கலாச்சாரங்களை சிதைக்கிறதா கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 15, 2020

கலாச்சாரங்களை சிதைக்கிறதா கரோனா

கலாச்சாரங்களை சிதைக்கிறதா கரோனா?


இந்தத் தலைப்பில் 'இந்து தமிழ் திசை' ஏட்டில் நேற்று (14.10.2020) நடுப்பக்கக் கட்டுரை ஒன்று இடம் பெற்றுள்ளது.


"சூழ்நிலையை அனுசரித்து, நம் கலாச்சார வழக்கங்கள் கொஞ்சம் மாறிக் கொள்வது நடைமுறை. பெற்றவர்களுக்கு இயலாதபோது - அவர்களின் பங்காளி உறவினர் தாய் தந்தையாக இருந்து மணப்பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுப்பதைத் திருமணங்களில் பார்க்கிறோம். இப்படி சிறிய மாற்றங்களைச் செய்து கொண்டு கடக்க முடியாத சங்கடங்களுக்குள் நம் கலாச்சார வழக்கங்களைத் தள்ளி விட்டது கரோனா" என்ற பீடிகையுடன் கட்டுரை தொடங்கப்படுகிறது.


"மணப்பெண், மணமகன் இட்டுநீர் வார்த்துக் கொடுப்பவர்கள், பெறுபவர்கள் என்று சேர்ந்து நிற்பவர்களின் ஆறு ஜோடி கைகளை அடுக்கி, வெற்றிலைப் பாக்கும், பெண்ணுமாக நீர் வார்த்துக் கொடுக்கும்போது, ஆறடி இடைவெளியை மதிக்கும் மாப்பிள்ளையின் தாயார் என்ன செய்வார்?


தன் கைக்குள் இப்படித்தரும் பெண்ணை மருகிக் கொண்டே பெற்றுக் கொண்ட பிறகு அவர் கையைக் கழுவிக் கொண்டாலும் அது முறை விரோதமாகி விடும். அந்தச் சடங்கை ஒதுக்கி திருமணம் நடந்தால், நடந்தது திருமணம் என்ற தகுதியை சட்டம் அதற்குத் தராது. விருந்தாளிகளுக்குப் பந்தல் வாசலில் சந்தனப் பேலாவை நீட்டுவார்கள். இதுவரை எத்தனை விரல்கள் இதைத் தொட்டிருக்குமோ என்று பயந்தாலும், அதைத் தொட்டு முகர்ந்து கொள்ளாமல் உள்ளே போக நம் மனம் ஒப்புமா? முகர்ந்து கொள்ள பூவும், சந்தனமும், வாய் இனிப்புக்கு ஒரு சிட்டிகை ஜீனியும் இல்லாதது திருமணமா? ஆனால் இந்த வழக்கங்களோ கரோனா தடுப்புக்கு முரணானவை?" என்று நியாயமான தகவல் களையும், கேள்விகளையும் 'இந்து தமிழ் திசை' எழுப்பியுள்ளது.


இது போன்ற நியாயமான கேள்விகளை பகுத்தறிவாளர்கள் குறிப்பாக திராவிடர் கழகத்துக்காரர்கள் எழுப்பினால் - இதெல்ல £ம் குதர்க்கமான கேள்வி என்று குறுக்குச்சால் ஓட்டுவார்கள்.


ஆனால் தகவல்களையும், தரவுகளையும், வினாக்களையும் எழுப்பி இருப்பது இந்துக் கலாச்சாரங்களை ஏற்றுக் கொள்ளும் 'இந்து' ஏடு என்பதை மறந்துவிடக் கூடாது.


ஏதோ, இதனைச் சாக்காக வைத்துக் குத்திக் காட்டுகிறோம் என்ற குறுகிய பார்வையும் தேவையில்லை.


“மாற்றம் என்பதுதான் மாறாதது” என்ற அறிவியல் பகுத்தறிவு சிந்தனை - அங்கு இங்கு எனாதபடி எங்கெங்கும் ஊடுருவுவது தவிர்க்கப்பட முடியாதது - அதில் மதம், கோயில், அய்தீகம், சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்களும் விதிவிலக்குப் பெற வாய்ப்பே இல்லை என்பதை 'இந்து' கட்டுரை விளக்கவில்லையா?


இன்னும் சொல்லப் போனால், கடவுள், மத சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்சினைகளும், கட்டுக்கோப்பானது என்பவைகளும் மனிதர்களால் உண்டாக்கப்பட்டவைதானே! அப்படிக் கண்மூடித் தனமாகப் பின்பற்றச் செய்தால்தான் இந்தச் சமாச்சாரங்களுக்கு நிலைத்த பாதுகாப்பு இருக்கும் என்ற உள்நோக்கமும் இதற்குள் இல்லையா?


"Man created god in his own image" என்பது தானே எதார்த்தம், கடவுளைத் தன் உருவில் உருவாக்கியது மனிதன் தானே. அதனால் தனக்குள்ள கல்யாணம், குடும்பம், பள்ளியறை, பிள்ளைப் பேறு, சாப்பாடு, தூக்கம் எல்லாவற்றையுமே கோயில் முறையில் கடவுளுக்கு உண்டாக்கி வைக்கப்பட்டது என்பது தானே உண்மை!


கடவுளுக்கு ஆகமங்களையும், அய்தீகங்களையும் ஏற்படுத் திய மனிதன் காலவோட்டத்தில் மாற்றங்கள் அடையும்போது, அவனால் கடவுள் பெயரால் உண்டாக்கப்பட்ட கலாச்சாரங்களும், சடங்கு முறைகளும் மாறுவது என்பது இயல்புதானே.


தீவட்டிதானே கோயில்களுக்கு ஒரு காலத்தில் வெளிச்சத்தைத் தந்தது - இப்பொழுது 'நியான்' மின் விளக்குகள் ஒளிர்வதை ஏற்றுக் கொள்ளவில்லையா? தேர்களுக்கு முட்டுக்கட்டை 'ஹைட்ராலிக் பிரேக்' முறைக்கு மாற்றம் அடையவில்லையா!


கோயில்களில் சூடம் கொளுத்தக் கூடாது - அதனால் புற்றுநோய் ஆபத்து என்று இந்து அறநிலையத்துறை ஆணை பிறப்பித்து விட்டதே!


அதுபோல்தான் மனிதனின் திருமண முறையும் தொடக்கக் காலத்திலிருந்து ஒரே முறையில்தான் இருந்தது என்று சொல்ல முடியாதே! 'விவாஹம்' என்றால் "பெண்ணை தூக்கிக் கொண்டு செல்லுவது" - என்பது இப்பொழுது உண்டா?


எந்தவித சடங்குகளுக்கும் இடமில்லாமல் சுயமரியாதைத் திருமணத்தைத் தந்தை பெரியார் அறிமுகப்படுத்தி, அது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பன்னாடுகளிலும் சட்ட ரீதியாக அங்கீகாரம் பெற்றுவிட்டதே - இன்னும் சொல்லப் போனால், அது இந்துத் திருமணச் சட்ட திருத்தம் தானே! இதன் பொருள் என்ன?  'இந்து மதம்' என்பது திருத்தப்பாட்டுக்கு உட்பட்டது என்பதுதானே!


கரோனாவால் வாழ்வின் வழிமுறைகளிலே (life style) பல மாற்றங்களை ஒப்புக் கொள்ள வேண்டும் - இவ்வளவுப் பெரிய சக்தி கரோனாவுக்கு இருப்பதால், கடவுள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில்கூட மாற்றத்தைக் கரோனாவால் ஏற்படுத்த முடிகிறது என்பதால் - கரோனாவைக் கடவுள் என்று சொல்லுவார் களா? கடவுள் நம்பிக்கையாளர்கள் சிந்திக்கட்டும்!


No comments:

Post a Comment