தற்கால நிலைமையின் பயனாய் ஏற்பட்ட ஆராய்ச்சி சவுகரியத்தை கைக்கொண்ட ஒரு வான சாஸ்திரி கிரகணத்திற்கு காரணம் சொல்லுவதாய் இருந்தால், அவன் பூமியுடையவும், சூரியனுடையவும் நடப்பைக் கொண்டு கணக்குபோட்டுப் பார்த்து ஒன்றின் நிழலால் மற்றொன்றின் ஒளி இன்ன காலத்தில் இன்ன அளவுக்கு மறைக்கப்படுகின்றது என்று சொல்லுவான். இதே விஷயத்தைப் பற்றி மத சாஸ்திரியை கேட்டால் அவன் சூரிய, சந்திரன்களுக்கு ஏற்பட்ட சாபத்தின் பயனாய் ராகு,கேது என்னும் இரண்டு கெட்ட கிரகங்களால் ஏற்படும் பீடைகள் என்று சொல்லுவான்.
இதில் இருக்கும் மற்றொரு ஆச்சரியம் என்ன வென்றால், ஒரே ஆசாமி வானசாஸ்திரியாய் இருந்து பாடம் கற்பிக்கும்போது பூமியின் நிழலால் மறைக் கப்படுகின்றதென்றும், மத சாஸ்திரியாய் இருந்து பாடம் கற்பிக்கும்போது சூரியன், சந்திரன் என்னும் தேவர்களை ராகு, கேது என்னும் பாம்புகள் விழுங்குகின்றன என்றும் சொல்லுவான்.
வானசாஸ்திரியாய் இருந்து சூரியக்கிரகணத் தன்மையைப் பிரதியட்சப் பாடமாக சில சாதனங்களைக் கொண்டு பிள்ளைகளுக்குப் பாடம் கற்பிவித்து விட்டு வீட்டுக்குப் போனவுடன் ராகு, கேது பாம்புகள் விழுங்கு கின்றன என்பதற்குத் தகுந்தபடி தோஷ பரிகாரத்திற்கு ஸ்நானம் செய்யவும், தர்பனம் செய்யவும், சங்கல்பம் செய்து கொள்ளவும், சாந்தி செய்யவுமான காரியத்தில் ஈடுபடுகின்றான். கல்வியுடன் மதத்தையும் கலக்குவதால் மனிதனுடைய பகுத்தறிவும், அறிவு சுதந்திரமும் அடையும் கேவலத்தை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 27.9.1931
‘மணியோசை’
No comments:
Post a Comment