ஹிந்தி பேசாத மாநிலத்தோரே கிளர்ந்து எழுவீர்!
மத்திய அரசின் சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வேலை வாய்ப்பு விளம்பரத்தில் எழுத்துத் தேர்வில் ஹிந்தியில் ஒரு தேர்வு (Paper) கட்டாயமாம். இதனால் இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தோருக்கு மத்திய அரசின் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த துறையில் கதவடைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹிந்தி பேசாத மாநிலத்தவர் கிளர்ந்து எழ வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
பல்வேறு மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தில் மத்திய அரசு வெளியிடும் வேலை வாய்ப்பு விளம்பரத்தில், ஹிந்திப் பாடத்தை எழுத்துத் தேர்வில் இடம்பெறச் செய்வதன் நோக்கம் என்ன? மத்திய பி.ஜே.பி. ஆட்சி என்பது ஹிந்திக் காரர்களுக்கு மட்டுமே உள்ள ஆட்சியா?
ஏற்கெனவே இரயில்வே துறை, அஞ்சல் துறை, மின்சாரத் துறை போன்றவற்றில் ஹிந்தியை தாய் மொழியாகக் கொண்டோர் குவிந்து கிடக்கின்றனர்.
இது போதாது என்று பச்சையாகவும், மிக வெளிப்படையாகவும் ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமே மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையில் பணியாற்ற முடியும் என்கிற அளவுக்கு மத்திய அரசு தலைகால் புரியாமல் துள்ளிக் குதிக்கிறது.
ஒரு பக்கம் சமூகநீதிக்குக் குழி பறிப்பு, இன்னொரு பக்கம் ஹிந்தித் திணிப்பு என்ற அணுகுமுறை என ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் ஹிந்தி பேசாத மக்களை முற்றிலும் புறக்கணிக்கும் ‘திருப்பணி'யில் அதிவேகமாக ஈடுபட்டு வருகிறது மத்திய பி.ஜே.பி. அரசு.
இந்திய தேசியம் என்பது ஹிந்தி தேசியம்தானா? ஒரு பக்கத்தில் பேச்செல்லாம் தேசியம்; இன்னொரு பக்கத்தில் தேசியத்திற்கு ஊறுவிளைவிக்கும் கண்மூடித்தனம் - இந்நிலை எதிர்காலத்தில் அவர்கள் விரும்பாத ஓரிடத்திற்கு மாநிலங்களைத் தள்ளும் என்பதில் அய்யமில்லை.
ஹிந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக தமிழக உறுப்பினர்கள் முக்கிய கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
23.10.2020
No comments:
Post a Comment