கவுகாத்தி, அக் 31 அசாமில் ஜே.இ.இ. எனப்படும் பொறியியல் கல்லூரிக்கான நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்தவர், போலியான நபரை பயன்படுத்தி தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருக்கும் போது இப்போது ஜே.இ.இ. எனப்படும் முன்னணி பொறியியல் கல்லூரிகளுக்கான நுழைவுத்தேர்விலும் முறைகேடுகள் நடந்துள்ளது. அசாமைச் சேர்ந்த நீல் நட்சத்திராதாஸ் என்பவர் கவுகாத்தியில் உள்ள கல்லூரி ஒன்றில் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு எழுதியிருந்தார். அவர் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றார்.
இந்த நிலையில் அவரது தேர்விற்கான அனுமதிச்சீட்டை பரிசோதனை செய்தபோது, அதில் படம் மாற்றப்பட்டு பிறகு மீண்டும் ஒரு படம் ஒட்டப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த மோசடி தொடர்பாக காவல்துறையில் புகார் செய்யப் பட்டது, புகாரைப் பெற்றுக்கொண்ட கவுகாத்தி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற நபர் தேர்வு எழுத வேறு ஒரு நபரைப் பயன்படுத்தியுள்ளார் என்று தெரிய வந்தது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் தேர்வில் 99.9 சதவிகிதம் மதிப்பெண் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆள்மாற்றாட்டம் செய்த நீல் நட்சசத்திரா தாஸ், அவரது தந்தை மருத்துவர் ஜோதிர்மோய் தாஸ் மற்றும் தேர்வு மய்யத்தின் ஊழியர்களான ஹமேந்திர நாத் சர்மா, பிரஞ்சல் கலிதா மற்றும் ஹிருலால் பதக் ஆகி யோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கவுகாத்தி காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் கைதான அனை வரும், உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கவுகாத்தி காவல்துறை ஆணையர் எம்.பி. குப்தா செய்தியாளர் களிடம் தெரிவிக்கையில், அசாமில் ஜே.இ.இ. தேர்வில் முதலிடம் வகித்தவர் மீது அசாமில் உள்ள காவல்துறையில் புகார் பதிவு செய்யப் பட்டுள்ளது. அவர் சார்பாக தேர்வில் எழுதியவர் குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். கவுகாத்தியில் உள்ள தேர்வு மய்யத்தின் பாதுகாப்பு ஊழியர்களும் இதில் ஈடுபட்டுள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய பலரைத் தேடி வருகிறோம் என்று தெரிவித்தார்.
இது தொடர்பான புகாரை சில நாள்களுக்கு முன்பு மித்ராதேவ் சர்மா என்பவர், வாட்ஸ்அப் மூலம் அனுப்பியிருந்தார். அதில் குற்றம் சாட்டப்பட்டவர் மட்டுமல்லாமல் பலர் தேர்வில் முதலி டம் பிடிப்பதற்கு தவறான வழிகளை பயன் படுத்தியுள்ள தாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மோசடிக்கு தேர்வு மய்ய பாதுகாப்பு அதிகாரிகள் உதவியதாகவும், தேர்வை நடத்திய நிர்வாகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அசாம் காவல் துறையினர் தேசிய தேர்வு முகமைக்கும் தகவல் அளித்துள்ளனர்.
நாடு முழுவதும் ‘நீட்' தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பான பெரும் சர்ச்சை கிளம்பி வரும் நிலையில் தற்போது மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற மாணவர் ஒருவர் ஜே.இ.இ. எனப்படும் நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்திருப்பது கல்வியாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
No comments:
Post a Comment