நான் ஒரு மனிதன் எனக்கு ஒரு மகள் இருந்தாள் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 31, 2020

நான் ஒரு மனிதன் எனக்கு ஒரு மகள் இருந்தாள்

கல்லைச் செதுக்கி சிலை செய்தேன்


கடவுளாக்கினாய் சிறிது நீர் தெளித்தே


கருவறையும் கோபுரமும் நான் கட்டினேன்


குடமுழுக்குச் செய்து கோவிலாக்கினாய்


கனவிலும் கோவிலுக்கு அருகே வந்துவிடாதே


கடவுளுக்கே தீட்டாகும் நீ தீண்டினால் என்றாய்


கற்பிளந்து கிணறு வெட்டினேன்.அந்த


கிணற்றுநீரும் நான் தொட தீதாகும் என்றாய்


கடவுளின் பெயரால் வஞ்சக விதி செய்தாய்


காலகாலமாய் அடிபட்டு அடிமையாய்க் கிடந்தேன்


 


ஒதுக்கப்பட்டேன் ஊர் கோடியில்


ஒடுங்கி ஒடுங்கி தன்மானமிழந்து என்னை


ஒரு மனிதனாக நானே உணராது


ஒளிந்தே இருளில் வாழ்ந்திருந்தேன்


 


ஒதுக்கப்பட்ட நான் உன் ஊருக்குள் வரவில்லை


ஒதுங்கி வயல்வெளியில் குந்தியிருந்தாள் என் மகள்


ஓநாயே என் இடத்துக்கு நீதான் வந்தாய்


தீண்டினாய் வன்புணர்ந்தே சிதைத்தாய் என் மகளை


தீட்டானது யார் நீதானே!


தீ பொசுக்க வேண்டியது யாரை?


சிதைத்தவனை சிறையில் தள்ளாது


சிதையுண்டவளைக் கொளுத்தும் கொடுமை


அழுவதற்குக் கூட அனுமதி இல்லை


ஆறுதல் சொல்லவருவோர்க்கும் தடை


நான் செய்த தவறென்ன?  புழுவாய்


நான் வாழ்வதைக்கூட பொறுக்க மாட்டாயா


கடும் கருந்தீயை அழிக்க


கருத்துத் தீ ஏற்றப்பட்டிருக்கிறது


பெரியார் மண்ணில் புறப்பட்ட தீ


பரவட்டும்! தீமையை ஒழிக்கட்டும்!


இப்போதாவது நான் விடுதலையடைகிறேன்


இனியாவது நானும் வாழ்கிறேன்


 - நன்னன் குடியிலிருந்து அவ்வை


No comments:

Post a Comment