பாட்னா மாநாடு: கொட்டும் மழையிலும் கலையாத 2 லட்சம் மக்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 18, 2020

பாட்னா மாநாடு: கொட்டும் மழையிலும் கலையாத 2 லட்சம் மக்கள்

பாட்னா மாநாட்டில் கடும் மழை கொட்டிக் கொண்டும், சூறாவளி சுழன்று அடித்துக் கொண்டும் இருந்த போது - தமிழர் தளபதியின் உரை புரட்சிக்கனலாக வெடித்துக் கிளம்பியது. மழையில் நனைந்தபடியே 2 லட்சம் மக்கள் கூட்டமும் பொதுச் செயலாளரின் உரையை செவிமடுத்தது.
9.10.1983 அன்று காலை புதுடில்லியிருந்து விமானம் மூலம் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி காலை 7 மணிக்கு புறப்பட்டு பாட்னாவிற்கு 9 மணி அளவில் சென்றடைந்தார். அவருடன் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வி.குழந்தைவேலு எம்.பி. அவர்களும் 'சுபா' சுந்தரம் அவர்களும் உடன் சென்றனர்.
பாட்னாவில் முதல் முறையாக பீகார் மாநில தாழ்த்தப்பட்டோரும் (எஸ்சி.) மலைவாழ் மக்களான ஆதிவாசிகளும் இணைந்து நடத்தும் மாநாடான அம்மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமென்று தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் உரிமைக்குப் போராடும் சீரிய வீரத்தோழரும், ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவருமான நண்பர் ராம் விலாஸ் பஸ்வான் எம்.பி. அவர்களின் அன்பழைப்பை ஏற்றுச் சென்றார்.
கழகப் பொதுச் செயலாளர் அவர்களையும், டாக்டர் குழந்தைவேலு அவர்களையும் பாட்னா விமான நிலையத்தில் 9.10.1983 அன்று காலை ராம்விலாஸ் பஸ்வான் எம்.பி., பீகார் மாநில தாழ்த்தப்பட்டோர் மலைவாழ் மக்கள் உரிமை காப்பு மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் புனிதராய் எம்.எல்.ஏ., முதன்னாள் அமைச்சர் சங்கர் பிரசாத் பி.சிவால், வரவேற்புக் குழுத் தலைவர் ஓம்பிரகாஷ் பஸ்வான், திருமதி ராகி தேவி, முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமார், மஸ்தானா மகேந்திர பட்டா, வழக்குரைஞர் அருண்ருமிர் யாதவ் மற்றும் சுமார் 15 முக்கிய பிரமுகர்கள் உட்பட பலரும் மலர் மாலை அணிவித்து மகிழ்ச்சியுடன் வரவேற்று சுற்றுலா விடுதிக்கு அழைத்து சென்று தங்க வைத்தனர்.
பீகார் மாநிலத்தின் பல பகுதிகளிலும் இருந்து ஏராளமாகத் திரண்டு வந்திருந்த பிரதிநிதிகள் தமிழர் தளபதியைக் கண்டு இயக்கத்தினைப் பற்றியும் மற்றும் அய்யா கொள்கை பற்றியும் ஆர்வத்துடன் அளவளாவித் தெரிந்து கொண்டனர்.
9.10.1983 நண்பகல் 2 மணி அளவில் மாநாட்டிற்கு வந்த தலைவர்களை பாட்னா காந்தி மைதானத்தில் உள்ள மாநாட்டு மேடைக்கு அழைத்துச் சென்றனர்.
நகரத்தின் முக்கியப் பகுதிகள் எங்கும் வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன. வாழ்த்தொலிகள் முழங்க தொண்டர்களின் ஆர்வத்திற்கிடையே நீந்தி மேடையை அடைய வேண்டியதயிற்று.
மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர் திரு.புனிதராய் எம்.எல்.ஏ., அவர்கள், மிகவும் சுருக்கமான உரையாற்றி, தோழர் ராம் விலாஸ் பஸ்வான் அவர்களை மாநாட்டி¬னைத் துவக்கி வைக்குமாறு கேட்டுக் கொண்டர். தோழர் ராம்ம விலாஸ் பஸ்வான் அவர்கள் மாநாட்டிற்கு தமிழ் நாட்டிலிருந்து தமது அழைப்பை ஏற்றுக் கொண்டு வந்த கழகப் பொதுச் செயலாளருக்கு நன்றி கூறி, தந்தை பெரியார் அவர்களது இயக்கத்தின் சிறப்பு பற்றியும் அது நடத்திய 3 லட்சம் பேர் கொண்ட மாநாடு பற்றியும் கழகம் ஆற்றி வரும் பணி பற்றியும் கூறி பொதுச் செயலாளரை கூட்டத்தினருக்கு அறிமுகப்படுத்தி வைத்த போது முழுமைதானத்தில் கூடியிருந்த சுமார் 2 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வெள்ளம் கரவொலி எழுப்பி "ஜிந்தாபாத்" என வாழ்த்தொலிகள் வானளாவி முழங்கினர். அதுபோல டாக்டர் குழந்தை வேலு எம்.பி., சுபா சுந்தரம் அவர்களையும் பஸ்வான் அறிமுகப்படுத்தி, மற்றும் மாநாட்டுத் தலைவர், பிரதம அழைப்பாளர்களான ஷபுசரண் எம்.பி., மராத்திய தலித் பாந்தர் தலைவர் சந்திரகாந்த் ஆண்டூரி, அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
ஏற்கெனவே மழைமேகங்கள் சூழவும், காற்றடிக்கவும் ஆன சூழ்நிலை வேகமாக ஏற்படவே, பஸ்வான் தனது துவக்க உரையை மிகவும் சுருக்கிக் கொண்டு இந்த மாநாட்டினை இங்கே நடத்துவதற்கு ஏற்பட்ட தொல்லைகளை மிகவும் உருக்கமாக விவரித்து, முதல் நாள் கூட மேடை காங்கிரஸ் காரர்களால் அடுத்த நாள் ராஜீவ் காந்தி வருவதால் இடித்துத் தள்ளப்பட்டது பற்றியும் பாட்னா மாவட்ட மாஜிஸ்திரேட் (கலெக்டர்), தலைமைச் செயலாளர், உள்துறை அமைச்சருடன் தொடர்பு கொள்ள முயற்சித்து, இரவோடு இரவாக மீண்டும் மேடை அமைக்கப்பட்டு நடத்தப் பெறுவது குறித்து, எவ்வித இடையூறுகள் தொந்தரவுகளிலும் மக்கள் ஒன்று சேருவதை, எழுச்சியை யாரும் தடுத்துவிட முடியாது என்றும் கூறினார். மழை மிகவும் கடுமையாகப் பெய்யத் தொடங்கிவிட்டது. மாநாட்டுத் தலைவரும் பீகார் ஜார்க்கண்ட் கட்சித் தலைவரும் ஆன திரு.என்.இ.ஒரோ எம்.பி. அவர்கள் தனது தலைமை உரையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மலைவாழ் ஆதிவாசி மக்கள் ஒரே அணியில் நின்று போராட வற்புறுத்தி தனது உரையை முடித்துக் கொண்டார்.
அடுத்து சீவ நந்தன் பஸ்வான் எம்.எல்.ஏ., மராத்திய தலித் பாந்தர் தலைவர் திரு.சந்திரகாந்த், ஆன்டூரி முதலியோர் சிறிது நேரம் பேசினர். மழை மிகவும் கடுமையாக பெய்ய ஆரம்பித்து விட்டது. மேடையில் காற்று சுழன்று சுழன்று அடிக்க ஆரம்பித்துவிட்டது என்றாலும் பீகாரின் பல பகுதிகளிலுமிருந்தும் வந்த சுமார் இரண்டு லட்சம் மக்களும் திறந்த மைதானமான மாநாட்டு அரங்கில் சிலர் மட்டும் குடைகளுடன் நின்று பலரும் அப்படியே நனைந்து கொண்டே அமர்ந்திருந்த காட்சி உண்மையிலேயே வரலாறு படைத்த எழுச்சி மிகு காட்சியாகும்.
அந்தச் சூழ்நிலையில் மாநாட்டுத் தலைவர், பொதுச் செயலாளர் அவர்கள் முக்கியப் பேருரை நிகழ்த்துமாறு கேட்டுக் கொண்டார். கொட்டும் மழையில், கடும் குளிரில், சுழன்றடிக்கும் காற்று வீச்சுகளிடையே பொதுச் செயலாளர் தமது பேச்சினை பலத்த கைத்தட்டல் ஆரவாரத்திற்கிடையே துவக்கினார், பொதுச் செயலாளர் பேச்சினை பீகார் இந்து மஸ்தூர் தொழிற்சங்க மாநிலத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான திருமதி ராம்னிகா குப்தா அம்மையார் இந்தியில் மொழி பெயர்த்தார்.
ஆங்கிலத்தில் பொதுச் செயலாளர் எவ்வளவு வேகமாக உணர்ச்சியுடன் உரத்த குரலில் உரையாற்றும்போது, மக்கள் மழையைப் பொருட்படுத்தாது அமர்ந்து மக்களை ஈர்க்கும் வண்ணம் பேசினாரோ அவ்வளவு வேகமாக உணர்ச்சியுடன் கருத்துச் சுவை குன்றாமல் திருமதி ராம்னிகா குப்தா இந்தியில் மொழி பெயர்த்தார்.
தந்தை பெரியார் பற்றியும் பார்ப்பனர் சூழ்ச்சி பற்றியும் இளைஞர்கள் சமுதாய இழிவினை ஒழிக்க முன்வர வேண்டிய அவசியம் பற்றியும் இடைவிடாது பொதுச் செயலாளர் பேசிய கருத்தினைக் கேட்டு ஆர்வம் தாளாமல் அவ்வப்போது இடைஇடையே இந்தியில் அடிக்கு ஒருமுறை வாழ்த்து முழக்கங்களை இடைவிடாமல் எழுப்பிக் கொண்டும், பலமாக கைதட்டிக் கொண்டும் மிகுந்த எழுச்சியுடன் கருத்துகளை வரவேற்று கேட்டனர். மழை பெய்ததையே யாரும் பொருட்படுத்த வில்லை. மேடையில் நின்று கொண்டே பேசுகின்றதை, கீழே பல லட்சக்கணக்கான மக்கள் உணர்ச்சி பிரவாகத்துடன் நனைந்து கொண்டே கேட்ட காட்சி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத உணர்ச்சி வெள்ளம் பொங்கிய அரியதோர் காட்சி. அக்காட்சியின் மாட்சிதான் என்னே! அவ்வப்போது அவர்கள் எழுப்பிய முழக்கம் 'பெரியார் ஜிந்தா பாத்!', 'கழகம் வாழ்க!' கோஷங்கள் பல தடவை பொதுச் செயலாளர் உரையைத் தொடர முடியாமல் அமைதியாக நிற்க வேண்டியதாயிற்று.
அவருக்கடுத்து அரியானா மாநிலத்தவரும் தற்போது லண்டனில் இருப்பவருமான திருமதி லம்பா அவர்கள் பேசினார். டாக்டர் வி.குழந்தைவேலு எம்.பி. அவர்களது பேச்சையும் ராம்னிகா குப்தா மொழி பெயர்த்தார். பீகார் மாநில கார்க்கண்ட முக்தி மூர்ச்சா (ஆதிவாசி அமைப்பு) தலைவர் ஷிபுசோரன் எம்.பி. அவர்களும், ராம்னக் கன் சிங் யாதவ் எம்.எல்.ஏ. (முன்னாள் அமைச்சர்) ராம்னிசா குப்தா எம்.எல்.ஏ. பீகார் மாநில முன்னாள் முதல்வரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான கர்ப்பூரி தாகூர் அவர்களும் உரையாற்றினர்.
பேசிய அனைவரும் கழகப் பொதுச் செயலாளர் வீறுகொண்ட எழுச்சிக் கருத்துக்கள் கொண்ட புரட்சியாளர் என குறித்து மிகவும் பாராட்டி தந்தை பெரியார் தம் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு நாம் அனைவரும் செயல்பட வேண்டும் என்பதை  வற்புறுத்தியது மிகவும் குறிப்பிடத்தக்கது.
இறுதியில் சுமார் 6 மணி அளவில் (அப்போது மழைவிட்டு அமைதி ஏற்பட்டது) தோழர் ராம் விலாஸ் பஸ்வான் நன்றி தெரிவித்துப் பேசி இளைஞர்கள் மத்தியில் தளபதி உரை நல்ல எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் தந்தை பெரியார் அவர்களத சுயமரியாதைத் தத்துவத்தை நாம் ஏற்றுக் கொண்டு செயல்பட இந்த மாநாடு ஒரு திருப்பமாக அமையும் என்பதைக் குறிப்பிட்டு பீகார் மாநிலத்தின் 34 மாவட்டங்களில் இந்த கெள்கைகளைக் கொண்ட பொது அமைப்புகள் ஒடுக்கப்பட்டோருக்கு - அரசியலுக்கு அப்பாற்பட்டு அமைக்கப்படும் என்பதையும் தலித் சேனா என்ற ஒரு சேனையையும் கூட இளைஞர்களைக் கொண்டு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவித்து மக்கள் அன்பு வெள்ளத்தினுடையே மாநாட்டினை 7 மணி அளவில் முடித்தனர்.
பீகார் மாநிலத்தில் மொத்தம் 34 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொர மாவட்டத்திற்கு ஒரு தனித்தனி 'டென்ட்' (கூடாரம்) அமைக்கப்பட்டு அதில் வந்தவர்கள் இருந்தனர். ஒரு கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது.
பச்சை, சிவப்பு ஆகிய இரு வண்ணக்கொடியில் அய்யாவின் அறிவுச்சுடர் போட்ட கொடியே அவர்களின் கொடியாக பஸ்வான் உருவாக்கி, அதை எங்கும் பிடித்துக் கொண்டிருந்தனர்.
9.10.1983 இரவு பொதுச் செயலாளர், டாக்டர் குழந்தைவேலு, சுபா.சுந்தரம் ஆகியோருக்கு பிரபல கல்வி வள்ளலும் பீகார் மாநில காங்கிரஸ் (எஸ்) தலைவரும் ஆன ராம் லக்கன சிங் யாதவ் இல்லத்தில் சிறப்பாக விருந்து கொடுக்கப்பட்டது. 
10.10.1983 காலை பொதுச் செயலாளர் தங்கியிருந்த இடத்திற்கு ஏராளமான தாழ்த்தப்பட்டோர் அதிகாரிகள், தலைவர்கள், எம்.பி.க்கள், கட்சித் தலைவர்கள், சமூகப் பணியாளர்கள் வந்து நேரில் பேச்சைப் பாராட்டி அய்யா நூல்களைக் கேட்டு வாங்கிக் கொண்டனர்.   (விடுதலை, 12.10.1983)


No comments:

Post a Comment