சிங்கப்பூரில் தந்தை பெரியாரின் 142 ஆம் ஆண்டு பிறந்தநாள் பெருவிழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 15, 2020

சிங்கப்பூரில் தந்தை பெரியாரின் 142 ஆம் ஆண்டு பிறந்தநாள் பெருவிழா

பெரியாருக்கு  நன்றி கூறும் நல்விழா - ஒரு சிறப்புப் பார்வை


கட்டுரையாளர் க.பூபாலன் பற்றி...



இவர் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கதிராமங்கலத்தில் பிறந்தவர். மதுரை சேது பொறியியற் கல்லூரியில் பொறியியல் படிப்பில் பி.இ. பட்டம் பெற்றவர். சிங்கப்பூர் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் துறையில் எம்.எஸ்சி., பட்டம் பெற்றவர். சிங்கப்பூரில் பன்னாட்டு நிறுவனத்தில் இயந்திரவியல் துறையில் மூத்த பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். தமிழ்மீது ஆர்வமும் கொண்டவர். பெரியாரின் பகுத்தறிவு, மனிதநேயக் கருத்துகளினால் ஈர்க்கப்பட்டு அவரின் மீது ஆழ்ந்த பற்றுக் கொண்டவர். இவர், சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சமூகப் பணியாற்றி வருகிறார். சிங்கப்பூரில் பெரியார் பற்றிய வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கி "பெரியார் பணி", "பெரியார் பணி 2014", "பெரியார் பணி 2015", "சிங்கப்பூர் கவிதையில் பெரியார்" மற்றும் மன்றத்தின் விழா இதழ்களைத் தொகுத்து எழுதி வெளியிட்டுள்ளார்.


சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் சிங்கப்பூரில் தந்தை பெரியாரின் 142 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கடந்த  செப்டம்பர் 27, 2020 அன்று காணொலி வாயி லாக பெரியாருக்கு நன்றி பாராட்டும் நல்விழாவாக நடை பெற்றது.


பல ஆண்டுகளாக சிங்கப்பூரில் பெரியார் விழா நடைபெற்று வந்தாலும், இந்த ஆண்டு நடைபெற்ற விழா ஒரு  தனித்துவமான விழாவாக அமைந்தது என்று சொன் னால் அது மிகையல்ல. காரணம் விழாவின் தொடக்கம் முதல் நன்றியுரை வரை அனைவரின் உரையும்  ஒன்றுக்கொன்று தொடர்புடன் மிகைப்படுத்தாமல் இயல்பாக ஒரே நேர் கோட்டில் இருந்தது. இது விழாவின் விறுவிறுப்பு குறையாமல் காணொலியில் பார்த்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


சிங்கப்பூரில் பெரியார் விழா எப்போதும் ஓர் அரங்கத் தினுள் ஏற்பாடு செய்யப்பட்டு நேர்த்தியாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கரோனா கிருமியின் காரணமாக பெரியாரின் பிறந்த நாள் விழா காணொலி (Zoom Meeting) வழியாக நடைபெற்றது. ஆனாலும் அரங்கத்தில் நடைபெறும் விழாவுக்கு சற்றும் குறைவில்லாமல் அனைத்து அங்கங்களும் இடம்பெற்று நிறைவான் விழாவாக நடை பெற்றது.


“வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே...” என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் தொடக்க உரை தொடங்கும் முன்பு  “அவர்தான் பெரியார்” என்ற பாரதிதாசனின் பாடலை ஒளிப் படக்காட்சியுடன்  ஒளிப்பரப்பியது விழாவின் சிறப்பான தொடக்கமாக இருந்தது. மட்டுமல்லாமல், காணொலி விழா தொடங்கியதை பார்ப்பதற்கு திரைப்படத்தில் Title Song  உடன் படம் தொடங்குவதை போன்று இருந்தது.


பெரியார் அன்றும் இன்றும் என்றும்!



"பெரியார் அன்றும் இன் றும் என்றும்" என்ற தலைப்பில் தொடக்க உரையாற்றிய சிங்கப் பூர் பாலர் பள்ளி ஆசிரியர் திருமதி லீலாரணி மிகத் தெளி வாக ஆணித்தரமாக தன்னு டைய கருத்துகளை எடுத்து ரைத்தார். பெண்ணுரிமை, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், பகுத்தறிவு என்ற மூன்று தலைப்புகளில் பெரியாரை முன் னிலைப்படுத்தி பேசியது சிறப்பு இம்மூன்றும் பெரியாரின் கொள்கைகளை மூன்று கோணங்களில் தெரிந்துக்கொள் வதற்கும், அந்த கருத்துகள் சிங்கப்பூருக்கு தொடர்புடைய தாகவும் இருந்தது சிறப்பு.


திருமதி லீலாரணி, அவர் எடுத்துக்கொண்ட தலைப்புக்கு ஏற்ப அன்றைய பெரியாரின் உழைப்பினால்தான் என் தந்தை தன்னுடைய  அய்ந்து பெண் பிள்ளைகளையும் படிக்க வைத்தார்கள், அவர்களில் அய்ந்தாவது பெண்தான் நான், இன்றைக்கு ஒரு பட்டதாரியாக சிங்கப்பூரில் பணி புரிகிறேன் என்று நன்றிப் பெருக்குடன் குறிப்பிட்டார். பெரியாரின் பெண்ணுரிமை என்பது வெறும் சமத்துவம் மட்டுமல்ல ஆண்களுக்கு இணையாக சொத்துரிமையும், படித்து பட்டம்பெற்று வேலைவாய்ப்பும் பெறவேண்டும் என்றார். இன்றைக்கும் பெண்களுக்கு எதிராக இழைக்கப் படும் நவீன அடக்குமுறைகளை பெண்கள் துணிவுடன் எதிர்கொள்ள பெரியார் சிந்தனைகள் தேவைப்படுகின்றன என்றார். மேலும் பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்ததால் எழுத்துகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு மின்னிலக்கத்திற்கு ஏற்ற வகையில் நமக்கு பயனாக இருப்பதகவும் கூறினார், மேலும் தந்தை பெரியாரின் கருத்துக்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டியது நமது கடமை எ ன்று கூறி உரையாற்றினார்.


“பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி”



அடுத்ததாக “பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி” என்ற தலைப் பில் உரையாற்றிய பொறியாளர் இரவிச்சந்திரன் சோமு தன்னு டைய உரையில் “சமூக விஞ்ஞானி” என்பதை மிகசிறப்பாக விளக்கினார்.  1930களில் இந் தியாவில் ஆங்கிலேயர் ஆட் சியை எதிர்த்து இந்தியாவில் சுதந்திரப்போராட்டம் நடை பெற்று வந்தபோது பெரியார் மட்டும் ஜாதி தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறி தாழ்த்தப்பட்ட மக்கள் உரிமைபெற அவர்களுக்காக ஜாதி ஒழிப்பு போராட்டங்களை முன்னெடுத்தார்.


ஒரு நாட்டின் விடுதலை என்பதை தாண்டி ஒரு சமூகத் தின் விடுதலையும், அந்த மக்களின் உரிமையும் முக்கியம் என்பதை வலியுறுத்தினார், இது போன்று விஞ்ஞானிகள் மட்டும்தான்  நுணுக்கமாக சிந்திக்கமுடியும் என்றார்.


தமிழ் நாட்டில் மன்னார்குடி பகுதியில் சாதாரண ஒரு குக்கிராமத்தில் படிப்பறிவில்லா பெற்றோர்களுக்கு மகனாகப் பிறந்தவன் நான்.  இன்று பட்டம் பெற்று அமெரிக்கா  நிறுவனத்தில் ஆசிய பசுபிக் கிளைகளுக்கு தலைமைப் பொறுப்பு வகிக்கிறேன் என்றால் அது அனைத்தும் தந்தை பெரியாரின் உழைப்பால் தான்  என்று நன்றியுடன் குறிப் பிட்டார். நான் மதிக்கும் உலகத்தின் மிகச் சிறந்த தலைவர் பெரியார் தான் என்றார். பெண்ணுரிமை, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் போன்றவற்றில் பெரியாரின் பங்களிப்பு பற்றிக் குறிப்பிட்டு நன்றி பாராட்டினார்.



நான் சிறு வயதில் பெரியாரை வெறுத்தவன், காரணம் எங்கள் வீட்டில் உள்ள பெண்கள் பெரியாரை பற்றி புரியாமல் திட்டிக்கொண்டே இருப்பார்கள். அதனால் நானும் பெரியாரை பற்றி எதுவும் தெரியாமல் அவரை வெறுத்தேன். கல்லூரியில் சேர்ந்த பிறகு சாமி. சிதம்பரனார் எழுதிய "தமிழர் தலைவர்" என்ற தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்று நூலைப் படித்த பிறகுதான் பெரியாரை பற்றி தெரிந்து கொண்டேன் என்றார். இது மிகவும் முக்கியமான செய்தி. பிள்ளைகள் மனதில், சிறுவயதில், வீட்டில் உள்ளவர் கள் பெரியார் என்றால்  வெறும் கடவுள் மறுப்பாளர், ‘பிராமண' எதிர்ப்பாளர் என்கிற ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்துள் ளனர். ஆனால் பெரியார் சமத்துவத்துகாக போராடினார், பெண் கல்வி, சொத்துரிமை, தேவதாசி ஒழிப்பு இவற்றிற்காகப் போராடி வெற்றியும் கண்டவர் என்று அவரை பற்றி படித் தால் பெரியாரை வெறுப்பவர்களும் அவரை விரும்புவார்கள். அதற்கு பொறியாளர் இரவிச்சந்திரன் சோமுவே ஒரு உதாரணம்.


பெரியார் அவர்கள் யார் கேள்வி கேட்டாலும் கோபப் படாமல் நிதானமாக தெளிவாய்க் கருத்தினைக் கூறக் கூடியவர். அவர் ‘பிராமணர்'களையும் மதிப்புடனே நடத் தினார். கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார், மற்றவர் களின் கடவுள் நம்பிக்கையில் தன்னுடைய கொள்கையை திணிக்க மாட்டார் என்று கூறி பெரியாரின் வாழ்வில் நடை பெற்ற பல செய்திகளை எடுத்துக்கூறி கொடுக்கப்பட்ட நேரத் திற்குள்  பல செய்திகளை மேற்கோள்காட்டி உரையாற்றினார்.


பெரியார் பொன்மொழிகள் வாசிப்புப் போட்டி



பெரியார் பிறந்தநாள் விழாவையொட்டி சிங்கப்பூர் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பெரியார் பொன் மொழிகள் வாசிப்புப் போட் டியை சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் நடத்தி யது. அதில் வெற்றி பெற்ற மாணவர்களில் முதல் பரிசு பெற்ற சீடார் உயர்நிலைப்பள்ளி  மாணவி பாபுமேகா “பகுத்த றிந்து முன்னேறு” என்ற தலைப் பில் பேசும்போது திருக்குறளை மேற்கோள் காட்டி திரு வள்ளுவருக்கு பிறகு பெரியார் ஒருவர்தான் பகுத்தறிந்து செயல்பட சொன்னார்,  பகுத்தறிவு மட்டும் தான் நம்மை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும். அதற்கு சிங்கப்பூர் ஒரு உதாரணம் என்று  சொல்லி சுருக்கமாக உரையாற்றினார்.


தந்தை பெரியார் இருந்த காலத்திலிருந்தே தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிங்கப்பூருக்கு வருகை புரிந்து பல கூட்டங்களில் பங்குபெற்று வந்தாலும். சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் ஆரம்பித்த 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரும்பாலும் நவம்பர் மாதம் நடைபெறும் பெரியார் விழாவில் தான் பங்குபெற்று சிறப்புரையாற்றி வந்தார்கள். ஆனால் இந்த முறை மன்றத்தின் ஏற்பாட்டில் செப்டம்பர் மாதம் காணொலியில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழாவில் ஆசிரியர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றியது மன்றத்திற்கு தனிப் பெருமை.


தமிழர் தலைவர் சிறப்புரை



விழாவின் சிறப்பு அம்சங் களில் ஒன்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் சிறப்புரை ஆகும்.


அதோடு மட்டுமல்ல, பெரியார் அவர்களால் ஆசிரி யராக தமிழர்களுக்கு அடை யாளப்படுத்தப்பட்ட தமிழர் தலைவரின் முன்னிலையில் பெரியாரால் பயன்பட்டவர்கள் நன்றி பாராட்டி பேசும் விழா என்பது கூடுதல் சிறப்பு பெற்றதாகும்.


பெரியார் இருக்கும் போதே அவர் கொள்கைக்கு கிடைத்த வெற்றியை பார்த்தார். அதுபோன்று பெரியாரின் தொண்டர்களுக்கு எல்லாம் தொண்டன் என்று கூறி பெரியார் கொள்கையை பரப்பி வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமிழர்கள் கடல் கடந்து பெரியாருக்கு  நன்றிகூறும் நல்விழாவை பார்த்து வருகிறார்கள்.  


நன்றி பாராட்டும் விழா என்பது ஒரு சடங்காக நடை பெறும் விழா அல்ல,  அது நாளைய தமிழர்கள் முன்னேற இன்றும் நாம் பெரியார் கொள்கைகளை முன்னேடுத்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெறும் கொள்கை திருவிழா. ஆம் பெரியாரின் கொள்கை என்பது தனிமனித கொள்கையல்ல, தமிழர் இன கொள்கையும் அல்ல, அது மானுடம் போற்றும் மனிதநேய கொள்கை, இந்த இம்மானுட உலகில் அனைவருக்கும் பொருந்தும் கொள்கை. அதனால்தான் சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் பெரியாரின் பிறந்த நாளில் அவருக்கு நன்றி பாராட்டி உரையாற்றினார்கள்.


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையை கேள்வி-பதில் வடிவில், சிங்கப்பூரில் பெரியாருக்கு ஏன் பிறந்த நாள் கொண்ட வேண்டும்? என்று தொடங்கியதிலிருந்தே அய்யாவின் உரையை கேட்போருக்கு ஓர் ஆர்வத்ததை தூண்டியது.


சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் தொடங்கபட்டு கடந்த 10 ஆண்டுகளாகத்தான் சிங்கப்பூரில் பெரியருக்கு பிறந்த நாள் விழா கொண்டாடி வருகிறார்கள் என்று நினைத்திட வேண்டாம். சிங்கப்பூரில் 1940 ஆம் ஆண்டு முதலே பெரியாருக்கு பிறந்த நாள் விழா கொண்டாடி வருகிறார்கள், அதாவது பெரியரின் 62 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தொடங்கி இந்த ஆண்டு வரை (142ஆவது பிறந்த நாள்) கொண்டாடி வருகிறார்கள் என்றார். இந்த செய்தி புதியவர்கள் பலருக்கு; ஏன் பெரியாருக்கு பிறந்த நாள் கொண்டாடி வருகிறார்கள்? என்று சிந்தனையை தூண்டக்கூடிய செய்தியாக இருந்தது.


தமிழர் தலைவர் அவர்களின் சிறப்புரை 45 நிமிடங்கள் தான் ஆனால் அதனுள் மிகத் தெளிவாக பல வரலாற்று செய்திகளை தொகுத்து கேட்போருக்கு எளிதில் புரியும்படி விளக்கினார். பெரியார் பிறந்த நாள் ஏன் கொண்டாடுகிறோம் என்பதில் தொடங்கி, சிங்கப்பூரில் எப்படி தமிழர்கள் உரிமை பெற்றார்கள் என்பதற்கான மூலக்காரணத்தையும், அதற்கு பெரியாரின் வருகையும், பெரியார் தொண்டர்களின் உழைப் பும் எப்படி வழிவகுத்தன என்பதனை விளக்கும் போது அந்த காலத்தில் இருந்த சிங்கப்பூர் பெரியார் தொண்டர்கள் மானமிகு சா.சா. சின்னப்பனார், கவிஞர் முகிலன்   செ.நட ராசன், சு.தே.மூர்த்தி, நாகரத்தினம், முருகு.சீனிவாசன், வீரையன் என்று அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு விளக்கவுரை நிகழ்த்தியது மிகவும் சிறப்பானதாக அமைந்தன. அந்த பெரியார் தொண்டர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இருந்தது. இது பெரியார் கொள்கையில் செயல்படும் எங் களை போன்றோர்களுக்கு வரலாற்றை நாம் எப்படி நினை வுக் கூரவேண்டும் என்பதை ஆசிரியர் அய்யா அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாக தெரிந்தது.


தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் தனிச் சிறப்பே கிராமபிரச்சாரத்தில் உரையாற்றும்போது அந்த கிராம மக்களுக்கு புரியும் படியும், பன்னாட்டு கருத்தரங்கத்தில் பேசும் போது அந்த வெளிநாட்டு அறிஞர்களுக்கு புரியும் படியும் சரியான மேற்கோள்களை எடுத்துக்கூறி பேசுவார்.  அதே போல் இவ்விழாவிலும் சிங்கப்பூரில் தமிழர்களிடமிருந்த ஜாதி கொடுமை, மூடப்பழக்கங்கள் பற்றியும்,  பெரியார் வருகையின் நோக்கம் - அதன் பின் சிங்கப்பூரில் தமிழர் சீர்த்திருத்த சங்கம் தோற்றம், தமிழ் எழுத்து சீர்த்திருத்தம், சிங்கப்பூரில் தமிழர்கள் குடியுரிமை பெற்றது போன்ற வரலாற்று செய்திகளை சிங்கப்பூரில் வெளிவந்த  ‘தமிழ்முரசு' செய்தித்தாளை மேற்கோள்காட்டியும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ராஜேஷ் ராய்  எழுதி வெளியிட்ட “'Indians in Singapore (1819-1945) - Diaspora in the Colonial Port City'” என்ற ஆங்கில வரலாற்று ஆய்வு நூலிலிருந்து தகவல்களை ஆங்கிலத்திலேயே எடுத்துக்கூறி பேசினார்.


பெரியார் வருகைக்கு முன்பே பெரியாரின் ‘குடிஅரசு' ஏடு சிங்கப்பூர் தமிழர்களிடம் ஏற்படுத்திய அறிவுப் புரட்சி, தன்மான எழுச்சியை பற்றி குறிப்பிட்டார். இந்த செய்தி  சிங்கப்பூர் தமிழ் சமூகத்தின் மாற்றம் எப்படி எதிலிருந்து தொடங்குகிறது என்பதை அறிந்துகொள்ளுவதற்கு இது ஒரு முக்கியமான செய்தி.


சிங்கப்பூரில் பெரியார் கூறிய அறிவுரைகள்


"பெரியார் யாருக்கும் எதிரானவர் அல்ல.. அவரின் நோக்கம் மனித நேயப்பற்றே. அதற்கு எது தடையாக இருந்தாலும் அதனை துணிவுடன் பகுத்தறிவுடன் எதிர்த்தார் பெரியார். மனிதப்பற்று என்றால் மனிதர்களுக்குள் உயர்ந்த வன், தாழ்ந்தவன் என்ற நிலை இருக்கக்கூடாது. அனைவரும் சமம் என்ற நிலை உருவாக வேண்டும் என்று உழைத்தார். மனித குலத்தில் சரிபாதியாக இருக்கக்கூடிய பெண்களை ஏன் படிக்கக்கூடாது என்கிறார்கள் என்று கேட்டு பெண்களின் உரிமைக்காக போராடினார், பெண்களுக்கு சமஉரிமை வேண்டும். பகுத்தறிவுடன் வாழ பழகி கொள்ளுங்கள்" என்று சிங்கப்பூரில் பெரியார் கூறிய அறிவுரைகளை எடுத்துக் காட்டினார் ஆசிரியர் அவர்கள். இங்கு குறிப்பிட வேண்டிய செய்தி இந்த பெரியார் விழாவை முன்னின்று நடத்தியதே பெண்கள்தான். அதிலும் இவ்விழாவில் பேசிய 7 பேர்களில் 4 பேர் பெண்கள் என்பதே பெரியார் கொள்கையினால் பெற்ற பலன்.


தமிழர் தலைவர் அவர்கள் சிங்கப்பூர் குடியுரிமைக்கு பதிவு செய்து கொள்ளுங்கள் என்ற பெரியாரின் அறிவுரையை தமிழர்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள் என்ற செய்தியை,  ‘தமிழ்முரசு' செய்தித்தாளின் துணை ஆசிரியர் வை.திரு நாவுக்கரசு எழுதிய அறிக்கையின் வாயிலாக படித்து காண் பித்து பேசியது, சிங்கப்பூர் தமிழர்களின் வரலாற்றில் பெரியா ரின் வருகை எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது.


பெண்களுக்கு சமஉரிமை கிடைப்பது மட்டும் பெரியாரின் நோக்கம் அல்ல பெண்களுக்கு அதிகாரப்பங்களிப்பு அளிக்க வேண்டும் என்று பெரியாரின் பெண்ணுரிமை பற்றி பேசினார் ஆசிரியர்.


பெரியாரின் தமிழ் எழுத்து சீர்த்திருத்ததை வரவேற்ற நாடு சிங்கப்பூர் என்று தமிழர் தலைவர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டது சிங்கப்பூரில் நடைபெறும் விழாவுக்கு மிகப்பொருத்தமாக அமைந்தது.


இதுபோன்ற பல முக்கிய வரலாற்று செய்திகளை ஒன்றன்பின் ஒன்றாக மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பது போல் தன்னுடைய உரையில் எடுத்துக்கூறிக் கொண்டே இருந்தார் தமிழர் தலைவர் அவர்கள். இறுதியாக பெரியாரை பற்றி  சிலவரிகளில் சிறப்பான கருத்துகளை எடுத்துக்கூறினார்.


பெரியாரை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.


பெரியார் அனைவருக்கும் உரியவர்.... என்றார் ஆசிரியர்.


அதோடு  அதற்கு அடுத்து ஒன்று சொன்னார்.


பெரியார் அனைவருக்கும் உரியார்.


இதை புரியார் புரியாதவரே! .. என்று ஒரே சொல்லில் மிகச்சரியாக சொல்லிவிட்டார்.


ஆம், பெரியாரின் தொலை நோக்கு பார்வை என்பது மானுடம் வளரவேண்டும் - மானுடத்தில் பேதம் இருக்கக் கூடாது என்பதாகும், இதனை புரிந்துகொள்ள தெரியாதவன் எல்லாம் புரியாதவரே !அவனால் மானுடத்திற்கு எந்த பயனும் இல்லை. என்பதை “புரியாதவரே" என்ற ஒற்றை சொல்லில் சொல்லிவிட்டார் தமிழர் தலைவர்.


பெரியார் என்ற தனி மனிதருக்காக யாரும் பிறந்த நாள் விழா கொண்டாடமாட்டார்கள். அவர் இறந்து 47 ஆண்டு களாகியும் பெரியாருக்கு பிறந்த நாள் கொண்டாடுகிறோம் என்றால் அவரின் கொள்கைக்கு கொண்டாடுகிறோம்.


பெரியார் என்பது ஒரு லட்சியம்,


பெரியார் என்பது ஒரு சமூக விஞ்ஞானம்


விஞ்ஞானம் எப்போதும் தேவைப்படும்


விஞ்ஞானிகள் இறந்து போகலாம் ஆனால் அந்த விஞ்ஞானி கண்டுபிடித்த மருந்துகள் எப்போதும் இருக்கும். நோய் எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் அந்த மருந்துகள் தேவைப்படும் என்று கூறி பெரியார் என்ற மாமருந்து மனித சமூகம் மனித நேயத்துடன் வாழ எப்போதும் தேவைப்படும் மருந்து என்று கூறி பயன்தரும் வகையில் பல கருத்துகளை   தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விரிவாக விளக்கிக்கூறி நிறைவாக முடித்தார்.


சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் வீ.கலைச்செல்வம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவை மன்றத்தின் பொருளாளர் திருமதி.தமிழ்ச்செல்வி மிகவும் அருமையாக நெறிப்படுத்தி, இடைஇடையே பெரியாரை பற்றிய செய்திகளை சிறப்பாக தொகுத்து வழங்கி  நிகழ்ச்சியை தொய்வில்லாமல் நடத்தினார். இறுதியாக மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் திருமதி.மலையரசி நன்றி கூறினார்.


விழாவில் பேசிய அனைவரும் பெரியாரை எளிதாக புரிந்து கொள்ளும் அளவுக்கு நல்ல பல கருத்துகளை எடுத்து ரைத்தார்கள். வழக்கம் போல் இவ்விழா ஓர் அரங்கத்தில் நடைபெற்றிருந்தால் அரங்கத்திற்கு வந்தவர்களிடம் மட்டும் தான் இந்த கருத்துகள்  சென்றடைந்திருக்கும். ஆனால் கணொலி வாயிலாக நடைபெற்றதால், சிங்கப்பூரில் நடை பெற்ற பெரியார் பிறந்தநாள் விழாவில் வெளிநாடுகளிலிருந்தும் பங்குபெற்றார்கள். Facebook Live வழியாக நேரடி ஒளிப்பரப்பையும் பலரும் பார்த்தார்கள். பெரியாரின் கருத்து களை பரப்ப நல்லதொரு வழிமுறையாகவும் அமைந்தது.


No comments:

Post a Comment