‘மூன்று நூற்றாண்டுகளில் சமூகநீதி’ - தமிழர் தலைவரின் பொழிவு-6 (நிறைவு)
19-ஆம் நூற்றாண்டில் தக்காண பீடபூமியில் மராட்டியம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு மற்றும் சிறு சிறு பண்பாட்டுத் தனித்துவம் மிக்க மக்கள் வாழ்ந்த பகுதிகளில் பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்த்து - ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்து எழுந்த தன்னெழுச்சிகள், தனி மனித முயற்சிகள், சமூகப் புரட்சியாளர்கள் எடுத்த முன்னெடுப்புப் போராட்டங்கள் நிறைந்த சமூகநீதி வரலாறு திட்டமிட்ட முறையில் இருட்டடிப்பு செய்யப்பட்டதைப் பற்றி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி உரையாற்றினார். செப்டம்பர் 18-அன்று தொடங்கி 20, 22, 26, 28 ஆகிய நாள்களில், ‘மூன்று நூற்றாண்டுகளில் சமூகநீதி - ஒரு வரலாற்றுப் பார்வை’ எனும் தலைப்பில் காணொலி வாயிலாக ஆற்றிய தொடர் நிகழ்வின் ஆறாம் பொழிவை 29.08.2020 அன்று மாலை 6.30 மணி அளவில் தொடங்கி விரிவாகப் பேசி நிறைவு செய்தார்.
ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய சிந்துவெளி நாகரிகத் (2500-1700 BCE) தடயங்களை, அகழாய்வு செய்த அறிஞர்களின் ஆய்வுகள் வரலாற்றுக் குறிப்புகளின் அடிப்படையில் ‘திராவிடர் நாகரிகம்’ என ஆதாரப்பூர்வமாக நிறுவிடும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அத்தகைய முயற்சிகளைத் திசை திருப்பி, திரிபுவாதம் செய்து, அது ஆரிய அடையாளமே என உண்மைக்கு மாறாக நிறுவிட முயலும் ஆதிக்கச் சக்திகளின் திட்டமிட்ட செயல்களும் நடைபெற்று வருகின்றன. சிந்து சமவெளி அகழாய்வுகளில் கிடைத்த காளை மாட்டுச் சின்னத்தை (திராவிடர் அடையாளத்தை) குதிரைச் சின்னமாக (ஆரிய வரலாற்று அடையாளமாக) மாற்றிட கடந்த காலங்களில் - பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்த பொழுது நடைபெற்ற முயற்சிகள் முறியடிக்கப் பட்டதையும் நாம் நினைவு படுத்திப் பார்க்க வேண்டும். நாட்டின் தென்புலமான தக்காண பீடபூமியில் ஆரியப் பண்பாட்டுப் படை யெடுப்பை எதிர்த்து அந்தந்தப் பகுதியில் நடைபெற்ற எதிர்ப்புகளை உள்ளடக்கிய சமூகநீதிப் போராட்ட வரலாற்றை திட்டமிட்டு மறைத்திடும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இன்று தென்பகுதியில் - சமூகநீதித் தளத்தில் முற்போக்கு முயற்சிகள், முன்னெடுப்பு முயற்சிகள் (வடபுலத்தில் அப்படி எதுவும் நடைபெறாத நிலையில்) தொடர்வதற்கு
19-ஆம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க அளவில் எழுந்த போராட்டங்களே அடிப்படையாகும். அத்தகைய சமூகநீதிப் போராட்டங்களை முழுமையாக வெளிக் கொணர்ந்து, நாட்டில் நிலவிடும் சமூக அநீதிகள் அனைத்திற்கும் அடிப்படைக் காரணமான ஆரிய-பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்புகளைப் பற்றி புதைக்கப்பட்ட ஆவணக் குறிப்புகள் துணை கொண்டு வெளிக்கொணர வேண்டிய மாபெரும் பொறுப்பு நமக்கு உண்டு. அந்தக் காலத்தில் நடைபெற்ற எழுச்சிகள் பற்றிப் பதிவு செய்த இதழியல் குறிப்புகள், பதிப்பித்த புத்தகங்கள் - அவைகளில் கிடைக்கும் சமூகநீதி பற்றிய அரிய பொக்கிஷங்களைத் தொகுத்து இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமையும் நமக்கு உண்டு. இத்தகைய ஆவணப் பதிவுகளை மீட்சி செய்து கடந்த காலங்களில் நடைபெற்ற ஆரியப் பண்பாட்டு எதிர்ப்புகளை - சமூகநீதி வரலாற்றை முழுமையாக எழுத வேண்டிய அரும்பணியினை நமது வரலாற்று ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவூட்டி, வலியுறுத்தி பொழிவினை தொடங்குகிறோம்.
‘உலுத்துப் போயிருந்த பாலியல் அராஜகம்’
அன்றைய மலையாள தேசத்தில் நடைபெற்ற ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பினால் பெண்களை அடிமைப்படுத்துவது - அடக்குமுறைக்குத் தொடர்ந்து ஆட்படுத்தி வைப்பது - அத்தகைய நிலைமைகளே இயல்பானவை, புனிதமானவை, தெய்வங்கள் அருளிச் செய்தவை என பெண்களே நினைக்கும் அளவிற்கு - ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு பழைமைவாதம் புரையோடிப் போயிருந்தது. இந்த பெண்ணடிமையின் உச்சகட்டமாக பாலியல் அராஜகத்தை, பண்பாட்டுப் புனிதமாகக் கருதிடும் மனநிலையினை பெண்களிடம் புகுத்திவிட்டனர். பார்ப்பனப் படையெடுப்பால் நடந்த கொடுமைகள் உயர்வுத் தன்மையின் ‘ஜொலிப்பு’ அடையாளங்களாக (Doctrine of Imitation) பார்ப்பனர் அல்லாத உயர்ஜாதியினரிடமும் நிலவி வந்தது. ‘சம்பந்தம்’ எனும் திருமண வழக்கம் பார்ப்பனர் அல்லாத உயர்ஜாதியினரான நாயர் சமுதாயத்தில் நிலவியது. மலையாள தேசத்திற்கே உரிய நம்பூதிரிப் பார்ப்பனர் நடத்திய பாலியல் அராஜகம், நாயர் சமுதாய மக்களிடம் புனிதச் செயலாகக் கருதப்பட்டது. மகிழ்வுடன் பெருமையாகக் கருதிய மனநிலையும் அன்று நிலவியது. நாயர் சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் திருமணத்திற்குப் பின் வரும் முதல் இரவை நம்பூதிரிப் பார்ப்பனரிடம்தான் கழிக்க வேண்டும் என பண்பாட்டுப் படையெடுப்பின் உச்சகட்டமாக பாலியல் அராஜகம் நடைபெற்று வந்தது. ‘பார்ப்பனர் தொட்டால்தான் எதுவும் துலங்கும்’ என தம்மை உயர்வாகக் கருதிடும் பார்ப்பனர் அல்லாத உயர்ஜாதியினரிடம் நிலவிய அவலங்களை எதிர்த்து அவ்வப்பொழுது கிளம்பிய சுயமரியாதை உணர்வு அடிப்படையிலான போராட்டங்கள் ஆதிக்க சக்திகளால் அடக்கப்பட்டன. இத்தகைய கொடுமைகள் பற்றிய குறிப்புகள் ‘அந்தர்ஜனம்’ மற்றும் ‘தாத்ரிக் குட்டியின் ஸ்மார்த்த விசாரம்’ ஆகிய நூல்களில் விரிவாகக் கிடைக்கின்றன.
தோள் சீலைப் போராட்டம்
பார்ப்பன ஆதிக்கத்தின் நீட்சியாகத் தாழ்த்தப்பட்ட பெண்களை பாகுபடுத்தி, இழிவுபடுத்தி பாலியல் அடிப்படையில் வரி வசூல் செய்த கொடுமைகள் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவியது. பார்ப்பன, உயர்ஜாதிப் பெண்கள்தான் தங்களது மார்பகங்களை மறைத்து குப்பாயம் அல்லது ரவிக்கை அணிந்து கொள்ள முடியும். தாழ்த்தப்பட்ட சமுதாயப் பெண்களுக்கு அத்தகைய உரிமைகள் இல்லை. மார்பக வரி என சமஸ்தானத்திற்கு கப்பம் (வரி) கட்டவேண்டும். மார்பகத்தின் அளவைப் பொருத்து வரி விகிதம் மாறும். மார்பகத்தைத் தொட்டுப்பார்த்துதான் வரிவிதிக்கும் அதிகாரிகள் மார்பக வரி அளவை நிர்ணயம் செய்வார்கள். உலகின் எந்த நாட்டில் நிலவியிருக்கும் இத்தகைய பாலியல் சார்ந்த வரிவிதிப்பு அராஜகங்கள். (Tax levy based on sexual body parts of ‘the oppressed’) - ‘புனித பூமி’ எனக் கருதப்படும் இந்த நாட்டினைத் தவிர?
அராஜகத்திற்கு உள்ளான பெண்கள் ஒரு கட்டத்தில் வெகுண்டு எழுந்தனர். சுயமரியாதை உணர்வினால் போராட முன்வந்தனர். மூன்று கட்டங்களாக அப் போராட்டங்கள் நடைபெற்றன. கிறிஸ்துவ மிஷனரிகள், மதம் மாறிய தாழ்த்தப்பட்டோருக்கும், பிற ஜாதி யினருக்கும் மேலாடை அணியும் உரிமையைப் பெற்றனர். அதன் தொடர்ச்சியாக மற்றோரும் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்படி எழுந்த போராட்டத்தை முறைப்படுத்தி தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு பாலியல் அராஜகத்திலிருந்து விடுதலை பெற்றுத் தந்தவர், அய்யா வைகுண்டர் (முத்துக்குட்டி சாமிகள்) இதிகாசப் புனைவுகளுள் ஒன்றான மகாபாரதத்தில் திரவுபதி துகிலுரியப்பட்ட பொழுது வந்த ‘பரமாத்மா’ மலையாள தேசத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மார்பகத்தை மறைக்க ‘ரவிக்கை’ அணிந்து கொள்ளும் உரிமையைப் பெற்றுத் தர ‘அவதாரம்’ எடுக்கவில்லை. (இதிகாசங்கள் எல்லாம் பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்ட புனையப் பட்டவையே) அய்யா வைகுண்டர்தான் வந்தார். போராடி மார்பகத்தை மறைத்திடும் உரிமைகளைப் பெற்றுத் தந்தார். ‘தோள் சீலைப் போராட்டம்’ என வரலாற்றுப் பதிவுகள் இருந்தாலும், அன்று நிலவிய சமூக அநீதிக் கொடுமைகள் இன்றைய தலைமுறைக்குத் தெரிந்து விடக்கூடாது என அந்தப் போராட்டங்கள் எல்லாம் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. மலையாள தேசத்தில் நடந்த தோள் சீலைப் போராட்டம்’ பற்றி ‘காலம் தோறும் பிராமணியம்’ எனும் தொடர் ஆவணப் பதிவு செய்த முற்போக்கு எழுத்தாளர், சீரிய சிந்தனையாளர் பேராசிரியர் அருணன் தனது நூலில் அந்தப் போராட்டங்களைப் பற்றி பதிவு செய்துள்ளார்.
இந்து ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு 100 ஆண்டுகள் வாழ்ந்த மறைந்த அக்னி ஹோத்திரம் தாத்தாச்சாரியார், ‘இந்து மதம் எங்கே போகிறது?’ எனும் நூலினை எழுதினார். அதில் நாடோடிகளாக இந்த மண்ணில் புகுந்த ‘ஆரியர்கள்’ தாங்கள் வரும் பொழுது தங்களது பெண்டிரை அழைத்துக் கொண்டு வரவில்லை. ஆண்கள் மட்டுமே வந்தனர். ‘மனு தர்மத்தை’யும் கொண்டு வந்தனர். இந்த மண்ணில் இருந்த பெண்களுடன் உறவு வைத்து, சந்ததியைப் பெருக்கினர். பலதலைமுறைகள் கடந்தும் தங்களது குடும்பத்துப் பெண்களாக இருந்தாலும், ஆரியப் பார்ப்பனர்களுக்கு ‘பெண்களைப் பற்றிய சமத்துவ மதிப்பீடு’ என்பது இல்லவே இல்லை; காரணம் பெண்களின் பூர்வீகம் ஆரியக் கலாச்சாரத்தில் உருவானதல்ல. இந்த மண்ணில் நிலவிய பண்பாட்டில் வந்தவர்கள். பெண்களை ஒட்டு மொத்தமாகப் பாகுபடுத்தி வர்ணாஸ்ரம (அ)தர்மத்தின் படி நால்வருணங்களுக்கு கீழே-பஞ்சமர்களுக்கு கீழே பெண்களை வைத்தனர். இதற்கு அடிப்படை ‘பெண்கள் ஆரம்பக் காலத்தில் ஆரியரோடு வந்தவர்கள் அல்ல’ என்பதாகும். இதனால்தான் பெண்களை சூத்திரர், பஞ்சமர்க்கும் கீழே ‘நாம சூத்திரர்’ என அடையாளப்படுத்தி - அடிமைப்படுத்தி - இழிவுபடுத்தி வைத்துள்ளது ஆரியப் பார்ப்பன ஆதிக்கம். பார்ப்பனக் குடும்பத்துப் பெண்களின் பூர்விகம் ஆரியமல்ல; திராவிடம் சார்ந்ததே. இந்த பெண் அடிமைத்தனம் என்பது ஆரிய ஆதிக்கத்தின் அடக்குமுறையால் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நிலவி நீடிக்கிறது. அந்த வகையில் ‘பெண் சமத்துவம்’ என்பது ஆரியக் கலாச்சாரத்தில் அறவே இல்லை என்பதுதான் உண்மை. பெண்களின் உரிமைக்கு, மீட்சிக்கு, வங்காளத்தில் ‘நாம சூத்திர இயக்கம்’ எனும் சமூகநீதி இயக்கம், சமயம் சாராமல் பக்தி இயக்கத்தின் அங்கமாக 1912-1925 காலக் கட்டத்தில் பெண் விடுதலைக்காகப் பாடுபட்டது.
தமிழக, கேரளப் பகுதிகளில் எழுந்த சுயமரியாதை உணர்வுகள் - போராட்டப் பதிவுகள்
தமிழ்நாடு மற்றும் அன்றைய கேரளப் பகுதிகளில் நிலவிய சமூகஅநீதி வழக்கங்கள். அவைகளை எதிர்த்து மக்களிடம் தோன்றிய எழுச்சி, நடைபெற்ற போராட்டங்கள் - அதன் காரணமாக ஏற்பட்ட சமூக நீதி சார்ந்த அரசு நடவடிக்கைகள் பற்றிய குறிப்புகள் வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள் எழுதிய புத்தகங்களில் அரிதாகக் கிடைக்கின்றன.
1947-இல் பேராசிரியர் முனைவர் சரஸ்வதி எழுதிய ‘Minorities in Madras State’ எனும் ஆய்வுப் புத்தகத்தில் அன்றைய சென்னை ராஜதானியில் பிரிட்டிஷ் ஆட்சியில் நடைபெற்ற சமூகநீதிக்கான நடவடிக்கைகள் பற்றிய குறிப்புகள் பல உள்ளன.
1833-ஆம் ஆண்டிற்கு முன் வர்ணாஸ்ரமத்தின்படி பார்ப்பனருக்கு மட்டும் கல்வி கற்க உரிமை இருந்தது. அந்தக் காலத்தில் கல்வி என்பது வேதக் கல்விதான். பிரிட்டிஷ் ஆட்சிக்கு உதவியாக இருக்கின்ற வகையில் தேவைப்படும் பணியாளர்களுக்கு உகந்த வகையில் கல்வி அளித்திடும் நோக்கத்தில் அனைத்து ஜாதி மக்களும் கல்வி கற்கலாம் எனும் நிலைமை உருவானது. ஆனால் அத்தகைய வாய்ப்புகளில் கூட ‘பந்திக்கு முந்தி உட்காருவது போல’ பார்ப்பனர்களே வேண்டி விரும்பி அந்த கல்வியைக் கற்றனர். இதனால் படித்தவர்களில் பெரும்பாலானவர்கள் பார்ப்பனராகவே இருந்தனர். 1854-ஆம் ஆண்டில் வருவாய் துறை சர்பாக வெளியிடப்பட்ட உத்தரவுப்படி (எண்.128) பார்ப்பனர்களின் ஆதிக்கம் தொடர்ந்து வந்து விடக் கூடாது என, ‘செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சார்ந்தவர்களால்’ உத்தியோகங்கள் நிரப்பப்படக் கூடாது என மாவட்ட ஆட்சியாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
இருப்பினும் கடப்பாவில் உள்ள ஒரே குடும்பத்தைச் சார்ந்த 116 பேருக்கு அரசாங்க உத்தியோகம் கிடைத்திட அந்தக் குடும்பத்தைச் சார்ந்த பார்ப்பன அதிகாரியான கிருஷ்ணராவ் என்பவர் காரணமாக இருந்தார் என வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது.
அந்நாளில் மக்கள் தொகை கண்காணிப்பு ஆணையராக இருந்த ஆங்கிலேய அதிகாரி அலெக்ஸாண்டர் கார்டியூ தமது கணக்கெடுப்பின் மூலம் அனைத்து ஜாதியினருக்கும் அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் பணிகள் வழங்கலாம் என பரிந்துரைக்கிறார். இத்தகைய நடவடிக்கைகள் நீதிக்கட்சி சென்னை ராஜதானியில் ஆட்சிக்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேய ஆட்சியாளர்களால் போடப்பட்ட உத்தரவுகளாகும்.
சென்னை ராஜதானியில்
வெளிவந்த திராவிடர் ஏடுகள்
ஆண்டாண்டு காலமாக அடக்கு முறைகளுக்கு ஆளாகியிருந்த மக்கள் விழிப்புணர்வு பெற்றிட பல ஏடுகள், சிற்றிதழ்கள் வெளிவந்தன. அந்த ஏடுகளால் ஏற்படுத்தப்பட்ட தாக்கம் அளவிட முடியாதது. 1869-இல் ‘சூரியோதயம்’, 1871-இல் ‘பஞ்சமன்’ எனும் ஏடுகள் வந்தன. ஒடுக்கப்பட்ட சமுதாயத் தலைவர்களுள் ஒருவரான ஜான்ரத்தினம் ‘திராவிடர் கழகம்’ என்ற பெயரிலேயே 1846-ஆம் ஆண்டில் ஒரு ஏட்டினைத் தொடங்கி இரண்டாண்டு காலம் நடத்தினார். 1885-இல் ‘திராவிடப் பாண்டியன்’ இதழ் வெளிவந்தது. இந்த ஏடுதான் பின்னாளில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1917-இல் பதிப்பித்த ‘திராவிடன்’ எனும் இதழுக்கு முன்னோடியாக இருந்தது. 1893-இல் ‘பறையன்’ எனும் வார இதழ் அடக்கப்பட்ட சமுதாயத் தலைவர் ரெட்டை மலை சீனிவாசன் முயற்சியில் வெளிவந்தது. புதிதாக வெளிவந்த இந்த ஏட்டினை அந்நாளில் வெளிவந்த பார்ப்பன நாளேடான ‘சுதேசமித்திரன்’ ஏட்டின் இதழ் மதிப்புரைக்கு அனுப்பினர். அதை ஆய்வு செய்த பத்திரிகையாளர் ‘பறையன்’ எனும் ஏட்டைத் தொட்டால் கூட ‘தீட்டு’ என குச்சியில் தூக்கி, பக்கம் பக்கமாக புரட்டிப் பார்த்த நிகழ்வுகளும் நடைபெற்றன. இத்தனை இடர்பாடுகளையும் தாண்டித்தான் அந்த திராவிட ஏடுகள் வெளிவந்தன.
1898-இல் வெளிவந்த ‘திராவிடன்’ ஏட்டைப் பற்றிய ஆய்வினை பத்திரிகையாளர் பெ.சு. மணி மேற்கொண்டு அதை உலக தமிழராய்ச்சி நிறுவனம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. அதில் அந்தக் காலத்தில் நடைபெற்ற சமூகநீதிப் போராட்டங்கள் பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. அதே போல இலங்கையிலிருந்து வெளிவந்த ‘ஆதிதிராவிடர்’ எனும் இதழ்பற்றிய ஆய்வினை பேராசிரியர் இரா. பாவேந்தன தொகுத்து நூலாக வெளியிட்டார். அந்த நூலில் ‘ஆதிதிராவிடர்’ ஏட்டில் வெளிவந்த சமூகப் புரட்சியாளர் சாகுமகராஜ் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம் வெளிவந்துள்ளது கிடைத்தற்கரிய குறிப்பாகும்.
கேரளாவில் நடைபெற்ற
சமூகநீதிப் போராட்டக் குறிப்புகள்
1800களின் தொடக்கத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ராம அய்யங்கார் திவானாக இருந்த பொழுது தமிழ்நாட்டு பார்ப்பனர்களை பல்வேறு உத்தியோகங்களில் திட்டமிட்டு நிரப்பினார். இந்தப் போக்கை உன்னிப்பாகக் கவனித்த ஜி.பி. பிள்ளை எனும் ஜி. பரமேசுவரன் பிள்ளை, மலையாளிக்கும் மலையாளி அல்லாதாருக்கும் உள்ள பிரச்சினையாக அதை மக்களிடம் கொண்டு சென்றார். 80 பக்கத்தில் மகஜர் ஒன்றை மன்னரிடம் அளித்து பார்ப்பனர் அல்லாதாருக்கு அரசுப் பணி வழங்கிட வேண்டும் என தெரிவித்தார். அந்த 80 பக்க அறிக்கை “The ways and means for the amelioration of non-brahmin races” எனும் குறுநூலாக வெளிவந்துள்ளது. பார்ப்பனரல்லாதாருக்கு நியாயமாக நடந்துகொள்ள பிரிட்டிஷ் ஆட்சியாளர் முயற்சித்த பொழுதெல்லாம், தங்களது பார்ப்பன ஆதிக்கத்திற்குப் புறம்பாக நடந்து கொள்வதை இந்திய மக்களின் நலனுக்குப் புறம்பாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நடந்துகொள்கிறார்கள் எனப் பொதுவெளியில் பிரச்சாரம் செய்தனர். Home Rule (உள்நாட்டவர் ஆட்சி வேண்டும் என பார்ப்பனர்கள் கேட்டது பார்ப்பனர்களுக்கான ஆட்சியே (Home Rule is Brahminical Rule). ஏகபோக உரிமையினை இழந்து வந்த பார்ப்பனர்கள் சமூகநீதிக்கு எதிராக எடுத்த முயற்சிகள் தக்காண பீடப்பகுதி முழுவதும் வெவ்வேறு வடிவங்களில் நிலவி வந்தது.
நீதிக்கட்சித் தோற்றமும் பார்ப்பனர் அல்லாதார் மேம்பாடும்
1916-இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம், பார்ப்பனர் அல்லாதார் இயக்கமாக உருவெடுத்தது. அது அரசியல் ஆட்சி அதிகாரத்திற்கு 1920-இல் வந்து பார்ப்பன ஆதிக்கத்தை தகர்த்து, பார்ப்பனர் அல்லாதாரின் நியாயமான நலனுக்கு பாடுபட்டது. பின்னாளில் நீதிக்கட்சி எனப் பரவலாக அறியப்பட்ட அரசியல் கட்சியை போன்று, கேரளத்திலோ, கர்நாடகத்திலோ, மராட்டியத்திலோ பார்ப்பனர் அல்லாதார் நலன் காத்திட எந்த அரசியல் அமைப்பும் தோன்றவில்லை. ஆட்சி அதிகாரத்திற்கும் வரவில்லை. நீதிகட்சி தொடங்கி, அது தொய்வடைந்த நிலையில் தலைமைப் பொறுப்பேற்ற தந்தை பெரியார் கொடுத்த உத்வேகத்தில் பார்ப்பனர் அல்லாதார் நலன் சமூகநீதித் தளத்தில் மேம்பட்டுக் கொண்டே வந்தது. இத்தகைய சமூக அரசியல் போக்கு தக்காண பீடத்தின் பிற பகுதிகளில் ஏற்படவில்லை. தமிழ்நாடு சமூகநீதித் தளத்தில் முன்னோடி மாநிலமாக விளங்குவதற்கு இங்கு எழுந்த பார்ப்பனர் அல்லாதார் இயக்கம்தான் முதன்மையான காரணம்.
தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய
சமூகநீதிப் பொக்கிஷங்கள்
தென் இந்திய நல உரிமைச் சங்கத்தினை நிறுவியவர்களுள் ஒருவரான சர்.பிட்டி. தியாகராயர், 1916-ஆம் ஆண்டில் Non-Brahmin (பார்ப்பனர் அல்லாதார்) எனும் ஆங்கில ஏட்டை நடத்தினார். தென்னிந்திய நல உரிமைச் சங்கம் வெளியிட்ட ‘ஜஸ்டிஸ்’ ஆங்கில ஏட்டிற்கும் முன்பானது; முன்மாதிரியானது தியாகராயர் நடத்திய ஏடு. இதன் ஒரு பிரதி கூட இன்று கிடைக்கவில்லை. அதுபோல நீதிக்கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் பேட்ரியாட் (Patriot) ஏட்டின் ஆசிரியராக இருந்த கருணாகர மேனன் தொகுத்த Non-Brahmin Letters (பார்ப்பனரல்லாதார் கடிதங்கள்) மற்றும் Dravidian worthies (திராவிட நன்மதிப்புகள்) எனும் நூல் வெளிவந்த தகவல்கள், உள்ளது. ஆனால் அந்த நூல்களின் நகல்களில் ஒன்று கூட இதுவரை கிடைக்கவில்லை: கிடைக்காத இந்தக் கருவூலங்கள் ஆணைக் காப்பகங்களில், பழைமை வாய்ந்த நூலகங்களில் நிச்சயம் கிடைக்கப் பெறும். அந்தப் புத்தகங்கள் கிடைக்கப் பெற்றால் நிச்சயம் சமூகநீதி வரலாற்றில் விடுபட்ட பல தொடர்களுக்கு இணைப்புக் கிடைத்துவிடும். தக்காண பீடப் பகுதியில் முழுமையான சமூக நீதி வரலாற்றை ஆவணப்படுத்தி அதிலிருந்து ஆக்கம் பெறுவோம்; சமூகநீதியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம். சமூகநீதியின் முழுமையான வெற்றியைப் பெறுவோம்.
தமிழர் தலைவர் ஆற்றிய ஆறு தொடர் பொழிவுகள் சமூகநீதி பற்றி ஆவணப் பதிவில் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கியுள்ளது. நிச்சயம் அந்த அத்தியாயம் கருத்துகள் நிறைந்த கருவூலமாக அமையும். வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும்.
தொகுப்பு: வீ. குமரேசன்
No comments:
Post a Comment