தந்தை பெரியார் அவர்கள் ரஷ்யாவிற்குச் செல்வதற்கு முன்பாகவே ஏங்கல்ஸ் - மார்க்ஸ் அறிக்கையை ‘குடிஅரசில்' வெளியிட்டவர்; ரஷ்யாவிற்குப் போய்விட்டு வந்த ஈடுபாட்டினால் அதனை வெளியிடவில்லை!
தமிழர் தலைவர் வரலாற்று விளக்கவுரை
சென்னை, அக்.3 தந்தை பெரியார் அவர்கள் சோவியத் ரஷ்யாவிற்குப் போய்விட்டு வருகிறார்கள் 1932 இல். அதற்கு முன்பாகவே அய்யா அவர்கள் கம்யூனிஸ்ட் மேனிபஸ்டோ என்று சொல்லக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை, ஏங்கல்ஸ். மார்க்ஸ் அறிக்கையை ‘குடிஅரசி'ல் முதன்முதலாக தமிழில் வெளியிட்டார். அதற்குப் பிறகுதான் அய்யா அவர்கள் சோவியத் ரஷ்யாவிற்குப் போகிறார். ரஷ்யாவிற்குப் போய்விட்டு வந்த ஈடுபாட்டினால் அதனை வெளியிடவில்லை. அதற்கு முன்பே வெளியிட்டுள்ளார் என்ற வரலாற்றினை எடுத்துக்காட்டி விளக்கவுரையாற்றினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
கடந்த 25.7.2020 மாலை 6 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘ஒப்பற்ற தலைமை'' (பொழிவு-5) எனும் தலைப்பில் காணொலிமூலம் கழகத் தோழர்களிடையே சிறப்புரையாற்றினார்.
அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
இதே கனவான்கள் மற்றொரு சமயத்தில் அதாவது காரியங்கள் ஒழுங்காய் நடப்பதைக் காணும்போது வெட் கப்படும்போது சிலர் மீட்டிங் நடக்கிறது அலைகிறார்கள் நன்றாய் பேசுகிறார்கள், பாடுபடுகிறார்கள், உணர்ச்சி இருக்கிறது. ஆனால் அமைப்பு இல்லை ஒழுங்கு முறை இல்லை என்பதாக குற்றம் சாட்டுவது.
‘‘அமைப்பு ஒழுங்குமுறை இல்லாமலா இவ்வளவு காரியம் நடக்கிறது. ஜில்லா, தாலுகா தோறும் சங்கம் இருக்கிறது. வருடம்தோறும் ஜில்லா, தாலுக்கா மாநாடுகள் நடக்கின்றன. வாரந்தோறும் பல கூட்டங்கள் நடந்ததாக, பல ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கிராமங்களில் நடந்ததாக எல்லாப் பத்திரிகைகளிலும் சேதி வருகின்ற தோடு ஏதாவது ஒரு சங்கத்திற்குத் தீர்மானமோ தந்தியோ செய்யும்படி தலைவர் சொன்னால் உடனே 200க்கு குறையாமலேயே தீர்மானங்கள் தந்திகள் பறக்கின்றன. 35000 மெம்பர்கள் 200 ஸ்தாபன அமைப்பு இருக்கின்றன. இந்நிலையில் அமைப்பு இல்லை, ஒழுங்கு இல்லை என்று சொல்லுகிறீர்களே இது நியாயமா என்று யாராவது கேட்டால், அதற்குப் பதில் என்னவென்று பார்த்தால் அதுதான் ரசமான சேதியாக இருக்கும். என்னவென்றால், எல்லாம் சரி, நிலைமை நன்றாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் தலைவரின் சர்வாதிகாரப்போக்கு நமக்குப் பிடிக்கவில்லை. யாரையும் கலப்பதில்லை. யாரையும் மதிப்பதில்லை. யாரிடமும் எந்த வேலையும் ஒப்படைப்ப தில்லை. எல்லாம் தானே பார்ப்பது, யாரையும் நம்புவ தில்லை. இப்படி நடந்தால் அவரது உடல் நலம் என்னாகும். மற்றவர்கள் சுயமரியாதை என்ன ஆகும்? என்று சொல்லி வருத்தப்படுவது போல் பேசுவது ஆகிய இவைகளும் இவை போன்றவைகளும்தான் இன்று புதுக்கட்சிகளுக்கு காரணங்களாக இருக்கின்றன. மற்றும் இப்படியெல்லாம் சொல்லுகிற தோழர்கள் யார் என்றால், மொத்தமாகப் பார்த்தால் நிர்வாகக் கமிட்டிக்குச் சரியாய் வராதவர்கள். தாங்கள் ஏற்றுக்கொண்ட வேலையை, தங்களுக்குக் கொடுத்த வேலையைச் சிறிதும் செய்யாதவர்கள்."
எனவேதான், ஒழுங்கில்லை என்று சொன்னார் பெரியார். He never belive in organisation அவருக்கு எல்லாமே அப்படி அப்படியே இருக்கவேண்டும். அமைப்பு ரீதியாக வரக்கூடாது என்றெல்லாம் பதில் சொன்னார்கள்.
அதற்கெல்லாம் மிகத் தெளிவாகப் பதில் சொல்லிவிட்டு,
இவர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? என்பதை 1945 இல் சொல்லக்கூடிய கட்டம் இருக்கிறது.
துரோகங்களை எப்படி பெரியார் சந்தித்தர்கள் என்ப தற்காக சில செய்திகளை உங்களுக்குச் சுட்டிக்காட்டுகிறேன்.
கூட்டத்திற்கு வருவதாய் ஒப்புக்கொண்டு பத்திரிகை யில் போடச் செய்து விளம்பரம் ஆன பிறகு பல ஆயி ரக்கணக்கான மக்கள் வந்து சேரும்படி நிகழ்ச்சிகளைப் பொறுப்பாளர்கள் ஏராளமான செலவு செய்து ஆடம்பரம் செய்த பிறகு வர சவுகரியமில்லை என்று தந்திகூட கொடுக்காமலும், மனதார குறிப்பிட்ட அழைப்புக்குப் போக முடியாது என்று கருதி இருந்தும் விளம்பரம் செய்வதை அனுமதித்துக் கொண்டு இருந்துவிட்டு போகாமல் ஏமாற்றியும் இயக்கக் காரியத்தைவிட, சீட்டாட் டம், உல்லாச விருந்து, டிராமா, சினிமா, பந்தயம், தங்கள் சினேகிதர் கூட்டுறவு முக்கியம் என்று கருதுகிறவர்களும், தலைவர் இவர்கள் வீடு தேடி வந்து காத்திருக்கிறார் என்று முதல் நாள் மாலை 7 மணிக்கு தலைவரின் ஆள் சென்று சொன்னால், இருக்கச் சொல் 2 ஆட்டம் ஆடிவிட்டு வருகிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டு, விடியற்காலம் 3 மணி வரை விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த தலைவரிடம் 'மன்னிக்கணும்' என்று சொல்லிக் கொண்டு வந்து 10 நிமிஷம் பேசிவிட்டுப் போய் விடுகின்றவர்களும், ஊரில் இருந்தும் தலைவர் தங்கள் ஊருக்கு வந்து இரண்டு நாள் இருந்தும் வந்து பார்க்காதவர்களுமான பிரபுக்கள் தங்கள் பணத்தைக் கடவுளாக, கட்சியாக, தங்கள் வாழ்வைப் பதவியை தேவேந்திர லோகமாகக் கருதி இருக்கிற மக்கள் இப்படிப் பேசுகிறார்கள் என்றால் தலை வரின் சர்வாதிகாரத்தைப்பற்றி இவர்களுக்குப் பேச யோக்கியதை இருக்க முடியுமா? உண்மையில் இவற்றைப் பொறுத்துக் கொண்டும் இவர்கள் கட்சியில் இருக்க இடம் கொடுத்துக் கொண்டும் இருந்ததால், தலைவர் சர்வாதி காரம் செய்தவரா அல்லது தலைவருக்கு சாதாரண மரி யாதைக்குரிய அதிகாரம் கூட செய்யத் தெரியவில்லை என்று சொல்லத் தக்கவரா என்பது யோசிக்கத்தக்கதாகும்.
இன்றும்கூட மெம்பர் பதவி விட வேண்டும். ஜில்லா போர்ட் பிரசிடெண்டு பதவி விட வேண்டும். சேர்மென் பதவி விட வேண்டும், பட்டம் விட வேண்டும், சர்க்கார் கொடுத்த கவுரவ நியமனம் விட வேண்டும், எலக்ஷனுக்கு நிற்கக் கூடாது என்கின்ற நிபந்தனை கட்சியில் இல்லாமல் இருந்திருந்தால், மற்றும் ஏதாவது தீவிர கிளர்ச்சி செய்ய வேண்டும் என்று தலைவர் துடிக்காமல் இருந்திருந்தால் இன்றைய புதுக்கட்சிகளுக்கும் குற்றம் குறை சொல்லும் தன்மைக்கும் இடம் ஏற்பட்டிருக்க முடியவே முடியாது. ஏதோ சில கூலிகள் கூப்பாட்டுடனும் தலைவரிடம் உள்ள பொறாமைக்காரர்கள் இக்கூலிகளுக்கு ஏதாவது கொடுத்து, வையும்படிச் செய்து திருப்தி அடைவதுடனுமே இருந் திருப்பார்கள். ஆகவே புதுக் கட்சிகளுக்கு காரணம் பட்டம் பதவி வெறுப்பும் ஜெயில் பயம் காரணமே தவிர பணமல்ல, கணக்கல்ல, அமைப்பல்ல, ஒழுங்குமுறை அல்ல, சர்வாதிகாரமல்ல. இங்கிலீஷ் தெரியாமை அல்ல. பங்கிட்டுக் கொடுக்காமை அல்ல என்பதை பந்தயம் கட்டி ஆதாரத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம். இதை ஏன் தெரிவிக்கிறோம் என்றால், பல கூலிகளின் பத்திரிகை களிலும் நாலாந்தர மக்களைக் கூலிக்கமர்த்தி மிக்க இழி வாகவும் ஈனத்தனமாகவும் தலைவரைக் குறை கூறியும் தலைவரது வேலைகளுக்கு கேவலமான எண்ணம் கற்பித்தும் கட்டுப்பாடாகப் பிரச்சாரம் செய்யப் பலமான திட்டம் போட்டு காரியம் நடக்கிறபடியால் பொது மக்களுக் குச் சிறிதாவது உண்மை விளங்கட்டும் என்பதற்கு ஆகவே யாகும்.
குறை கூறினவர்கள் யார்? புதுக் கட்சிகள் துவக்கித் தொல்லை கொடுப்பவர்கள் யார்? ஆள் விட்டு வையச் செய்கிறவர் யார்? இந்த ஆட்களும் இப்படிப்பட்டவர்கள் என்பதை மனசாட்சிக்கு விரோதமில்லாமல் சிந்தித்துப் பார்த்து யாரும் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று வேண்டுகிறோம். நல்ல காரியங்கள் நடக்க வேண்டிய சந் தர்ப்பத்தில் அதுவும் ஒரு பெரிய சமுதாயத்தின் இழிநிலை மாற்றமடைய வேண்டிய அளவு தலைகீழ் புரட்சி நடக்க வேண்டிய சமயத்தில் இப்படி ஒரு கூட்டம் புறப்பட்டதானது மிகவும் வருந்தத்தக்க சம்பவமானாலும் உண்மை நிலையை இவ்வளவுகூட வெளியிடாமல் இருக்க முடிய வில்லை.
ஆதலால் உண்மைகளில் ஒரு சிறிது, அதுவும் மிக்க மனவருத்தத்துடன் வெளியிடுகிறோம்.
‘குடிஅரசு' தலையங்கம் - 25.08.1945
நீதிக்கட்சியில் தந்தை பெரியாருக்கு ஏற்பட்ட அனுபவங்கள், துரோகங்களின் ஒரு பகுதி தான் நாம் இதுவரை கண்டது!
இன்னொரு பகுதியைப் பார்க்கவேண்டுமானால், அதற்கு முந்தைய காலகட்டத்தில் சுயமரியாதை இயக்கம் வேகமாக வளர்ந்துவந்த காலகட்டத்தில்,
1936 ஆம் ஆண்டு மிக முக்கியமான ஒரு சூழல் ஏற்படுகிறது. அது என்னவென்று சொன்னால் நண்பர்களே,
"ஜீவானந்தம், நீலாவதி இராமசுப்பரமணியம், சாத் தான்குளம் இராகவன், எஸ்.இராமநாதன் போன்றவர்கள் எல்லாம் சேர்ந்து, தந்தை பெரியார் அவர்கள் திடீரென்று ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கிறார்கள்" என்று குற்றம் சொன்னதாகும்.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை
தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார்!
அய்யா அவர்கள் சோவியத் ரஷ்யாவிற்குப் போய் விட்டு வருகிறார்கள் 1932 இல். அதற்கு முன்பாகவே அய்யா அவர்கள் கம்யூனிஸ்ட் மேனிபஸ்டோ என்று சொல்லக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை, ஏங்கல்ஸ் - மார்க்ஸ் அறிக்கையை ‘குடிஅரசி'ல் முதன் முதலாக தமிழில் வெளியிட்டார். அதற்குப் பிறகுதான் அய்யா அவர்கள் சோவியத் ரஷ்யாவிற்குப் போகிறார். ரஷ்யாவிற்குப் போய்விட்டு வந்த ஈடுபாட்டினால் அதனை வெளியிடவில்லை. அதற்கு முன்பே வெளியிட்டுள்ளார்.
அய்ரோப்பிய சுற்றுப்பயணத்தில் அய்யா அவர்கள் அந்த அளவிற்கு ஏறத்தாழ ஓராண்டிற்கும் கொஞ்சம் குறைவான அளவு நாள்களை செலவழித்திருக்கிறார்கள். அதில் பெரும்பகுதி சோவியத் ரஷ்யாவில் இருந்திருக் கிறார்கள்.
இங்கே இருந்த வெள்ளைக்கார அரசாங்கம், ரஷ்யாவி லுள்ள கம்யூனிஸ்டுகளிடமிருந்து பணம் வருகிறதோ என்று நினைத்தார்கள்.
வெள்ளைக்கார அரசாங்கம் ஏன் ஒழியவேண்டும் என்று அய்யா அவர்கள் எழுதியபோது, குடிஅரசு மீது வழக்குப் போட்டார்கள். ‘குடிஅரசு' பதிப்பாளராக இந்த நாகம்மை, கண்ணம்மை, ஈ.வெ.கிருஷ்ணசாமி போன்ற வர்கள்மீது நடவடிக்கை எடுத்தனர்.
அப்படி ஒரு சூழல் ஏற்பட்டவுடன், கம்யூனிஸ்ட் கொள்கையைப் பரப்புகிறார் பெரியார் என்று சொல்லி, குடிஅரசைத் தடை செய்யப் போகிறார்கள் என்ற செய்தி வருகிறது.
சில இளைஞர்கள், ‘‘பெரியார் பயந்துவிட்டார்'' என்று சொன்னார்கள்
அப்பொழுது தந்தை பெரியார் அவர்கள், தன்னுடைய கொள்கையைக் கொஞ்சம் நிதானப்படுத்துகிறார்.
உடனே தோழர்களான, சில இளைஞர்கள், ‘‘பெரியார் பயந்துவிட்டார்'' என்று சொல்கிறார்கள்.
திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற மாநாட்டில் தந்தை பெரியாரின் விளக்க உரை!
அப்பொழுது தஞ்சை மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் இயக்கப் பொறுப்பாளர்கள் எல்லாம் உரையாற்றினார்கள். பொதுவுடைமை என்று நாம் பேசும்பொழுது, அதிலிருந்து நாம் பின்வாங்கலாமா? என்று சொல்கிறார்கள்.
அப்பொழுது தந்தை பெரியார் அவர்கள் மிக அருமை யான ஒரு விளக்கத்தை எடுத்துச் சொல்கிறார்கள்.
அது என்ன மிக முக்கியமான செய்தி என்றால்,
தோழர்களே!
சுயமரியாதை இயக்கம் மிக நெருக்கடியில் இருப்ப தாகவும், சீக்கிரத்தில் செத்துப் போகும் என்றும் இங்கு சொல்லப்பட்டது.
இயக்கம் ஒன்றும் நெருக்கடியில் இல்லை என்பது என் அபிப்பிராயம். சிலருக்கு அவர்களின் சொந்த விருப்பு வெறுப்பை உத்தேசித்து அப்படித் தோன்றலாம். அதற்கு நான் காது கொடுக்க முடியாது. இந்த இயக்கம் ஆரம்பித்த காலம் முதற்கொண்டு அநேகர் தங்கள் சுயநலத்துக்கு சவுகரியமில்லாது கண்டு இதுபோலவேதான் இயக்கம் நெருக்கடியில் இருக்கிறது. செத்துப்போய் விட்டது என்று சொல்லிக் கொண்டே போய்விட்டவர்களும், வெளியில் போய்விட்ட பின்பும் அவர்களால் கூடுமானவரை தொல் லைக் கொடுத்துக் கொண்டு இருந்தவர்களும் இருக்கிற வர்களும், திரும்பி வந்தவர்களும் பலர் உண்டு. அப்படிப் பட்டவர்களையும் அவர்களது விஷமங்களையும்பற்றி நான் சிறிதும் லட்சியம் செய்வதில்லை. அந்தப்படி நான் அலட்சியமாய் இருந்து விட்டதால் இதுவரை இயக்கத் துக்கோ, எனக்கோ யாதொரு கெடுதியும் ஏற்பட்டு விட வில்லை.
இயக்கம் போய்விட்டது என்று இன்னமும் சொல்லிக் கொண்டுதான் திரிகிறார்கள். இயக்கம் எங்கு போய் விட்டது? அவர்களை விட்டுவிட்டுப் போய் விட்டது! அவ்வளவுதான். இப்போதும் சொல்லுகிறேன் இயக்கத்தின் மூலம் சுயநலம் அனுபவிக்கக் கருதியிருக்கும் எப்படிப் பட்டவர்களுக்கும் இயக்கத்தில் இடம் கிடைக்காது. அவர்கள் யாரானாலும் சரி, இயக்க வளர்ச்சியை விட இயக்கத்தில் சுயநலம் கருதுபவர்களைக் கவனிப்பதே என் வேலை. அதனால் ஏற்படும் எதிர்ப்புகளைச் சமாளிக்கத் தயாராய் இருந்து கொண்டுதான் இப்படிச் சொல்லுகிறேன்.
எந்த இயக்கமும் அதிதீவிர கொள்கையில்லாததால் கெட்டு விடாது. இயக்கத்தைத் தனிப்பட்ட மக்கள் சுய நலத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதாலேயே கெட்டுப் போகும். இதுவரை அநேக இயக்கங்கள் அதனாலேயே மறைந்து போய் இருக்கின்றன.
மற்றபடி யாருடைய எதிர்ப்பும், யாருடைய தொல் லையும் இருந்தாலும் நமது இயக்கம் அதன் வேலையைச் செய்துதான் தீரும். இயக்கம் நெருக்கடியில் இருப்பதாய் இங்கு வருத்தப்பட்டவர்கள் எப்படி நெருக்கடியில் இருக் கிறது. இதனால் என்ன கெட்டுப் போய் விட்டது என்று எடுத்துக் காட்டியிருந்தால் எனக்கு அவர்கள் வார்த்தையில் உள்ள உண்மை புலப்பட்டு இருக்கும்.
தோழர்கள் தண்டபாணி, கண்ணப்பர், அய்யாமுத்து, ராமநாதன், தாவுத்ஷா முதலான பலர் 'சுயமரியாதை இயக் கம் செத்துப் போய் விட்டது' என்று சொல்லிக் கொண்டு தான் சிலர் வெளியேறியும், சிலர் தாங்கள் இன்னமும் சுயமரியாதைக்காரர்கள் என்றும் சொல்லிக் கொண்டு தொல்லை கொடுத்து வந்தார்கள். சிலர் வருகிறார்கள். இதனால் எந்தக் கொள்கை கெட்டு விட்டது? என்ன நடவடிக்கை நின்று விட்டது?
இந்த மகாநாடு கூட்டியது பைத்தியக்காரத்தனம் என்று மகாநாடு கூட்டிய பிரமுகர்களுக்குத் தோன்றும்படி இன்று காலை முதல் இங்கு நடவடிக்கை நடக்கிறது. இது எனக்கு முன்னமேயே தெரியும். அதனாலேயே நான் இதற்கு வரவேண்டாம் என்று கருதி கடிதம்கூட எழுதிவிட்டேன். வந்தே தீர வேண்டுமென்று தந்தியும் கடிதங்களும் வந்தன. வந்த பிறகு ஏன் வந்தேன் என்றுதான் தோன்றுகின்றது. எங்கள் பெயர்களை விளம்பரம் செய்து ஆட்களைக் கூட்டி இம்மாதிரி இயக்கம் செத்து விட்டது என்று மாய அழுகை அழுவதே மகாநாட்டின் வேலை என்றால் இனி மகாநாடுகள் கூட்டமால் இருப்பது கூட நலமென்றே கருதுகிறேன்.
ஏன் மாகாண மகாநாடு கூட்டவில்லை?
இந்த லட்சணத்தில் மாகாண மகாநாடு ஏன் கூட்ட வில்லை என்று என் மீது குறை கூறப்பட்டது. மகாநாடு இந்த லட்சணத்தில் இப்படிப்பட்ட ஆட்களை வைத்துக் கொண்டு எப்படி கூட்ட முடியும்? கூட்டுவதால் பிரயோ ஜனம்தான் என்ன? கூட்டாததால் என்ன கெட்டுவிடும்? இதற்குமுன் கூட்டின 3 மகாநாடுகளும் பணக்காரர்களாலும் ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களாலும்தான் கூட்டப்பட்டது. இந்த மகாநாடும் ஒரு பணக்காரரின் பெரிய பொருளு தவியின் மீதும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களின் ஆதரவின் மீதும்தான் கூட்டப்பட்டது என்று காரியதரிசி சொன்னார். அப்படியிருக்க பணக்காரர்கள் தயவில் மகாநாடுகளைக் கூட்டி அவர்கள் நிழலில் இருந்து கொண்டு அவர்கள் சாப்பாட்டைச் சாப்பிட்டுக் கொண்டு அவர்களையே - அக்கட்சியையே வைது கொண்டிருப்பதானால் மகாநாடு எப்படிக் கூட்ட முடியும்?
நாகையில் மாகாண மகாநாட்டைக் கூட்ட தோழர் காயாரோகணம் பிள்ளை அவர்கள் ஏற்றுக் கொண்டார். வேண்டிய ஏற்பாடும் செய்தார். முன் பணமும் கொடுத்தார். அப்படியிருக்க சில தோழர்கள் மகாநாட்டு நிர்வாகத்தில் சம்பந்தப்பட்டவர்களே அவரைக் கேட்காமல் மகாநாட்டுப் பந்தலில் சமதர்ம மகாநாடு கூடும் என்று பத்திரிகையில் விளம்பரம் செய்து விட்டார்கள். பிறகு பலர் அவரைக் கேட்க ஆரம்பித்த உடன் அவர் அம்முயற்சியை விட்டு விட்டதாகத் தெரிகிறது. மற்றும் நாளையும் மகாநாடு கூட்ட வேண்டுமானால் ஜஸ்டிஸ் கட்சியார் உதவியும் சில பணக்காரர்கள் உதவியும் வேண்டித்தான் இருக்கும். அப்படி இருக்க அவர்களை வைவதின் மூலம் வீரராகக் கருதி இருக்கிறவர்களின் வசவுக்குக் கட்டுப்பட்டு யார்தான் மகாநாடு கூட்டுவார்கள்? வைகின்றவர்களுக்கு யார்தான் இரயில் ஜார்ஜ் கொடுப்பார்கள்? என்பதை யோசித்துப் பாருங்கள். என்மீது குற்றம் சொல்லுவது யாருக்கும் எளிதுதான். ஆனால், இயக்கத்தில் வேறு எந்தத் தோழர் செய்கின்ற காரியத்தைவிட என் காரியம் என்ன குறைந்து போய் விட்டது என்று யோசித்துப் பாருங்கள்.
- (தொடரும்)
No comments:
Post a Comment