உ.பி.யில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி அடிமட்டத்துக்கும்கீழ் இருக்கையில், ‘நீட்' தேர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றது எப்படி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 20, 2020

உ.பி.யில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி அடிமட்டத்துக்கும்கீழ் இருக்கையில், ‘நீட்' தேர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றது எப்படி

உ.பி.யில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி அடிமட்டத்துக்கும்கீழ் இருக்கையில், ‘நீட்' தேர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றது எப்படி?



குறிப்பாகக் கடந்த ஈராண்டுகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு தேர்வுகளில் பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தில் மிகமிகக் குறைந்த அளவிலேயே வெற்றி பெற்றுள்ளனர்; அவர்களின் தாய்மொழியான இந்தி தேர்விலும்கூட தேர்ச்சி மதிப்பெண் பெறவில்லை; இந்த நிலையில், ‘நீட்' தேர்வில்  மட்டும் இந்தியாவிலேயே உ.பி. முதலிடம் பெற்றது எப்படி  என்ற வினாவை எழுப்பியுள்ளார்திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.


அவரது அறிக்கை வருமாறு:


உத்தரப்பிரதேசத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 165 பள்ளிகளில் எந்தவொரு மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெறவில்லை எனத் தெரிய வந்துள்ளது.



385 பள்ளிகளில் 20 சதவிகிதத்திற்கும் குறைவான மாணவ, மாணவியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கு முந்தைய காலகட்டத்தில் உயர்நிலைப் பள்ளி தேர்வில் அதிகப்படியாக காப்பி அடிக்க வாய்ப்பு இருப்ப தாகக் கூறப்படும் கவுசாம்பி இடத்தில் உள்ள 13 பள்ளிகளிலும் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெறவில்லை.


10 ஆம் வகுப்பைப் பொருத்தவரை 50 அரசு பள்ளிகளும், 5 அரசு உதவி பெறும் பள்ளிகளும் 84 தனியார் பள்ளிகளும் "0" சதவிகித தேர்ச்சியை பெற்றுள்ளன. 12-ஆம் வகுப்பை பொருத்தவரை 15 அரசுப் பள்ளிகளும், 58 அரசு உதவிப் பெறும் பள்ளிகளும், 176 தனியார் பள்ளிகளும் "0" சதவிகித தேர்ச்சியை பெற் றுள்ளது குறிப்பிடத்தக்கது. (‘தினத்தந்தி', 29.4.2019).


இந்தி மாநிலத்திலேயே


10 லட்சம் பேர்


இந்தி மொழி பாடத்தில் தோல்வி!


இந்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் இந்தித் தேர்வு எழுதிய 10 ஆவது, 12 ஆவது வகுப்பு மாணவர்களில் தேர்ச்சி பெறாதவர்கள் எண் ணிக்கை கிட்டத்தட்ட 10 லட்சம். கடந்த ஏப்ரல் 26 இல் தேர்வு முடிவுகள் வெளியாயின. 10 ஆவது, 12 ஆவது வகுப்புகளில் இந்தித் தேர்வு எழுதியவர்களில் 20% பேர் அந்தப் பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறவில்லை. இந்த விஷயத்தை அப்போது யாரும் கவனிக்கவில்லை என்றாலும், தற்போது இந்தி குறித்த விவாதங்களில் இது இடம்பிடித்திருக்கிறது.


10 ஆவது வகுப்பு மாணவர்களில் 5.74 லட்சம் பேரும், 12 ஆவது வகுப்பில் 1.93 லட்சம் பேரும், 12 ஆவது வகுப்பில் பொதுப்


பாடப் பிரிவில் வரும் இந்தியில் 2.30 லட்சம் பேரும் தேர்ச்சி பெறவில்லை.  (‘தமிழ் இந்து', 17.9.2019).


உத்தரப்பிரதேசம்


முதலிடம் என்பது எப்படி?


இதுதான் பிஜேபி ஆளும், உத்தரப்பிர தேசத்தின் கல்வியின் தரமும், நிலையும்! இந்த நிலையில் நடந்து முடிந்த ‘நீட்' தேர்வில் மட்டும் இந்தியாவிலேயே உத்தரப்பிரதேசத்தில் 88,889 பேர் வெற்றி பெற்று முதலிடம் என்பது எப்படி என்ற பெரும் அய்யப்பாட்டை ஏற்படுத்தி யுள்ளது.


இதுகுறித்து மிகுந்த கவலை உணர்ச்சியோடு பார்க்கவேண்டியுள்ளது. உரிய வகையில் விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிச் சத்துக்குக் கொண்டு வராவிட்டால், அரசுகள் மீதும், தேர்வுகள்மீதும் மக்களுக்கு நம்பகத் தன்மை ஏற்படாது - ஏற்படவே ஏற்படாது.


தலைவர்களும் இப்பிரச்சினையில் அழுத்தம் கொடுப்பார்களாக! இது மிக முக்கியம்!!


 


 


கி.வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


20.10.2020


No comments:

Post a Comment