விசாரணைக் கைதிகளிலும் வருணாசிரமமா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 4, 2020

விசாரணைக் கைதிகளிலும் வருணாசிரமமா

விசாரணைக் கைதிகளிலும் வருணாசிரமமா?


இந்திய சிறைகளில் கடந்த 4 ஆண்டுகளாக விசாரணைக் கைதிகளாகவும், தண்டனைக் கைதிகளாகவும் இருப்பவர்களில் பெரும்பான்மையானோர் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மற்றும் பழங்குடியினரே என்று தேசிய குற்றவியல் அறிக்கை ஒன்று புள்ளி விவரங்களோடு வெளியிட்டுள்ளது.


தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் பணியாளர்கள் குறைபாட்டால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதன் அறிக்கை கள் சரிவர வெளிவரவில்லை. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள ஆய்வறிக்கையில் 4 ஆண்டுக்கான சிறைக் கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் குறித்த முழு விவரம் வெளியாகி உள்ளது. அதில் பழங்குடி மக்களை பொறுத்தவரையில், 2015ஆம் ஆண்டில் 13.7 சதவீதத்தினர் குற்றவாளிகளாகவும், 12.4 சதவீதத்தினர் விசாரணைக்கைதிகளாகவும் உள்ளனர். 2019ஆம் ஆண்டில் இதன் அளவு 13.6 சதவீதம் மற்றும் 10.5 சதவீதமாக உள்ளது.


இந்தியாவில் உள்ள சிறைகளில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொதுப்பிரிவினர், உயர் ஜாதியினரோடு ஒப்பிடுகை யில், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் முஸ்லீம்கள் அதிகளவில் இருப்பதாக, தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2019ஆம் ஆண்டின் தகவலின்படி, குற்றவாளிகளைவிட விசாரணைக்கைதிகளாக அதிகளவில் இஸ்லாமியர்கள் சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர்.  நாட்டில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 21.7 சதவீதத்தினர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். விசாரணைக் கைதிகளாக 21 சதவீதம் தாழ்த்தப்பட்டோர்களாக உள்ளனர். 2011ஆம் ஆண்டில் எடுக் கப்பட்ட கணக்கெடுப்பில், இது 16.6 சதவீதமாக இருந்தது. பழங் குடியின மக்கள் தொகையில் 13.6 சதவீதத்தினர் குற்றவாளிகளாக வும், 10.3 சதவீதத்தினர் விசாரணைக்கைதிகளாகவும் உள்ளனர். 2011 ஆண்டைய கணக்கெடுப்பின்போது இது, 8.6 சதவீதமாக இருந்தது. இந்திய மக்கள் தொகையில் 14.2 சதவீதம் உள்ள முஸ்லீம்களில், 16.5 சதவீதம் பேர் குற்றவாளிகளாகவும், 18.7 சதவீதத்தினர் விசாரணைக்கைதிகளாகவும் சிறைகளில் உள்ள னர்.


"நாட்டில் நீதித்துறை எப்போதும் ஏழை மக்களுக்கு சாதகமாகவே இல்லை என்ற கருத்து நிலவுகிறது. வசதி படைத்தவர்கள் நல்ல வழக்குரைஞர்களை வைத்து எளிதில் பிணை பெற்று விடுகின்றனர். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் சிக்கித்தவிக்கும் பாமர மக்கள், சிறிய சிறிய வழக்குகளில் சிக்கினாலுமே, அவர்களால் எளிதில் பிணை பெற முடிவதில்லை" என்று காவல்துறை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் முன்னாள் தலைவர் என். ஆர். வாசன் தெரிவித்துள்ளார்.


நாட்டின் மக்கள் தொகையில் 52 சதவீதம் அளவு உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொதுப் பிரிவினரிடையே 2006ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மாதிரி சோதனையில், ஓபிசி மற்றும் பொதுப்பிரிவினரில் 35 சதவீதத்தினர் குற்றவாளிகளாகவும், இருபிரிவுகளிலும் 34 சதவீதத்தினர் விசாரணைக்கைதிகளாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உயர் ஜாதி இந்துக்கள் மற்றும் மற்ற மதங்களில் உள்ள வகைப்படுத்தப்படாத மக்கள், மக்கள் தொகையில் 19.6 சதவீதமாக உள்ள நிலையில், அவர்களில் 13 சதவீதத்தினர் குற்றவாளிகளா கவும், 16 சதவீதத்தினர் விசாரணைக்கைதிகளாகவும் உள்ளனர்.


தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி, இஸ்லாமியர்களில், 2015ஆம் ஆண்டில் 20.9 சதவீதத்தினர் விசாரணைக் கைதிகளாகவும், 15.8 சதவீதத்தினர் குற்றவாளி களாகவும் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். 2019ஆம் ஆண்டில் இதன் சதவீதம் 18.7 மற்றும் 16.6 சதவீதமாக உள்ளது. 2015ஆம் ஆண்டில் மட்டுமல்லாது 2019ஆம் ஆண் டிலும் குற்றவாளிகள் மற்றும் விசாரணைக்கைதிகளின் அளவு 21 சதவீதமாக உள்ளது. பழங்குடி மக்களை பொறுத்தவரையில், 2015ஆம் ஆண்டில் 13.7 சதவீதத்தினர் குற்றவாளிகளாகவும், 12.4 சதவீதத்தினர் விசாரணைக்கைதிகளாகவும் உள்ளனர். 2019ஆம் ஆண்டில் இதன் அளவு 13.6 சதவீதம் மற்றும் 10.5 சதவீதமாக உள்ளது.


தாழ்த்தப்பட்ட பிரிவினர் அதிகளவில் விசாரணைக் கைதிகளாக உள்ள மாநிலங்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேசம் (17,995), பீகார் (6,843), பஞ்சாப் (6,831). பழங்குடியினர் அதிகம் உள்ள மாநிலங்கள் மத்தியபிரதேசம் (5,894), உத்தரப்பிரதேசம் (3,954), சட்டீஸ்கர் (3,471). இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள மாநிலங்கள் உத்தரப்பிரதேசம் (21,139), பீகார் (4,758), மத்தியப்பிரதேசம் (2,947).


 தாழ்த்தப்பட்ட பிரிவினர் அதிகளவில் குற்றவாளிகளாக உள்ள மாநிலங்களின் பட்டியலின்படி உத்தரப்பிரதேசம் (6,143), மத்தியப் பிரதேசம் (5,017), பஞ்சாப் (2,786). பழங்குடியினர் அதிகம் உள்ள மாநிலங்கள் மத்தியப்பிரதேசம் (5,303), சட்டீஸ்கர் (2,906), ஜார்க்கண்ட் (1,985). இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள மாநிலங்கள் உத்தரப்பிரதேசம் (6,098), மேற்குவங்கம் (2,369), மகாராட்டிரா (2,114).


விசாரணைக் கைதிகள் என்ற பெயரில் காலவரையறையின்றி சிறையிலேயே கிடந்து உழலுவது என்ன நியாயம்?


ஆண்டுகள் கணக்கில் விசாரணைக் கைதிகளாக உள்ள வர்கள், விசாரணையில் குற்றவாளிகள் அல்லர்என்று நிரூபிக்கப் பட்டால் குற்றமற்ற அந்த மக்கள் நீண்ட காலம் சிறையில் அவதிப்பட்டதற்கு யார் பொறுப்பு? அவர்களின் குடும்பத்தினர் அனுபவித்திருக்கும் துன்பங்களுக்கும், இழப்புகளுக்கும் பரிகாரம் என்ன - இழப்பீடுதான் என்ன?  மனித உரிமை ஆணையம் இந்தப் பிரச்சினையில் எந்த வகையில் செயல்பட்டது என்பது முக்கிய வினாவாகும். அதிலும் தாழ்த்தப்பட்டோரும், சிறுபான்மையினரும்தான் விசாரணைக் கைதிகளில் அதிகம் என்றால், இதில்கூட வருணாசிரமப் பார்வையா? இதற்கொரு முடிவு எட்டப்படுதல் மிகவும் அவசியம், அவசரம், தேவை!


No comments:

Post a Comment