு மிகச் சிறப்பான எடுத்துக்காட்டு அய்யா டாக்டர் கோபாலகிருஷ்ணன் அவர்கள்.


அவருடைய படத்தை இன்றைக்குத் திறந்திருக்கின் றோம் என்றால், அவர் படம் மட்டுமல்ல, பாடம் என்று நான் தொடக்கத்தில் சொன்னேன்.


ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்


இவ்வளவு பெரிய உயர்வுக்கு வருவதா?


சில நேரங்களில் கொடை மடம் என்றுகூட சொல் வார்கள்.தவறான கொடையை அவர் என்றைக்கும் செய்ததில்லை. அதற்குரிய அளவுதான் செய்திருக் கிறார். எங்கோ கோளாறுகள் நடைபெற்று இருக்கின் றன; எங்கோ எரிச்சல் வந்திருக்கிறது. அவருடைய நிலை - ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் இவ்வளவு பெரிய உயர்வுக்கு வருவதா? ஒரு பெரிய அரசியல் தலைவர்களைவிட, அதிகமான விளம்பரத் தைப் பெறுவதா? மக்கள் மத்தியில் இவ்வளவு செல்வாக்கு ஒரு தனி மனிதருக்கு இருப்பதா? இதுதான் அந்த அடிப்படைக்குக் காரணம்.


ஆனால், யார் யாரெல்லாம் அவரால் உயர்வு பெற்றார்களோ, அதில் பல பேர் அற்றகுளத்து அறுநீர் பறவைபோல் போய்விட்டார்கள். என்றாலும், இது தான் மனிதகுலத்தினுடைய சராசரி தன்மை.


மனிதர்களுடைய சராசரித்தன்மைக்கு அந்தப் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவேண்டும். உதவினால் மட்டும் போதாது; எத்தனை பேர் அவரால் உதவி பெற்றவர்கள் - எத்தனை பேர் அவருக்குச் சங் கடம் ஏற்பட்டபொழுது உதவிக்கு வந்தார்கள் என் பதை நன்றாக நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.


எனவேதான், இதனை எண்ணிப்பார்க்கின்ற நேரத் தில், அவருடைய வாழ்க்கை நமக்கு ஒரு பாடம். பாடத்தை நல்ல முறையில் கற்றுக்கொள்ளவேண்டும். தவறான பாடத்தைக் கற்றுக்கொள்ளவேண்டிய அவ சியமில்லை.


 சமூகநீதியில் பூத்துக்


காய்த்து கனிந்த கனி


எங்களைப் போன்றவர்கள், ஒரு எளிய தொண் டர்கள், சாதாரணமானவர்கள், அரசியலுக்கு அப்பாற் பட்டு இருக்கக் கூடியவர்கள் - சமூகநீதிக்காகப் போராடுகின்ற நேரத்தில், இதுபோன்று ஒரு சரித்திம் படைத்த சமூகநீதியில் பூத்துக் காய்த்து கனிந்த கனியைப் பார்ப்பது அரிது.


ஒரே ஒரு நிகழ்வை சொல்கிறேன்; பெரியார் திட லில் இருக்கக்கூடிய திராவிடன் நலநிதியின் கிளையை சூளை மாணிக்கச் செட்டித் தெருவில் திறப்பின்போது, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வேணுகோபால் அவர்கள்தான் அந்நிறுவனத்தின் தலைவர். அவருக்கு நாங்கள் எல்லாம் உறுதுணையாக இருக்கக் கூடியவர் கள். அந்தக் கிளையை யார் திறந்து வைக்கவேண்டும் என்று கலந்தாலோசிக்கின்றபொழுது, அய்யா கோபாலகிருஷ்ணன் அவர்கள் பதவியிலிருந்து ஓய்வு பெற்று, அவர்மீது வழக்கு என்று சொல்லி, அவரை கைது செய்து, சங்கடங்களையெல்லாம் உண்டாக்கி, அவருக்கு ஒரு கெட்ட பெயரை உருவாக்கிய நிலை யில், அவரால், யார் யார் உதவி பெற்றார்களோ, அவர்கள் எல்லாம் ஒதுங்கியிருந்த நேரத்தில், நாங்கள் ஒரு முடிவெடுத்தோம். அய்யா கோபாலகிருஷ்ணன் அவர்களைத்தான் அழைத்து, அந்தக் கிளையைத் திறக்கவேண்டும் என்று முடிவெடுத்தோம்.


திராவிடன் நலநிதியை கிளையைத் திறப்பதற்காக அழைத்தோம் நாங்கள்!


அன்றைக்கு எங்களிடம் சிலர் கேட்டார்கள், ''அய்யா, கோபாலகிருஷ்ணன் அவர்களை அழைத்து திறக்கப் போகிறீர்களே, அவர்மீது வழக்குகள் இருக் கின்றனவே; அதனால் உங்களுக்கு சங்கடங்கள் வராதா?'' என்று.


எந்த சங்கடங்கள் வந்தாலும் அதைப்பற்றி எங்க ளுக்குக் கவலையில்லை. நேர்மைமிக்க மனிதர் ஒரு வர் என்றால், அவர்தான். அவர் பதவியிலிருந்தபொ ழுது, அவரால் எத்தனையோ பேர் பயன்பெற்றார்கள். ஆனால், அவர் பதவியில் இல்லாதபொழுது, அல்ல லுற்று சங்கடத்தோடு இருக்கும் நிலையில், அவருக்குத் துணையாக நாங்கள் இருக்கிறோம் என்பதைக் காட்டவேண்டும் என்று நினைத்து, அவரை திறந்து வைக்குமாறு அழைத்தோம்.


அத்திறப்பு விழாவின்போது, அவருக்கே வியப்பு ஏற்பட்டு, ''இதனால் உங்களுக்குத் தொல்லை ஏற்படப் போகிறது'' என்று சொன்னார்..


எங்களுக்கு எந்தத் தொல்லை ஏற்பட்டாலும் பரவாயில்லை என்றோம்.


எதற்காக இதனைச் சொல்கிறேன் என்று சொன்னால் நண்பர்களே, பல நேரங்களில் மனிதர்கள் உதவிகளைப் பெறுகிறார்கள்; சிக்கல்கள் வருகின்ற நேரத்தில்,


உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே


இடுக்கண் களைவது நட்பு


என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அங்கே உடன டியாகச் செல்லாவிட்டாலும்கூட, ஒதுங்கிப் போகக் கூடாது.


அந்த உணர்வோடுதான் அவரைப் பார்த்தோம்; இறுதி வரையில் இருந்தோம். எந்த அளவிற்கு முடி யுமோ, அந்த அளவிற்கு நாங்கள் செய்தோம்.


கடைசியில் பழியற்ற  ஒரு உணர்வோடு, மகிழ்ச்சியோடு அவர் மறையவில்லை என்பது வேதனை!


அவருடைய நிறைவான வாழ்க்கையில், கடைசி யில் பழியற்ற  ஒரு உணர்வோடு, மகிழ்ச்சியோடு அவர் மறையவில்லை என்ற வேதனைதான் நம்மைத் தாக்கிக் கொண்டிருக்கிறது. என்றாலும்கூட, சமூகம், நம்மைப் போன்றவர்கள், இங்கே வந்திருக்கின்ற அறிஞர் பெருமக்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர் கள், பலதரப்பட்டவர்கள் எல்லோரும் உயர்ந்தவர்கள். அப்படிப்பட்டவர்கள் எல்லாம் சேர்ந்து, சமூகமாக, ஜாதியில்லை, மதமில்லை, கட்சியில்லை - எல்லாவற் றிற்கும் அப்பாற்பட்ட ஒரு ஒப்பற்ற வீரர்; ஒப்பற்ற  பொருளியல் அறிஞர்; ஆற்றலாளர்; நிர்வாக மேலாண் மையர்; இவையெல்லாவற்றையும்விட, தூய்மையுள்ள மாமனிதர் என்பதை நிரூபிக்கக் கூடிய அளவிற்கு, இந்த சிறப்பான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பது பாராட்டத்தக்கது.


எனவேதான், இது வெறும் புகழஞ்சலி மட்டுமல்ல; நன்றி திருவிழா என்று சொல்லலாம்.


நன்றி காட்டவேண்டும்; நன்றி காட்டக்கூடியவர்கள் இங்கே இருக்கிறார்கள். சமூகம் பட்டுப்போகவில்லை; எங்கும் பாலைவனமாக இருந்தாலும், அங்கே ஒரு ஓயாசிஸ் உண்டு. அதுபோல, இந்த உணர்வு படைத்த வர்கள் எல்லாம் இங்கே இருக்கத்தான் செய்கிறோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறார்கள்.


பெரியார் கல்வி நிறுவனங்களில் ஓரிடத்திற்கு கோபாலகிருஷ்ணன் பெயர் சூட்டப்படும்!


எனவே நண்பர்களே, கோபாலகிருஷ்ணன் அவர் களுடைய பெயர் என்பது அது சரித்திரத்தில் இருக் கும்; அவருடைய பழிகள் போக்கப்படும். அதற்கு அடையாளமாகத்தான், பெரியார் கல்வி நிறுவனங் களில் உள்ள ஓரிடத்திற்கு கோபாலகிருஷ்ணன் அவர் களுடைய பெயர் சூட்டப்படும் என்பதை, அந்தக் கல்வி நிறுவனங்களின் வேந்தர் என்ற முறையிலும், பெரியார் அறக்கட்டளையின் பொறுப்பாளன் என்ற முறையிலும் அதனை இங்கே நான் அறிவித்து, அவர் என்றைக்கும் நம்மோடு இருக்கிறார் என்ற உணர்வும், அவர் யார்? எப்படிக் கல்விக் கூடங்களுக்கும், சமுதா யத்திற்கும் பணியாற்றினார் என்பதை வரலாற்றில் பதியவேண்டும்; இளைய தலைமுறையினர், மாண வர்கள் அறியவேண்டும்; இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு அடையாளமாகத்தான், அவரு டைய பெயர் சூட்டப்பெற்று, அவருடைய ஒழுக்கம், நேர்மை, நாணயம் என்பது சிறப்பாக என்றைக்கும் இருக்கும்; தலைதாழாது இருக்கும் என்று காட்டு வதற்காகத்தான் இந்த அறிவிப்பு என்று கூறி,


வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி,


இந்நிகழ்வினை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்த தோழர் சம்பத் அவர்களுக்கும் பாராட்டும், நன்றியும் தெரிவித்து,


அன்பு கனிந்த வீர வணக்கம்!


வீர வணக்கம்!! வீர வணக்கம்!!!


டாக்டர் கோபாலகிருஷ்ணன் அவர்களை இழந்து தவிக்கின்ற, அவருடைய அருமை வாழ்க்கைத் துணைவியார் அவர்களுக்கும், அவருடைய செல்வங் களுக்கும், குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து,


அவருக்கு நம்முடைய அன்பு கனிந்த வீர வணக் கம்! வீர வணக்கம்!! வீர வணக்கம்!!!


நன்றி, வணக்கம்!


- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற் றினார்.


No comments:

Post a Comment