பா.ஜ.க. ஆட்சி என்பது பார்ப்பனர் ஆட்சியே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 22, 2020

பா.ஜ.க. ஆட்சி என்பது பார்ப்பனர் ஆட்சியே!

இந்த இரு தகவல்களுக்கும் நேர்மையான பதில் சொல்லுங்கள்!


சமூகநீதிக் கண்ணோட்டத்தில் இரண்டு செய்தி களுக்குப் பா.ஜ.க. ஆட்சி நேர்மையான முறையில் பதில் சொல்லவேண்டும் - சொல்லுமா என்று எதிர்பார்க்கிறோம்.


செய்தி 1: பாரத ஸ்டேட் வங்கி 8653 ஜூனியர் அசோசியேட் பணிகளுக்குத்  தேர்வு நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கட்-ஆஃப் மார்க்கும் வெளியாகியுள்ளது.


பொதுப் பிரிவினருக்கு - 62


தாழ்த்தப்பட்டோருக்கு - 62


பிற்படுத்தப்பட்டோருக்கு - 62


பழங்குடியினருக்கு 59.5


உயர்ஜாதி ஏழைகளுக்கு (EWS) 57.76.


பாரத ஸ்டேட் வங்கியில், பணிக்கு இடம் கிடைக்கவேண்டுமானால், பழங்குடியினர் பெற வேண்டிய மதிப்பெண் 59.5. உயர்ஜாதியினர் பெறவேண்டிய மதிப்பெண்ணோ 57.76.


சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் இட ஒதுக்கீடு என்ற அரசமைப்புச் சட்டத்தின் நோக் கத்தை - பொருளாதார அளவுகோல் உடைத்துத் தூள் தூளாக்குகிறதா இல்லையா?


பொருளாதார அளவுகோல் உயர்ஜாதியினர் நலனுக்கு என்பதும் விளங்கவில்லையா?


சிந்திப்பீர்!


செய்தி 2: ‘நீட்' தேர்வைப்பற்றியது.


‘நீட்' தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 113 மதிப் பெண் எடுத்தாலே மருத்துவக் கல்லூரியில் சேர விண்ணப்பம் போடலாம். அவ்வளவுதான் - இது தகுதி மார்க்தான் - மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என்று பொருள் அல்ல!


அதிக மதிப்பெண்களிலிருந்து தர வரிசை நிர்ணயிக்கப்படும்; - அந்த வகையில், தமிழ்நாட்டில் ‘நீட்' தேர்வில் இவ்வாண்டு வெற்றி! வெற்றி!! என்று கூச்சல் போடுகிறார்கள் அல்லவா!


தமிழ்நாட்டில் ‘நீட்' தேர்வு எழுதிய 99 ஆயிரத்து 610 மாணவர்களில் 57 ஆயிரத்து 215 பேர் தகுதி பெற்றுள்ளனர்.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 6692 பேர் ‘நீட்' எழுதினர்.


இதில் 1615 மாணவர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள் 738 பேரும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 872 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று டமாரம் கிழியும் அளவுக்குக் கூச்சல் போட்டனரே -


ஆனால், நடந்தது என்ன -


உண்மை நிலை என்ன?


தமிழக அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 8 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்வியில் சேர இடம் கிடைக்கும். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள், மாற்றுத் திறனாளி மாணவர்கள் இருவர் சேர்த்து மொத்தம் 8 பேருக்குத்தான் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் (‘டைம்ஸ் ஆஃப் இந்தியா', 21.10.2020, பக்கம் 4).


சமூகநீதிக்குக் குழி தோண்டிப் புதைத்து உயர்ஜாதியினர் பலன் அடையும் திட்டம்தான் ‘நீட்' என்பது புரியவில்லையா?


பா.ஜ.க. ஆட்சி என்றால், பார்ப்பன ஆட்சிதான் என்பதற்கு வேறு எடுத்துக்காட்டும் தேவையோ?


உயர்ஜாதியில் ஏழைகளுக்கு (EWS) 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரசும், சி.பி.எம். கட்சிகளும்கூட சிந்திக்க வேண்டும்.


 


கி.வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


22.10.2020


No comments:

Post a Comment