சிங்கப்பூர் பெரியார் பற்றாளர் நகைச்சுவை நடிகர் ஆரூர் சபாபதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 24, 2020

சிங்கப்பூர் பெரியார் பற்றாளர் நகைச்சுவை நடிகர் ஆரூர் சபாபதி


நாடறிந்த நகைச்சுவை நடிகர் திரு. ஆரூர் சபாபதியைப் பற்றி ஒரு கட்டுரை வேண்டு மென்று அவரது நண்பரும் செம்மொழி இதழின் ஆசிரியருமான திரு. எம். இலியாஸ் என்னிடம் கூறினார். நானும் அவ்வாறு செய்ய ஒப்புக் கொண்டேன்.


ஏன் அவர் என்னிடம் கூறினார் என்று நீங்கள் கேட்கலாம். காரணம் நானும் ஆரூர் சபாபதி அவர்களின் நெருங்கிய நண்பன் என்பது தான்.


ஆரூர் சபாபதியின் மனைவி திருமதி சகுந்தலா சுமார் ஓராண்டுக்கு முன் காலமான திலிருந்து, அவர் தெம்பனீஸில் உள்ள தன் மகள் வீட்டில் வசித்து வருகிறார். என் வரு கைக்காக புளோக்கின் அடித்தளத்தில் காத் திருந்தார். மிகவும் மெலிந்து காணப்பட்டார். அதற்கு வயது மூப்பு மட்டும் காரணமல்ல. புற்றுநோய் காரணமாக அவரது நாக்கின் ஒரு பகுதி அகற்றப்பட்டு விட்டது. தொடர்ந்து அவர் பெற்று வரும் சிகிச்சையின் தீவிரமும் அவரது உடலை மெலியச் செய்து விட்டது.


அவர் உடல் நலமில்லாமல் இருந்தாலும் அவரது இயற்கையான நகைச்சுவை உணர்வு மட்டும் சிறிதளவும் குறையவே இல்லை.



எனக்கு அவரின் வயது தெரிந்திருந் தாலும், அதை உறுதி செய்வதற்காக, ''உங் களின் வயது என்ன?" என்று கேட்டேன். கையில் வைத்திருந்த பானத்தின் டின்னைக் காண்பித்தார். "இது சிங்கப்பூரில் தோற்று விக்கப்பட்ட பானம், இது தோற்றுவிக்கப்பட்ட ஆண்டில் தான் நானும் பிறந்தேன். இதோ பாருங்கள்'' என்று பானத்தின் டின்னை என்னிடம் காட்டி ஒரு புன்னகை புரிந்தார். அதில் 1932 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆக, அவருக்கு வயது 88 என்பதை உறுதி செய்துக் கொண்டேன்.


அடுத்து அவர் பெயரில் உள்ள குழப்பத் தைத் தெளிவுப்படுத்திக் கொள்ள விரும்பி னேன்.


''நான் சிங்கப்பூர் குடிமகன்" என்றும், ''உலகிலேயே தலைசிறந்த தலைவர் திரு. லீ குவான் இயூ" தான் என்றும் அடிக்கடி பெரு மையாகக் கூறுகிறீர்கள். ஆனால் உங்கள் பெயரின் முன்பகுதியில் தமிழ்நாட்டு வாடை யடிக்கிறதே, ஏன்" என்று வினவினேன்.


"நான் பிறந்தது சிங்கப்பூரில்தான். எனக்கு ஒரு வயதாக (கைக்குழந்தை) இருக்கும் போதே, என் பெற்றோர்கள், (பழனிச்சாமி - அரங்கநாயகி அம்மாள்) தமிழகம் சென்று திருவாரூரில் வாழ வேண்டிய சூழ்நிலை.


இளம் வயதில் தமிழகம் சென்ற நான் குடும்பச் சூழலால் திருவாரூரிலேயே தங்கி விட்டேன், அங்கு தான் கல்வியுடன் கலையார்வமும் சேர்ந்தது. அங்கு 1947இல் என் 15ஆம் வயதில் திருவாரூரிலுள்ள பாரதி நாடக மன்றத்தின் "வைர மாலை" என்ற நாடகத்தில் தான் முதன் முதலாக நடித்தேன். அதுவும் பெண் வேடம் ஏற்று நடித்தேன்.


அன்று தொடங்கிய என் கலை ஈடுபாடு தமிழகத்தின் அறிஞர் அண்ணாவின் "சந்தி ரோதயம்", கலைஞர் மு.கருணாநிதியின் "நச்சுக் கோப்பை", ஆரூர்தாஸ் அவர்களின் ''திரிசூலம்" போன்ற புகழ் பெற்ற நாடகங்களில் நடித்தேன்.


மறக்க முடியாத நாடகம் என்றால் நச்சுக் கோப்பை தான். அதில் பிச்சுமணி அய்யர் வேடமிட்டு நடித்தேன், வெவ்வேறு இடங்க ளில் இந் நாடகம் மேடையேற்றப்பட்டதால் வெவ்வேறு பிரமுகர்கள் முன்னிலையில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது.


தந்தை பெரியார், கலைஞர் மு. கருணா நிதி, எம். ஜி . ஆர் போன்றோர் முன்னிலையில் நடிக்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவையெல்லாம் திருவாரூரில் ஏற்பட்ட நாடக அனுபவத்தால்தான் அமைந்தது.


எனவே திருவாரூருக்கு என் நன்றியைத் தெரிவிக்கும் வண்ணம் என் பெயரில் "ஆரூர்"  என்று சேர்த்துக் கொண்டேன், "இது தவறா?" என்று என்னைப் பார்த்து வினவினார்.


''தவறேயில்லை'' என்று நானும் ஒப்புக் கொண்டேன். சிங்கப்பூரில் உங்களை K.P. சபாபதி என்றால் யாருக்கும் தெரியாது. ஆனால் ''ஆரூர் சபாபதி" என்றால் தான் யாவரும் அறிவர்" என்று நான் கூறிய போது அவரது முகத்தில் சந்தோசம் தென்பட்டது.


சரி, நீங்கள் பிறந்த மண்ணிற்கு எப்போது மீண்டும் வந்தீர்கள் என நான் கேட்க அவரின் எண்ண அலைகள் திருவாரூரை விட்டு சிங்கப்பூருக்குத் திரும்பியது.


"நான் 1959ஆம் ஆண்டில் தான் என் தாய் நாடான சிங்கப்பூருக்குத் திரும்பினேன். தமிழ்நாட்டில் ஏற்பட்ட நாடக ஈடுபாடு இங்கு வந்ததும் மேலும் தீவிரமடைந்தது.


அண்ணா நாடக மன்றம், கன்னிகா ஆர்ட்ஸ், இந்தியக் கலை மன்றம் போன்ற இயக்கங்களின் மேடை நாடகங்களில் நடித்த தோடு சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கத் தின் பல நாடகங்களிலும் நடித்தேன். நூற்றுக் கணக்கான கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நகைச்சுவை விருந்து வழங்கியுள் ளேன். மேடையோடு வானொலி , தொலைக் காட்சி நாடகங்களிலும் நடித்து வந்துள்ளேன்.


"பிரியா” எனும் தமிழ்த் திரைப்படத்திலும் ஒரு சிறிய பாகத்தில் நடித்துள்ளேன்" என்றார்.


"சார், நீங்களும் நானும் இந்தியக் கலைஞர் சங்கத்தின் பல நாடகங்களில் ஒன்றாக நடித் துள்ளோம். அதோடு தொலைக்காட்சியில் திரு. இ.எஸ்.ஜே.சந்திரன் தயாரித்த "தண் டனை" என்ற நாடகத்திலும் நடித்தோமே, ஞாபகமிருக்கிறதா?" என்று என்னைப் பார்த் துக் கேட்டார் திரு. ஆருர் சபாபதி.


நான் ஓர் ஆசிரியராக பணிபுரிந்ததால் என்னை "சார்"என்று தான் அழைப்பார்.


"அது எப்படி ஞாபகமில்லாமல் போகும்? இன்றைய பேட்டி உங்களைப்பற்றியது; என்னைப் பற்றியதல்ல" என்று நான் சொல்லி விட்டு என் அடுத்த கேள்விக்கணையைத் தொடுத்தேன்.


''நீங்கள் நாடக நடிகர் மட்டுமல்ல, நாட கத்தின் மற்ற பரிமாணங்களிலும் ஈடுபட்டவர் என்று கேள்விப்பட்டேன். அதைப் பற்றிக் கூறுங்கள்" என்றேன்.


"நான் நாடக ஆசிரியராகவும் இயக்குநரா கவும் பணியாற்றியுள்ளேன். நான் எழுதி இயக்கிய “இரு உள்ளங்கள்'' எனும் முழு நீள நாடகம் 1957இல் தமிழகத்தில் திருவாரூரிலும், 1960இல் மலாயாவில் சிரம்பானிலும், அதே ஆண்டில் சிங்கப்பூரிலும் மேடை கண்டது.


நான் உருவாக்கிய "புது வாழ்வு" எனும் ஓரங்க நாடகம் மலேசியாவின் கெடா, அலோர் ஸ்டாரில் பைந்தமிழ் நாடக மன்றத் தினரால் 1962இல் அரங்கேறியது.


சிங்கப்பூரில் 25.1.1963 அன்று விக்டோரியா தியேட்டரில் மேடையேறிய கன்னிகா ஆர்ட் ஸின் முதல் நாடகமான "உன்னையே நீ எண்ணிப்பார்" எனும் சமூக நாடகத்தின் இணைக்கப்பட்ட சில காட்சிகளுக்கு நான் வசனம் எழுதியுள்ளேன். அந்த நாடகத்திலும் நகைச்சுவை நடிப்பும் வழங்கினேன்" என்றார்.


''உங்கள் ஓய்வு நேரத்தை முழுமையாக நாடகத் துறைக்கு அர்ப்பணம் செய்த உங்க ளுக்குப்பல பாராட்டுகள் நிச்சயம் கிடைத் திருக்கும். அதைப் பற்றிக் கொஞ்சம் சொல் லுங்களேன்" என்றேன்.


"எனக்கு 1977இல் "தமிழ் மலர்" பத்திரிகை ''நகைச்சுவை மணி" என்ற பட்டத்தையும் 1983இல் திருவாரூர் உமா நாடக மன்றம் "கலைக் காவலர்" என்ற பட்டத்தையும், 1995இல் சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் "கலைச் செம்மல்" என்ற பட்டத்தையும் வழங்கினர்.


சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் 22.4.2017 அன்று நடத்திய, "தமிழும் கலையும் 2017” என்ற தமிழ் மொழி விழா நிகழ்ச்சியில் ''வாழ்நாள் சாதனையாளர்" விருது எனக்கு வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் அன்றைய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் நாசர் கலந்து கொண்டு எனக்கு பொன்னாடை போர்த்தினார் என்பது எனக்கு மகிழ்ச்சியளிக் கிறது.'' என்று கூறினார்.


நான் கேட்ட கேள்விகளுக்கு கஷ்டப் பட்டு பேசியதால் அவர் இலேசாக களைப் படைவதைப் போல் உணர்ந்த நான், "இது வரை பேட்டி அளித்ததற்கு நன்றி” என்று கூறி முடித்தேன்.


அப்போது திரு.ஆரூர் சபாபதி, "சார், நீங்கள் வேலையில்லாமல் சும்மா தானே இருக்கிறீங்க, உங்களுக்கு ஒரு வேலை பார்த் திருக்கிறேன்" என்றார்.


"என்ன வேலை” என்று கேட்டேன்.


''எச்சில் துப்புற வேலை தான்" என்றார். "துப்புற வேலையா? துப்பினால் அபராதம் அல்லவா கட்ட வேண்டும். பணமா கொடுப் பார்கள்?" என்று நான் கேட்டேன்.


"வேலையும் கொடுத்து, சம்பளமும் கொடுக்கிறார்களே, இதோ பாருங்கள் சார்" என்று அவர் அன்றைய தமிழ் முரசு நாளி தழின் விளம்பரப் பகுதியைக் காட்டினார். "ஜூரோங் வட்டாரத்திற்கு துப்புரவாளர்கள் தேவை" என்ற விளம்பரம் அது.


உடல் நலம் குறைந்த நிலையிலும் அவரின் நகைச்சுவை உணர்வு சற்றும் குறை யவே இல்லை என்பதை உணர்ந்தேன். "மீண் டும் சந்திப்போம்" என்று கூறி அந்த நகைச் சுவை மன்னரிடமிருந்து விடை பெற்றேன்.


- நேர்காணல்: வி.ராமச்சந்திரன்


நன்றி: செம்மொழி, அக்.டிச.2020,


No comments:

Post a Comment