அப்பாவிகளா...?
இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 81 ரவுடிகள் கைது. 5 பேர்மீது குண்டர் சட்டம் பாய்கிறது.
இந்த ரவுடிகள் என்ன அப்பாவிகளா? பி.ஜே.பி.யில் சேர்ந்திருக்கலாம் அல்லவா!
நவீன
மனுதர்மமோ!
தேசியக் கொடியை இனிமேல் அவமதிக்கமாட்டேன். - ஒரு நடிகர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
இதே நடிகர் ஊடகங்களில் பணியாற்றும் பெண்களின் ஒழுக்கம் குறித்துக் கேவலமாகப் பேசினார்; கைது செய்யப்படவில்லை.
பி.ஜே.பி.யின் தேசிய செயலாளர் உயர்நீதிமன்றம் குறித்துக் கேவலமான சொல்லால் அர்ச்சனை செய்தார்.
கைது செய்யப்படவில்லை; உயர்நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டார் - அத்தோடு அது முடிவுக்கு வந்தது.
அது என்ன, பார்ப்பனர்கள் என்றால் வருத்தம் - மன்னிப்பு. கருப்பு மனிதர்கள் என்றால் சிறைவாசம்!
ஒரு குலத்துக்கொரு நீதி பேசும் மனுதர்மம் மீண்டும் மலர்ந்து மணம் வீசுகிறதோ!
திருப்திதானே!
'பி.எம்.கேர்ஸ்' எனப்படும் நிதியத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி
ரூ.இரண்டரை லட்சம் வழங்கினார்.
இந்த நிதியத்தில் நன்கொடை வழங்கியவர்கள் யார்? யார்? என்று மேனாள் மத்திய நிதியமைச்சர்
ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டே இருந்தார்.
இப்பொழுது முதல் முதலாக ஒருவருடைய பெயர் தெரிந்துவிட்டது. அவர்தான் பிரதமர் நரேந்திர மோடி. ப.சிதம்பரம் அவர்களுக்குத் திருப்தி தானே!
சீராட்டும் தாலாட்டு!
இடைபாலின குழந்தைகளுக்கு
(திருநங்கை)த் தாலாட்டுப் பாடல்கள் ஆறு இதுவரை கேரள மாநிலத்தில் உருவாகி ஒலிநாடாவாக வெளிவந்துள்ளது.
மூன்றாம் பாலினத்தவர் என்று அறியப்படுபவர்களை 'திருநங்கை' என்று புதிய பெயரளித்து, அவர்கள்மீதான மதிப்பை உயர்த்தியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.
அரவாணி என்று தூற்றப்பட்டவர்கள் - ஏன் வீட்டிலிருந்தே விரட்டப்பட்டவர்களும் மனிதர்கள்தாம் என்ற உணர்வோடு, குழந்தைப் பருவத்திலேயே சீராட்டும் தாலாட்டுப் பாடல் மனிதநேய மாண்பின் மலர்ச்சியே!
இந்தத் தாலாட்டுப் பாடல்களை ஒரு திருநங்கையைத் (ஜெயராஜா மல்லிகா) தவிர்த்து மற்றவர்கள் எழுதியிருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பாக இருந்திருக்குமே!
யாருக்கு எதிராக?
இந்தியாவில் யாருக்கு ஆதரவாகவும் 'பேஸ் புக்' நிறுவனம் செயல்படவில்லை என்று பேஸ் புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
பரவாயில்லையே - யாருக்கு எதிராக செயல்படுகிறது என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறதே!
'வாட்ஸ் அப்' குறித்தும் இதே புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாவற்றையும் தனக்குக் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற இரக்கமற்ற மனப்பான்மை கொண்ட ஓர் அரசு இந்தியாவில்!
இப்பொழுது உள்நாட்டையும் தாண்டி அதன் கை பன்னாட்டு அளவுக்கு நீண்டு விட்டதோ!
No comments:
Post a Comment