மத்திய அரசுமீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி, அக்.18 உலகளாவிய பட்டினி குறியீட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையானது, உலகெங்கும் உள்ள பட்டினி அளவையும், ஊட்டச்சத்து குறைபாட்டு அளவையும் கொண்டுள்ளது. 107 நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் இந்தியா 94 ஆவது இடத்தில் உள்ளது.கடந்த ஆண்டு 102 நாடுகளில் இந்தியா 94 ஆவது இடத்தில் இருந்தது. எனவே இந்தியா நடப்பு ஆண்டில் சற்றே முன்னேற்றம் கண்டுள்ளது.
இருப்பினும் பாகிஸ்தான் (88 ஆவது இடம்), வங்காளதேசம் (75 ஆவது இடம்) ஆகிய நாடுகளைவிட இந்தியா பின்தங்கி இருக்கிறது. இந்தியாவை விட 13 நாடுகள் மோசமான நிலையில் உள்ளன. அந்த நாடுகளில் ருவாண்டா (97), நைஜீரியா (98), லிபியா (102), மொசாம்பிக் (103), சாட் (107) அடங்கும். 107 நாடுகளில் இந்தியாவின் மொத்த புள்ளிகள் 27.2 ஆகும். இது இந்தியாவை தீவிரமான பட்டினி பிரிவில் வைத்துள்ளது. இந்த அட்டவணையின்படி, இந்தியாவில் 14 சதவீத மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்தியாவின் பட்டினி நிலை கண்டு மத்திய அரசு மீது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடி உள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட ஒரு பதிவில், “இந்தியாவில் ஏழை மக்கள் பட்டினி கிடக்கிறார்கள். ஏனென்றால் அரசு, தனது சிறப்பு நண்பர்களில் சிலரது பைகளை நிரப்புவதில் தீவிரமாக உள்ளது” என கூறி உள்ளார். உலகளாவிய பட்டினி குறியீட்டு அட்டவணை வரைபடத்தையும் டுவிட்டரில் ராகுல் காந்தி இணைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment