இவர்களைக் கவனியுங்கள்!
* கவிஞர் கலி. பூங்குன்றன்
பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டத்தின் சார்பில் ஒரு மாதத்துக்கு முன் நடைபெற்ற காணொலியில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் மனுதர்மத்தில் பெண்கள் இழிவுபடுத்தியிருப்பதுபற்றி சுட்டிக்காட்டிய தற்காகப் பார்ப்பன ஜனதா கட்சி (பா.ஜ.க.) சங்பரிவார்கள் அவர்மீது நாலு கால் பாய்ச்சல் பாய்ந்து பிராண்டு கின்றனவே - அண்ணா பெயரில் உள்ள அதிமுக ஆட்சி பல பிரிவுகளில் வழக்குப் போடுகிறதே இது சரியா? மனுதர்மத்தில் பெண்கள் விபசார தோஷமுள்ளவர்கள் என்று இருப்பதைச் சுட்டிக்காட்டி, பெண்களை இழிவு படுத்தும் மனு ஸ்மிருதியைத் தடை செய்ய வேண்டும் என்று கூறினால் - அப்படி எடுத்துக்காட்டியவர்மீது பாய்வது ஏன்? நிஜத்தை விட்டு நிழலோடு மல்லுக்கு வருவது ஏன்?
மனு மட்டுமல்ல - அதன் மறுபதிப்பாக இருக்கக் கூடிய பேர்வழிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
இந்த 21ஆம் நூற்றாண்டிலும் மனுவின் தத்துப் புத்திரர்கள் - இதோ:
குருமூர்த்தியின் குருநாதரான திருவாளர் சோ ராமசாமி காலத்திலும் சரி, பெண்கள் என்றால் ஒரு வகை இளக்காரம் கேலி, கிண்டல், மட்டந்தட்டும் மமதை இவைதான், மின்னித் தெறிக்கும்! பல நேரங்களில் 'விடுதலை' அவற்றையெல்லாம் எடுத்துக்காட்டி துக்ளக்கின் துர்ப்புத்தியை அம்பலப்படுத்தியதுண்டு. இதோ சில எடுத்துக்காட்டுகள்:
கேள்வி: பெண்களைப் பற்றி உங்களின் உண்மை யான அபிப்பிராயம் தான் என்ன?
பதில்: உயர்ந்தவர்கள். அப்படி இருக்க விருப்பம் இல்லாதவர்கள். (18.3.2009)
கேள்வி: பெண்களுக்கு சமஉரிமை என்றால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?
பதில்: யார் இப்படியெல்லாம் என்னைப் பற்றி புரளி கிளப்பி விடுகிறார்களோ, தெரியவில்லையே! பெண்களுக்குச் சம உரிமை தேவைதான். மாமியார், மருமகள் ஆகியோருக்குச் சம உரிமை வந்தால், அது வரவேற்கத் தக்கதுதான். (22.4.2009)
கேள்வி: பெண்களிடம் எதைக் கற்றுக் கொள்ள வேண்டும்?
பதில்: என்ன தவறு செய்தாலும், அந்தத் தவறை தான் செய்யாதது போலவும், மற்றவர்கள்தான் அதற்குக் காரணம் என்பது போலவும் நடந்து கொள்கிற திறமை, அதைக் கற்றுக் கொண்டால் ஆண்களும் கூட நிம்மதியாக இருக்கலாமே? (20.5.2009)
கேள்வி: மத்திய அமைச்சரவையில் பெண் அமைச் சராக தமிழகத்திலிருந்து ஒருவர் கூட நியமிக்கப்பட வில்லையே?
பதில்: தப்பித் தவறி ஏதாவது நல்லது நடக்கிற மாதிரி தெரிந்தால் போதும் - உங்களைப் போல் பலருக்கு ஆட்சேபம் வந்துவிடுகிறது. யார் கண்டது? உங்கள் குறை தீராது என்று சொல்லிவிட முடியுமா என்ன? குடும்பத்தில் சமநீதி காண்பதற்கு வழி பிறந்தால், உங்கள் குறை நீங்கிவிடலாமே! (17.6.2009)
கேள்வி: மக்களவையில் மகளிருக்காக இட ஒதுக்கீடு மசோதா நூறு நாள்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று குடியரசுத் தலைவர் தனது உரையில் கூறியுள்ளாரே?
பதில்: சில தண்டனைகள் சொன்னபடி நடப்பதில்லை. அஃப்ஸல் தூக்குத் தண்டனை அப்படியே பெண்டிங் ஆக இருக்கிறதே? அந்த மாதிரி இதுவும் தொங்கலில் விடப்பட்டால்தான் உண்டு. (24.6.2009)
கேள்வி: மக்களவை சபாநாயகர் பெண் என்றால் இனி அமளியின்றி சபை நடைபெறுமா?
பதில்: ஒரு வீட்டில் பெண்கள் அதிகாரம் ஓங்கி இருந்தால், அந்த வீட்டில் அமளி, துமளி இல்லாமல் போய்விடுமா? அந்த மாதிரிதான் இதுவும். (1.7.2009)
கேள்வி: கருநாடகாவில், ஷோபாவின் அமைச்சர் பதவி தியாகத்தாலும், பா.ஜ.க. மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் செய்து வைத்த சமரசத்தாலும் கருநாடக பா.ஜ.க. அமைச்சரவையின் சிக்கல் தீர்ந்துள்ளதே? பெண்களின் பெருமை இப்போதாவது தங்களுக்குப் புரிந்திருக்குமே?
பதில்: புரிகிறதே! ஒரு பெண்மணி தன் பதவியை விட்டு விலகுவதாலும், மற்றொரு பெண்மணி தனக்கு எந்தப் பதவியையும் நாடாமல் சமரசம் தேடியதாலும் பிரச்சினை தீர்ந்திருக்கிறது. அதாவது பெண்களில் பதவியை நாடாமல் இருக்கிற வரை பிரச்சினைகள் தீர வழியுண்டு. இதைத்தானே நீங்கள் சுட்டிக் காட்டுகிறீர்கள். புரிகிறது. (21.2.2009)
துக்ளக்கில் சோ எழுதிய இந்தக் கேள்வி பதில்களுக்கு விளக்கமும் வேண்டுமோ! கைப் புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?
பெண்கள் யார்?
உயர்ந்தவர்களாக இருக்க விரும்பாதவர்கள்.
பெண்களுக்கு சம உரிமை என்றால் என்ன?
மாமியார் மருமகளிடத்தில் எங்காவது சம உரிமை இருக்குமா?
பெண்கள் எத்தகையவர்கள்?
என்ன தவறு செய்தாலும் அந்தத் தவறை தான் செய்யாதது போல மற்றவர்கள்தான் காரணம் என்று சொல்லக் கூடியவர்கள்.
மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தள்ளிப் போகிறதே?
சில தண்டனைகள் சொன்னபடி நடப்பதில்லை.
மக்களவையில் சபாநாயகர் பெண் என்றால் இனி அமளி துமளி நடைபெறாது அல்லவா?
ஒரு வீட்டில் பெண்கள் அதிகாரம் ஓங்கி இருந்தால், அந்த வீட்டில் அமளி துமளி இல்லாமல் போய்விடுமா?
- இப்படி எல்லாம் பெண்களை மட்டம் தட்டி இழிவுபடுத்தி எழுதக் கூடியவர்கள் நம் தலைமுறையில் இருந்தார்கள் - இருக்கவும் செய்கிறார்கள். குருமூர்த்திகள், மோகன் பாகவத்துகள் தொடர்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள். நினைவிருக்கட்டும்!
70% பெண்கள் பெண்மையற்றவர்கள்
- துக்ளக் குருமூர்த்தி
பா.ஜ.க-வின் மறைமுக செய்தித் தொடர்பாள ராகவே பேசி வரும் ஆடிட்டர் குருமூர்த்தி சென்னையில் உள்ள தனியார் மருத்துவ அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பெண்கள் குறித்து பேசியது என்ன?
ஆங்கிலமும், நகர வாழ்க்கையும் நாட்டின் பாரம்பரிய கலாசாரத்தையே சீரழித்துக் கொண்டி ருக்கிறது என்ற விஷயத்துக்கு வந்த குருமூர்த்தி, தற்போதைய காலகட்டத்தில் 30 சதவிகித பெண்களே பெண்மையுடன் இருக்கின்றனர். அவ்வாறு பெண் மையுடைய பெண்களை மட்டுமே தெய்வமாகக் கருதுவதாகவும் பேசினார். (25.8.2019)
இந்த மனுவாதிப் பேரர்களை என்ன செய்வதாக நினைப்பு?
No comments:
Post a Comment