போலிச் சந்நியாசி கதைக்குள் கதை
“ஒரு நகரத்தில் தனியே ஒரு பகுதியில் மடம் ஒன்று இருந்தது. அதில் காவி உடை தரித்த சந்நியாசி ஒருவன் இருந்தான். அவன் பல வேள்விகளைச் செய்து வந்தான். அதற்காக அங்குள்ள மக்கள் விலை உயர்ந்த உடைகளை சந்நியாசிக்கு வழங்கினார்கள்.
அவன் சந்நியாசியானதால் அந்த உடை களை அணிவதில்லை. ஆகவே, அவற்றை எல்லாம் விற்றுப் பெருஞ் செல்வத்தைத் திரட்டினான். தன்னிடம் பணம் நிறையச் சேர்ந்ததால் அவன் யாரையும் நம்புவதில்லை, பணத்தைப் பத்திரமாக பையில் வைத்து எப்பொழுதும் அதைத் தன் அக்குளில் வைத்துக்கொண்டே திரிந்தான். இரவும் பகலும் அந்தப் பை அவனை விட்டு நீங்காமல் இருந்தது.
பணத்தைச் சேர்ப்பதிலும் துன்பம்; சேர்த்த பணத்தைக் கட்டிக் காப்பதிலும் துன்பம்; அதை இழந்து விட்டாலும் துன்பம்; செலவிட்டு விட்டாலும் துன்பம்; சீச்சி, இப்படியாக எப்பொழுது பார்த்தாலும் பணத்தால் துன்பமே உண்டாகிறது என்ற பேச்சு மிகவும் உண்மை.
சந்நியாசி பணப்பையை எப்பொழுதும் அக் குளில் வைத்துக் கொண்டு திரிவதை ஒருவன் கவனித்துப் பார்த்தான். அவன் ஒரு கெட்ட திருடன், அந்தப் பணப்பையை எப்படி திருடலாம் என்று யோசித்தான்.
சந்நியாசி இருக்கும் கட்டிடம் கெட்டியான கல் கட்டிடம், ஆகையால் அதை உடைத்து உள்ளே நுழைய முடியாது. அவனோடு நெருங்கிப் பழகி, அவனைத் தன்னிடம் நம்பிக்கை கொள்ளும்படி செய்து விடலாம் என்று யோசித்தான்.
‘ஆசைகளை விட்டு துறந்தவன் அதிகார பீடத்தில் அமர விரும்பமாட்டான்; காம இச்சை இல்லாதவன் அலங்காரம் செய்து கொள்ளப் பிரியப்படமாட்டான்; உண்மை பேசுபவன் நயவஞ்சகனாக இருக்கமாட்டான். புத்தி இல்லாதவன் முகஸ்துதி செய்யமாட்டான் என்றவாறு யோசித்து அந்தத் திருடன் ஆஷாடபூதியாகத் திட்டமிட்டான் (‘ஆஷாட' என்றால் பொய் வேடம் புனைந்து பேசி மோசம் செய்பவன்).
ஒருநாள் சந்நியாசியிடம் சென்று, “ஓம் நமோ நாராயணா!” என்று கூறியபடி, சந்நியாசியின் கால் களில் விழுந்து வணங்கினான், மிகவும் பணிவோடு, “சுவாமிகளே! இந்த உலகம் சாரம் அற்றது. வாலிபப் பருவமோ அருவியின் வேகத்தைப் போன்றது; வாழ்க்கையோ காய்ந்த புல்லில் பற்றிக் கொண்ட நெருப்புப் போன்றது. சுகபோகங்களோ மேகத்தின் நிழலைப் போன்றது; மனைவி, மக்கள், வேலையாட் கள், நண்பர்கள் ஆகியோரின் பாசமோ கனவு போன்றது. இவை அனைத்தையும் நான் நன்றாக உணர்ந்தவன். தங்களிடம் உபதேசம் கேட்க வந்திருக் கிறேன், சம்சார சாகரத்தைக் கடப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? எனக்கு அருள்புரிய வேண்டும்“ என்று பணிவோடு வேண்டினான்.
இந்தச் சொற்களைக் கேட்ட சந்நியாசி தேவசர்மா புன்முறுவலோடு, “பக்தனே! இவ்வளவு இளம் வயதி லேயே இப்படி வெறுப்படைந்த நீயே உண்மையி லேயே பாக்கியசாலி!”
“இளம் வயதில் எல்லாவற்றையும் துறந்தவனே உண்மையான துறவி, அய்ம்புலன்களும் அனுப வித்து தனித்து போனவன் எவன் தான் புலனடக் கத்தோடு இருக்க முடியாது?”
“பண்புள்ளவர்களிடம் முதலில் மனதும், பிறகு உடலும், முதுமை அடைகின்றது, கெட்டவர்களிடம் உடல் முதுமை அடைகிறதே தவிர, மனமானது முதுமை அடைவதே இல்லை.”
“சம்சார சாகரத்தைக் கடக்கும் ரகசியத்தைக் கேட்கிறாய்” கூறுகிறேன்:
“எந்தக் குலத்தில் பிறந்தவன் ஆனாலும், இறை வன் முன்னிலையில் எல்லோரும் சமமே! சண்டா ளன், சூத்திரன், அந்நியன், சடைமுடி உடையவன், காவியுடை உடுத்தியவன் என எத்தகையோராக இருந்தபோதிலும் குருவின் மூலம் சிவ மந்திரத்தை உபதேசம் பெற்றுவிட்டால், அவன் திருநீறு பூசிய அந்தணன் ஆகி விடுகிறான்.”
“தினந்தோறும் நீராடி, சிவ மந்திரத்தை உச்சரித்து, ஒரு மலரை சிவலிங்கத்தின் முடியில் வைத்து வழிபடுகிறவர்களுக்கு மறுபிறப்பு இல்லை” என்று கூறினார் தேவசர்மா.
இதைக் கேட்டுக்கொண்ட ஆஷாடபூதி தேவ சர்மாவின் பாதங்களைப் பிடித்து, பணிவான குரலில், “சுவாமி! எனக்கு ஒரு விரதம் அருள்புரிய வேண்டும்'' என்று வேண்டிக் கொண்டான்,
“அப்படியே செய்கிறேன். இரவில் நீ மடத்துக்குள் நுழையக்கடாது. ஏனெனில், பற்றற்ற சந்நியாசிகள் ஒன்று சேர்ந்து இருக்கக்கூடாது என்று எனக்கும் உனக்கும் சொல்லப்பட்டிருக்கிறது.”
“அமைச்சர்களின் தீய அறிவுரைகளால் அரசன் அழிகிறான்; உலக வாழ்வில் பற்று வைப்பதால் சந்நியாசி கெட்டுப் போகிறான்; பெற்றோர் செல்லம் கொடுப்பதால் குழந்தை கெடுகிறது; மறைகளை ஓதாததால் பிராமணன் கெடுகிறான்; கெட்ட நடத்தை உடைய புதல்வனால் குடும்பம் கெடுகிறது; முட்டா ளின் சொற்களால் நல்ல குணம் கெடுகிறது; மரியா தைக் குறைவான நடத்தையால் நட்பு கெடுகிறது; நீண்ட நாள் பிரிவால் பாசம் கெடுகிறது; மது அருந்து வதால் பெண் கெடுகிறாள்; கவனம் செலுத்தாமையால் நிலம் பாழாகிறது; கெட்ட நடத்தையால் செல்வம் அழிகிறது; வரவுக்கு மிஞ்சிய செலவால் பணம் அழிகிறது.
“ஆகையால், நீ விரதம் எடுத்துக் கொண்டு, மடத்தின் முன்புறத்திலுள்ள குடிசையில் படுத்து உறங்க வேண்டும்'' என்று சந்நியாசி கூறினான்.
“சுவாமி! தங்கள் கட்டளைப்படியே செய்கிறேன்; எனக்கு மறுபிறவியின் பலன் கிடைக்கும்“ என்று கூறினான் ஆஷாடபூதி.
ஆஷாடபூதி படுக்கைக்குச் செல்லுமுன் அவனுக்கு உபதேசம் செய்து அவனை சீடனாக்கிக் கொண்டான் சந்நியாசி.
ஆஷாடபூதி குருவுக்குக் கால் பிடித்து விட்டான். அவருக்குத் தேவையானவற்றைக் கொண்டு வந்து கொடுத்தான். மேலும், பல உபசாரங்கள் செய்து குருவைக் களிப்புறச் செய்தான்.
என்னதான் உபசாரம் செய்தாலும், எவ்வளவுதான் பணிவிடைகள் செய்த போதிலும் சந்நியாசி மட்டும் பணப்பையை அக்குளிலிருந்து எடுக்கவே இல்லை.
இப்படியாக நாட்கள் சென்றன. ஆஷாடபூதிக்கு ஆத்திரம் தாளவில்லை. “ஆ, கெட்ட காலமே! சந்நியாசிக்கு என்மீது நம்பிக்கை உண்டாகவில் லையே; பகலிலேயே அவனைக் குத்திக் கொன்று விட்டால் என்ன? உணவில் விஷத்தைக் கலந்து கொடுத்தால் என்ன? ஆடுமாடுகளை அடித்துக் கொல்வதைப் போல் இவனைச் சாகடித்தால் என்ன?” இவ்வாறு ஆஷாடபூதி சிந்திக்கலானான்.
அவன் இவ்வாறு சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் போது, சந்நியாசி தேவசர்மாவின் மற்றொரு சீடனின் புத்திரன் ஒருவன், குருவை அழைத்துச் செல்வதற் காக கிராமத்திலிருந்து வந்து சேர்ந்தான். “சுவாமி! எனக்கு உபநயனச் சடங்கு நடைபெறுவதால் தாங் கள் என் வீட்டுக்கு வந்து அருள் புரிய வேண்டும்“ என வேண்டிக் கொண்டான்.
தேவசர்மாவும் அதற்கு இணங்கி, ஆஷாட பூதியுடன் புறப்பட்டன். வழியில் நதி ஒன்று குறுக் கிட்டது. அப்பொழுது அக்குளிலிருந்து பணப்பையை எடுத்து ஒரு கந்தல் துணியில் சுற்றி வைத்து, “சீடனே, நான் மலஜலம் கழித்து வருகிறேன். அதுவரை இந்தக் கந்தையையும், இதர பொருள்களையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்” என்று கூறி, அவனிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றான் சந்நிதியாசி. அவன் கண்ணுக்கு எட்டிய தூரம் சென்றதும் ஆஷாடபூதி பணப்பையை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடிவிட்டான்.
சீடனின் நல்ல குணங்களைக் கண்டு வியந்து, நிம்மதியோடு மலம் கழிக்க உட்கார்ந்தான் சந்நியாசி.
No comments:
Post a Comment