450 ஆண்டுக் கால வரலாறு படைத்த பாபர் மசூதியை ஒரு பட்டப் பகலில் பிஜேபியின் மூத்த தலைவர்களின் முன்னிலையில் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்., விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள், நிர்வாண சாமியார்கள் சகிதமாக இடித்துத் தூள் தூளாக்கி வெறியைத் தீர்த்துக் கொண்டதன் மூலம் - உலக மக்கள் மத்தியிலே இந்தியத் துணைக் கண்டத்தின் தலையை நிமிர்த்த முடியாத அளவுக்குக் கீழே தொங்க போட வைத்தனர்.
மன்னிக்கவே முடியாத அந்த வன்முறை வெறியாட் டத்தில் நேரடியாகப் பங்கேற்ற முக்கிய தலைவர்கள் எல்லாம், பிற்காலத்தில் துணைப் பிரதமராகவும், மத்திய உள்துறை அமைச்சராகவும், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும், காபினெட் அமைச்சர்களாகவும், முதல் அமைச்சராகவும் பதவியை அலங்கரித்தனர் என்பது இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றில் அழிக்கப்படவே முடியாத கறையாகும்.
இவர்கள் மீதான வழக்குகள் 28 ஆண்டுகாலமாக நடப்பதாகச் சொல்லப்படுகின்றன. "தாமதிக்கப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்ட தீர்ப்பு" என்று சொல்லுவது எல்லாம் இந்தியத் துணைக் கண்டத்தில் ஒரு பொருட்டேயல்ல!
இதில் சகிக்கவே முடியாத பெருங் கொடுமை மேலும் ஒன்று உண்டு. பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் மீதான வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பே, 'குற்றவாளிகள்' முன்னிலையிலேயே, ஒரு பிரதமர் ராமர் கோயிலைக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை சாங்கோ பாங்கமாக நடத்தி முடித்து விட்டார்.
அதுவும் கரோனா என்னும் உயிர்க் கொல்லி நோய் மக்களை அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் ஒரு சூழலில் இந்த அடிக்கல் நாட்டு விழா நடந்துள்ளது (5.8.2020). அதன் காரணமாக ராம ஜென்ம பூமி அறக்கட்டளையின் தலைவர் கரோனா தொற்றுதலுக்கும் ஆளாகி விட்டார்.
பாசிசத்துக்குப் பொட்டு வைத்ததுபோல இப்பொழுது, 'என்ன பந்தயம் கட்டுகிறாய்? - இதையும் தாண்டி அநியா யத்தின், அராஜகத்தின் சிகரத்துக்கே ஏறி, அடுத்தடுத்து மேலும் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை அடித்து, உடைத்து, நொறுக்கித் தள்ளுவோம்' என்று மீசையுள்ளவர்கள் மீசையை முறுக்கியும், பூணூல் அணிந்தோர் பூணூல் மீது சத்தியம் செய்தும் புறப்பட்டு விட்டனர்.
உத்தரப்பிரதேசம் மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்பது என்று கூறி மதுரா நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
இதற்காகவே கிருஷ்ண பூமி நிர்மாண நியாஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ("இதுபோன்ற பிரச் சினைகள் மக்கள் உணர்வோடு கலந்த மத சம்பந்தப் பட்டது; இதில் நீதிமன்றங்கள் தலையிட உரிமை இல்லை!" என்று சொன்னவர்களே, காற்று தங்கள் பக்கம் வீசும் நிலையில், இப்பொழுது தூற்றிக் கொள்வது புத்தி சாலித்தனம் என்ற முறையில் நீதிமன்றம் சென்றுள்ளனர்.)
மதுராவில் உள்ள ஷாயி ஈக்தா மசூதியை அப்புறப் படுத்த வேண்டும் என்பது வழக்கின் நோக்கமாகும்.
இத்தோடு நின்றுவிடவில்லை, இந்த வெறியர்களின் கோரத்தாண்டவம்! அடுத்து காசியில் உள்ள விசுவநாதர் கோயிலில் பாதியை இடித்து கியான் வாபி மசூதி கட்டப்பட்டுள்ளதாக இந்து அமைப்புகள் மேலும் ஒரு குரலைக் கொடுத்துள்ளன.
மத்தியில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு - ஆட்சி முறையில் எல்லா வகையிலும் கடுந்தோல்வியைச் சந்தித்தது. மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சிக்கு ஆளான நிலையில், இப்படி ராமன், கிருஷ்ணன், சிவன் என்று மதவாதங்களைக் கையில் எடுத்துக் கொண்டு, மக்களிடம் குடி கொண்டுள்ள மதப் போதையைப் பயன்படுத்தி, ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற முனைப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மதச் சார்பின்மை சக்திகள், சமூகநீதி சக்திகள் ஜனநாயக சக்திகள் பேரெழுச்சியாக இந்தியத் துணைக் கண்ட அளவில் கிளர்ந்து எழுந்தால் அல்லாமல், இந்நாட்டில் ஏற்பட்டு இருக்கும் கடும் வீழ்ச்சியிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியாது - ஒரு போதும் முடியவே முடியாது! இது கல்லின்மேல் எழுத்தாகும்!
No comments:
Post a Comment