மற்றொரு மீனாட்சிபுரம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 22, 2020

மற்றொரு மீனாட்சிபுரம்!

திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் இந்து மதத்தின் தீண்டாமை கொடுமையை எதிர்த்துத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 300 பேர்கள் இஸ்லாம் மார்க்கம் தழுவினார்கள். எவ்வளவோ ஆசை வார்த்தைகளையும் ஒரு கட்டத்தில் அச்சுறுத்தலைக் காட்டியும் அம்மக்கள் உறுதியாகவே இருந்தனர். இஸ்லாம் தழுவிய அம்மக்களை நேரில் சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தினார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் (25.7.1981). மத மாற்றத்திற்குப் பிறகு அந்தக் குடும்பங்கள், கல்வி, பொருளாதாரத்தில் வளர்ந்துள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன.


29 ஆண்டுகளுக்கு முன் இஸ்லாம் தழுவினார்கள் தாழ்த்தப்பட் டோர் என்றால், இப்பொழுது உத்தரப்பிரதேசத்திலே ஒடுக்கப்பட்ட மக்கள் இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு, பவுத்தம் தழுவியுள்ளனர்.


தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொலை சம்பவமும், அதனை மாநில அரசு கையாண்ட விதமும் தங்களை இந்த முடிவுக்கு மாற்றியதாக ஆங்கில ஊடகம் ஒன்றில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  உயர்ஜாதி இந்துக்கள் தங்களை ஏற்றுக் கொள்ளவில்லை; மாநிலத்தை ஆளும் சாமியார் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசின் மீதும் தங்களுக்கு நம்பிக்கை போய் விட்டது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


காசியாபாத்தில் உள்ள கரேரா கிராமத்தைச் சேர்ந்த இவர்கள், கடந்த அக்டோபர் 14 அன்று பவுத்தம் தழுவியுள்ளனர். இந்த நாள் குறியீட்டு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது. ஏனெனில் 64 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான், டாக்டர் அம்பேத்கர் 3 லட்சத்து 65 ஆயிரம் தாழ்த்தப்பட்ட மக்களுடன் பவுத்த மதத்தைத் தழுவினார். இந்து மதத்திலிருந்து வெளியேறும்வரை, ஜாதிய ஒடுக்குமுறையிலிருந்து தப்பிக்க முடியாது என்பதுதான் அன்றைய தினம் அம்பேத்கரின் பவுத்தம் தழுவுதலுக்குக் காரணம். இன்றும் அதே காரணத்திற்காகவே கரேரா கிராமத்தைச் சேர்ந்த தாங்கள் 236 பேரும் பவுத்தத்தைத் தழுவியுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.


தங்களின் கரேரா கிராமத்தில் உயர்ஜாதி இந்துக்களான சவுகான்கள் 5 ஆயிரம் பேர் என்ற எண்ணிக்கையில் வசிப்பதாக வும், தாங்கள் 2 ஆயிரம் பேர் இருப்பதாகவும் கூறும் அவர்கள், தங்களின் கிராமத்தில் கடுமையான ஜாதிய ஒடுக்குமுறை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.


இந்த நிலைக்கு என்ன காரணம்? அடிப்படையிலேயே ஹிந்து மதம் தீண்டாமையை அனுசரிக்கும் மதமே! சங்கராச்சாரியார்களே 'தீண்டாமை க்ஷேமகரமானது' என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கின்றனர்.


போதும் போதாதற்கு பிஜேபி மத்தியிலும், பல மாநிலங்களிலும் ஆட்சிக்கு வந்த நிலையில் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தாக்குதலும், கொலைகளும், தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள்மீது பாலியல் வன்புணர்வுகளும், கொலைகளும் அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்டன.


எடுத்துக்காட்டுக்காக சில நிகழ்வுகள் இதோ:



  1. 1.4.2018: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் ரத்தோட்  சொந்த மாக  குதிரைஒன்றை வாங்கி அதில் ஏறி ஊருக்கு வந்ததால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் 

  2. 9.10.2017: காந்தி நகரைச் சேர்ந்த பியூஸ் பர்மார் என்ற தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் மீசைவளர்ப்பதை பழக்கமாக கொண்ட வர், அவர் இருந்த பகுதில் உள்ள உயர்ஜாதியினர் அவர் மீசை வளர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவரையும், அவரது உறவினரையும் பிடித்து கடுமையாகத் தாக்கினர். படுகாயமடைந்த இருவரும் காந்திநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

  3. 12.10.2017: அதே குஜராத்தில் ஜூனாகாட் பகுதியில் கிருனாஸ் மங்கேரியா என்பவரும் இதே காரணத்திற்காக தாக்கப்பட்டு அவரது மீசை மற்றும் தலையை மழித்து விட்டனர்.

  4. 11.10.2015: ஊரில் உயர்ஜாதியினருக்கு நிகராக வீடுகட்டிய தாழ்த்தப்பட்ட குடும்பத்தினரை ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றி எரித்து கொலை செய்ய நடந்த முயற்சியில் இரு குழந்தைகள் கொல்லப் பட்டுள்ளன. 10 மாதங்களே ஆன ஒரு குழந்தையும், 2 வயதான இன்னொரு குழந்தையும் கொல்லப்பட்ட சம்பவம் நாடு தழுவிய கண்டன அலையை எழுப்பியுள்ளது.

  5. 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் 5 பேர் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டனர்.

  6. 2016 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி ஹரியானா மாநிலம் குர்கானில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த 2 பேரை மாட்டு சாணத்தை உண்ண வைத்தனர்.

  7. 2016, ஜூன் மாதம் சுமார் 40 பேர் கொண்ட பஜ்ரங்தள் குண்டர்கள் கருநாடக மாநிலம் கோப்பா அருகே தாழ்த்தப்பட்ட குடும்பம் மாட்டுக் கறி வைத்திருப்பதாக குற்றம்சாட்டி கொலை வெறித் தாக்குதலை நடத்தியது இதில் 3 வயது சிறுமி உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்

  8. 2016 ஜூலை மாதம் குஜராத் மாநிலம் உனாவில் செத்த மாட்டின் தோலை உரித்தார்கள் எனக் குற்றம்சாட்டி தாழ்த்தப்பட்ட இளைஞர் களைக் கொடூரமாகத் தாக்கினர்.

  9. பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி மதுரா, 1972-ஆம் ஆண்டு இரண்டு காவல்துறையினரால் காவல்நிலையத்திலேயே வன்கொடுமை செய்யப்பட்டாள். அதுவும், மதுராவை விசாரணைக் கென்று இருக்கச் சொல்லிவிட்டு, அவளின் சகோதரனை காவல் நிலையத்தைவிட்டு வெளியேற்றி கதவைப் பூட்டினார்கள். இந்த பாலியல் வன்கொடுமைக்கு அலகாபாத் நீதிமன்றம் 5 ஆண்டு சிறைதண்டனை அளித்தது, இந்த தண்டனையை எதிர்த்து காவலர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர் இந்த வழக்கில் 1979-ஆம் ஆண்டு இறுதித் தீர்ப்பளித்த இந்திய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றம் என்ன சொல்லியது தெரியுமா?


"அந்தப் பெண் இதற்கு முன்பே பாலியல் உறவு கொண்டிருந்ததால், இந்த வழக்கில் அந்தப் பெண்ணின் சம்மதத்துடன்தான் காவலர்கள் பாலியல் உறவு கொண்டிருக்க முடியும்" என்று கூறி குற்றவாளிகளை விடுதலை செய்ததார் உச்ச நீதிமன்ற நீதிபதி கோஷல், விடுதலை செய்த சில நாட்களிலேயே அந்தச் சிறுமி சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்தார்.



  1. உத்தரப் பிரதேசம் சகாரன் பூர் என்ற இடத்தில் 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டம் நடத்திய தாழ்த்தப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அம்பேத் கர் படத்தை அகற்றிவிட்டு வரலாற்றிலேயே இல்லாத மகாரானா பிரதாப் சிங் என்ற மன்னரின் பிறந்த நாள் என்று கூறி அவரது படத்தை வைத்து வணங்குமாறும் கூறினார்கள். இந்த நிகழ்வுகளை காவல்துறை வெறுமனே படம் பிடித்துக் கொண்டு மட்டுமே இருந்தது.


வன்முறைத் தாக்குதல்களும், வன்புணர்வுகளும், இந்துத்துவா பேசும் கூட்டத்தாரால் நாளும் நடத்தப்படும் நிலையில் வருணாசிரம எதிர்ப்பை மய்யப்படுத்தும் சமத்துவச் சீர்மையும், அறவழிப் பண்பும் கொண்ட பவுத்தத்தைத் தழுவியது சரியான முடிவு மாத்திர மட்டுமல்ல - தீண்டாமைக்கு எதிரான சரியான சவுக்கடியும் - ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கான வழிகாட்டுதலும் ஆகும். அதுவும் அண்ணல் அம்பேத்கர் பவுத்தம் தழுவிய அதே அக்டோபர் 14இல் பவுத்தம் சென்றது வரலாற்றுப் புகழ் வாய்ந்தததே!


No comments:

Post a Comment