ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்
சென்னை, அக்.24 ஆளுநர் உடனடியாக அரசு பள்ளி மாண வர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறி யுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு செய்யும் சட்ட மசோதா சட்டமன்றத்தில் ஏகமன தாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஒரு மாத காலம் கடந்த பிறகும் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். ஆளுநர் உடனடியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் அல்லது தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
சென்னை, அக்.24 தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அதிக காற்றாலைகள் உள்ளன. இந்தியாவில் உள்ள சுமார் 25 ஆயிரம் காற்றாலைகளில் சுமார் 10 ஆயிரம் காற்றாலைகள் தமிழகத்தில் தான் உள்ளன.
தமிழகத்தின் மின் தேவையை அனல், நீர், காற்று மற்றும் அணு மின்சாரம் பூர்த்தி செய்கின்றன. காற்றாலைகள் மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத மின்சாரம் கிடைக்கிறது. வழக்கமாக மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் அதிக அளவு காற்றாலை மின்சாரம் உற்பத்தி ஆகும்.
ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் வரையிலான கால கட்டத்தை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்றாலை மின்சாரம் உற்பத்தி உயர்ந்து உள்ளது. அதாவது, 2019-ஆம் ஆண்டை பொறுத்தமட்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 9,189 மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த ஆண்டு 9,236 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது. மேற்கண்ட தகவல் இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மதுக்கூர் அருகே பழங்கால சிலைகள், பொருட்கள் கண்டெடுப்பு
மதுக்கூர், அக்.24 தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள அத்திவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் லெனின். நேற்று (23.10.2020) இவர் தனது நிலத்தில் கொய்யா மரக்கன்றுகள் நட வேலையாட்கள் மூலம் குழி தோண்டினார். அப்போது குழியில் இருந்து வினோத சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த தொழிலாளர்கள் குழிதோண்டும் பணியை விரைவுபடுத்தினர். அப்போது குழியில் இருந்த பழங்காலத்து 3 ‘கடவுளர்’ சிலைகள், பூஜை பொருட்கள், உலோக பானைகள் உள்பட 27 பொருட்கள் இருந்தன.
சிலைகள் மற்றும் பொருட்களை வெளியே எடுத்த தொழிலாளர்கள் அவற்றை நில உரிமையாளர் லெனினிடம் ஒப்படைத்தனர். இது குறித்து லெனின் அத்திவெட்டி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் 3 ‘கடவுளர்’ சிலைகள் உள்பட 27 பொருட்களையும் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க எடுத்து சென்றனர். மேலும் ‘கடவுளர்’ சிலைகள் மற்றும் பொருட்கள் எந்த உலோகத்தை சேர்ந்தது என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment