விளைபொருட்களை விற்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட சந்தைகள் தேவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 23, 2020

விளைபொருட்களை விற்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட சந்தைகள் தேவை

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்



சென்னை, செப்.23 விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை விற்பனை செய்ய ஆயிரத்துக்கும் மேலான சந்தைகள் தேவை. ஒரு சந்தை அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச் சருமான ப.சிதம்பரம் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.


இரு வேளாண் மசோதாக்களை கடந்த ஞாயிறன்று மாநிலங் களவையில் குரல் வாக்கெடுப்பில் மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மசோதா மீதான விவாதத்தின்போது, வரம்பு மீறிச் செயல்பட்டதாகக் கூறி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8  நாடா ளுமன்ற உறுப்பினர்களை தற்காலிக நீக்கம் செய்து மாநிலங்களவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.


இந்தச் சூழலில் மசோதாவுக்கு ஆதரவாகவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நாளேடுகளில் மத்திய அரசு சார்பில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு நாடு, ஒரு சந்தை விவசாயிகளுக்கு சுதந்திரம் வழங்கும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.


மத்திய அரசின் இந்த விளம் பரத்தை விமர்சித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.


அதில் அவர் கூறியுள்ளதாவது: “வேளாண் மசோதாக்களுக்கு ஆதர வாக மத்திய அரசு விளம்பரங்களை நாளேடுகளில் பிரசுரித்துள்ளது. அந்த விளம்பரத்தில் ஒரு வாசகத்தில், ஒரு தேசம், ஒரு சந்தை விவசாயிகளுக்கு சுதந்திரம் வழங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 85 சதவீத விவசாயிகள் சிறு விவசாயிகள். அவர்கள் விற்பனை செய்வதற்கு சிறு அளவே உபரியாக வைத்திருப்பார்கள். சில மூட்டை கோதுமை, நெல் தானியங்களை விவசாயிகள் விற்றாலும் அதற்கு நாடு முழுவதும் ஆயிரமாயிரம் சந்தைகள் தேவைப்படும். ஒரு சந்தை அல்ல. பெரிய கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் சந்தைகளை உருவாக்க மசோதாக்கள் என்ன செய் கின்றன. ஆயிரக்கணக்கான சந்தைகள்தான் விவசாயிகளுக்குச் சுதந்திரம் வழங்குகிறது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை குறித்து எந்தவிதமான அம்சமும் இந்த மசோதாவில் இல்லை. உற்பத்தி விலையில் குறைந்தபட்ச ஆதார விலையைவிடக் கொள்முதல் விலை குறைவாக இருக்கக்கூடாது என்று இல்லை''. இவ்வாறு ப.சிதம்பரம் தெரி வித்துள்ளார்.


No comments:

Post a Comment