மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கருத்தை விமர்சனமாக  எடுத்துக்கொள்ளாமல் தண்டனை விதிப்பதா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 2, 2020

மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கருத்தை விமர்சனமாக  எடுத்துக்கொள்ளாமல் தண்டனை விதிப்பதா

மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கருத்தை விமர்சனமாக  எடுத்துக்கொள்ளாமல் தண்டனை விதிப்பதா?


மூன்று மூத்த நீதிபதிகள், தலைமை நீதிபதிபற்றி குறை கூறிக் கருத்துச் சொல்லவில்லையா?


தண்டனையை மறுபரிசீலனை செய்வதே சரியானது - நடந்தவற்றை மறந்து நடப்பவை நல்லவையாக அமையட்டும்!



உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்து மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கூறிய கருத்தை விமர்சனமாக எடுத்துக் கொள்ளவேண்டுமே தவிர, குற்றமாகக் கருதத் தேவையில்லை. அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படவேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


உச்சநீதிமன்றம்பற்றிய தனது டுவிட் டரில் நீதிபதிகள்பற்றி கருத்துப் பதிவு செய்த மூத்த வழக்குரைஞர், சமூக ஆர்வலர் பிரசாந்த் பூஷன், தான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன், மன்னிப்பு கேட்கமாட்டேன், தண்டனை தந்தால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன் என்று கூறியிருந்தார்.


அவர் மன்னிப்புக் கோரமாட்டேன் என்றதால், கடந்த 31.8.2020 அன்று ஒரு ரூபாய் தண்டனை அவருக்குக் கொடுக்கப் பட்டது.


மத்திய அரசு வழக்குரைஞரான கே.கே. வேணுகோபால், மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷனுக்குத் தண்டனை தர வேண்டாம்; எச்சரிக்கை செய்துவிடலாம் என்பதே தமது கருத்து என்று கூறினார். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் பலரும், உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி (ஓய்வு) உள்பட  வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கூறியதை தாராள மனதுடன் விமர் சனமாகவே கொள்ளவேண்டும் என்று கூறினர்.


அவசர தீர்ப்பு ஏன்?


அடுத்த நாள் பதவி ஓய்வு பெறப் போகும் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா அவர்கள் 31.8.2020 அன்று வழக்கு ரைஞர் பிரசாந்த் பூஷனுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்தார்;  அபராதத்தை 15 ஆம் தேதிக்குள் கட்ட மறுத்தால் 3 மாதங்கள் சிறையும் - 3 ஆண்டுகளுக்கு வழக்குரைஞர் தொழில் செய்யக்கூடாது என்றும் தண்டனை அறிவித்தார். இந்தத் தீர்ப்பு முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல; அவர் கூறியதுபற்றிய, விளக்கம்பற்றிய வழக்கு நிலுவையில் வேறு அமர்வுக்கு வரவிருக் கும் நிலையில், இப்படி ஒரு அவசரம் - அதீதமான தண்டனை (3 மாத சிறை - மூன் றாண்டுகளுக்கு வழக்குரைஞர் தொழிலை நடத்தக்கூடாது என்பது) சரியானதாகப்பட வில்லை.


விமர்சனமாக அதை எடுத்துக்கொள் ளாமல், குற்றச்சாட்டாக எடுத்துக்கொண் டால், சம்பந்தப்பட்ட நீதிபதிகளிடம் விசா ரணை நடத்தவேண்டியது சட்டக் கட்டாயம் அல்லவா?


மூன்றாவதாக


ஒரு தண்டனையா?


சாதாரணமாக கிரிமினல் சட்ட நடை முறைகளில் பின்பற்றப்படும் நடைமுறைக்கு ஆளாகவேண்டிய கட்டாயத்திற்குத் தலைமை நீதிபதியும் உள்பட வேண்டியி ருக்கும் என்பதால், அது மாதிரி இல்லாமல் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷனுக்கு ஒரு ரூபாய் அபராதம்; கட்டத் தவறினால் மூன்று மாத சிறைத் தண்டனையும், மூன்று ஆண்டுகள் தொழில் நடத்தத் தடை என்று  ஓய்வு பெறும் நீதிபதி அருண்மிஸ்ரா அவர்கள் தண்டனையை அறிவித்தார்!


பொதுவாக தண்டனைகளை நீதிமன் றங்கள் வழங்கும்போது, ‘‘அபராதம் அல் லது சிறை அல்லது இரண்டும்'' (Fine or imprisonment sentence or both) என்று வழங்குவதுதான் சட்டப்படிக்கான நடை முறை - இதுவரை நாம் கேள்விப்பட்டிருப் பது;  ஆனால், இந்தத் தண்டனை அளிப்பில், ஒரு ரூபாய் அபராதம் அல்லது 3 மாதம் சிறைத் தண்டனை, மூன்று ஆண்டுகள் தொழில் நடத்தத் தடை என்று மற்றொன்று மூன்றாவதாக அளித்தது. சட்டத்தின்படி சரியா என்று சட்ட நிபுணர்கள்தான் கூறவேண்டும். அது ஒருபுறம் இருக்கட்டும்.


ஒரு ரூபாய் அபராதத்தைச் செலுத்திய வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன், மேல்முறை யீட்டைச் செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.


உலகம் முழுவதும்


பரவும் நிலை ஏற்பட்டு விட்டதே!


இந்த வழக்கில் இவ்வளவு அவசரம் காட்டவேண்டியது சரிதானா? இதன்மூலம் உச்சநீதிமன்றத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது என்பதை உறுதியாகக் கூற முடியுமா?


பிரசாந்த் பூஷனின் குற்றச்சாற்று  மற்றும் விளக்கங்கள்மூலம் - முதலில் ஒரு குறிப் பிட்ட அளவில் மட்டும் பரவியிருந்த தகவல்கள் - மேலும் பல மடங்கு உலகம் முழுவதும் - அதுவும் இந்தத் தகவல் தொழில்நுட்ப வேகத் தொடர்பு யுகத்தில் மேலும் பரவியதை யாராலும் தடுக்க முடியாது.


உண்மை (Truth), ‘Bona-fide' -  நல் லெண்ணம் - போன்ற தற்காப்பு வாதங்கள் குற்றம்சாற்றப்பட்டவருக்கு இச்சட்டத்தின் கீழ் இருக்கிறதா? இல்லையா? பயன்படுத்த வாய்ப்புள்ளதா என்பதெல்லாம் சட்ட ஆராய்ச்சி - விவாதங்களுக்குரியது என்றா லும்கூட, நாட்டில் ஜனநாயகத்தின் மக்க ளின் இறுதி நம்பிக்கை - உச்சநீதிமன்றத் தின்மீதுதான் உள்ளது என்ற நிலையில், அதன்மீது ஏற்பட்டுள்ள மாசு துடைக்கப்பட வேண்டாமா?


அவர் Corruption என்று கூறினார் என்ற குற்றச்சாற்றுக்கு அவர் ‘பொருள் - பணம்- லஞ்சம்' என்ற அர்த்தத்தில் நான் கூற வில்லை என்று அளித்த விளக்கத்தைப் புறந்தள்ளிட முடியாது. சாக்ரட்டீஸ் மீது கிரேக்கத்தில் சாற்றப்பட்ட குற்றச்சாற்று ‘‘இளைஞர்களைக் கெடுத்திருக்கிறார்'' (‘‘He Corrupted  the Youth'') என்பதுதான். எனவே, Corruption என்ற ஆங்கிலச் சொல்லுக்கு லஞ்சம் bribe என்று மாத்திரம் குறுகிய பொருள் கொள்ளவேண்டாம் என்ற வாதம் ஏற்கப்படாதது வருத்தத் திற்குரியதாகும்.


‘சீசரின் மனைவி சந்தேகத்துக்கு


அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும்!'


நீதிபதிகள் தீர்ப்பு எழுதும்போது, ஆங் கிலப் பழமொழி ஒன்றைக் குறிப்பிடுவது உண்டு. ‘‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும்'' என்று.


அது நீதிபதிகள் அறியாத ஒன்றா? அண் மைக்காலத்தில் மூன்று மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்புபற்றி இத் தீர்ப்பில் குறிப்பிட்டு இருப்பது நீதித்துறை யின் புகழ் களங்கமாகியது என்பதை ஒப்புக்கொண்ட நிலைதானே!


தலைமை நீதிபதிகள்மீது ‘Mee too'' என்ற பாலினச் சீண்டல் குற்றச்சாற்று வழக் குகள் வந்தனவே - இவை  உச்சநீதிமன்றத் திற்குப் பெருமை அளிப்பதா?


அந்தத் தலைமை நீதிபதியாக இருந்தவர் இராமர் கோவில் - பாபர் மசூதி வழக்கை விரைந்து தொடர் விசாரணை நடத்திட ஏற்பாடுகளை அறிவித்து, நம்பிக்கை அடிப்படையில் இராமர் கோவில் கட்ட நிலம் வழங்கி அளித்த தீர்ப்பும், அதன் தொடர் நடவடிக்கை - ஓய்வு பெற்ற பின்பு உடனடியாக மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்; இது உச்சநீதிமன் றத்தின் நீதி பரிபாலனத்திற்குப் பெருமை சேர்ப்பதாகுமா?


பாபர் மசூதி இடிப்பு வழக்கு நிலுவையில் இருக்கும்போது அவசர தீர்ப்பு ஏன்?


பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் (அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, கல் யாண்சிங், உமாபாரதி, வினாயக் கத்தியார் போன்றவர்கள்) மீதான கிரிமினல் வழக்கு கள் முடிவதற்கு முன்னாலேயே அதே இடத்தில் இராமர் கோவில் கட்ட அனு மதித்த தீர்ப்பு விசித்திரமானதொன்று அல் லவா? என்ற கருத்து பரவலாக உள்ளனவே!


(மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கூறியதுபற்றிய கட்டுரை தனியே 2 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ளது காண்க).


பல முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் (ஓய்வு), உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள், சமூக சிந்தனையாளர்கள், சட்ட நிபுணர்கள் பலரும் இதுபற்றி எழுதிய ஏராளமான கட்டுரைகளும், கருத்துரைகளும் உச்சநீதி மன்றத்தின் மதிப்பை உயர்த்தும் வகையில் அமைந்துள்ளதா?


மன்னிப்பு என்பது மனதார உணர்ந்து கூறவேண்டிய ஒன்று - வற்புறுத்தி, அச் சுறுத்திப் பெற வைப்பது அல்ல! சில வழக்குரைஞர்கள் சுட்டிக்காட்டியதுபோல, Coersion - ‘நிர்ப்பந்தம்' ஆகிடக் கூடாது.


நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும் - இனி நடப்பவை நல்லவைகளாகட்டும்!


உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் தான் இன்றைய நிலையில் மக்களின் உரிமைகளையும், ஜனநாயக மாண்புகளை யும், பொது ஒழுக்க விழுமியங்களையும் காப்பாற்றக் கூடிய கடைசி நம்பிக்கை; இந்நிலை பொய்த்துவிடாது பார்த்துக் கொள்வது நீதிமன்றங்களின் கடமை - அதுதான் அவற்றின் உண்மையான மதிப்பை உயர்த்த முடியும்; மதிப்பு அவ மதிப்பாக ஆகாமல் தடுக்கக் கூடிய ஒன்றாகும். அது அந்த அமைப்புகளிடம் தான் உள்ளது!


நடந்தவைகள் நடந்தவைகளாகட்டும்!


இனி நடப்பவைகள் நல்லவைகளா கட்டும்!


 


கி.வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


2.9.2020


 


No comments:

Post a Comment