ஈரோடு-கோபிச்செட்டிபாளையம் பகுதியின் மூத்த திராவிடர் இயக்க முன்னோடியும், திராவிடர் இயக்க சுயமரியாதை இயக்க கொள்கை லட்சியப் போர் வீரராகவும் திகழ்ந்த சுயமரியாதை வீரர் மானமிகு கோபி ஜி.பி. வெங்கிடு (வயது 85) அவர்கள் 23.9.2020 அன்று உடல் நலம் குன்றி மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த துன்பமும் அடைகிறோம்!
அவ் வட்டாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சீரிய தளகர்த்தர்களில் மூத்தவர். மேனாள் சட்டப் பேரவை உறுப்பினர், தொண்டறத்தின் தூய்மையான உருவம்!
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியவர்களிடத்திலும், திராவிடர் கழகத் தோழர்களிடத்திலும், நம்மிடமும் மாறாப் பற்றும் பாசமும் வற்றாத அன்பும் கொண்டவர்.
போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்ற லட்சியப் போராளி! பண்பும் எளிமையும் கொண்டவர், பழகுவதற்கு இனிய சுபாவம் படைத்தவர்.
அவரது மறைவு திராவிடர் இயக்கத்திற்கும், தன்னலமில்லா பொதுவாழ்வுக்குமே ஒரு தனிப் பெரும் இழப்பாகும்!
'தவிர்க்க முடியாததை ஏற்றே தீர வேண்டும்' என்ற இயற்கை நியதியை எண்ணி, அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர் குறிப்பாக அவரது வாழ்விணையர்
வெ.திரபுரம்மாள், மகன்கள் வெ.குமாரராஜா, வெ.குமணன், வெ.மணிமாறன், வெ.அதியமான், வெ.செங்குட்டுவன், மகள் வெ.செம்பியன்மாதேவி அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சுயமரியாதைச் சுடரொளி மானமிகு கோபி ஜி.பி.வெங்கிடுக்கு நமது வீரவணக்கம்!
கி. வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
23.9.2020
குறிப்பு: கழகத் தலைவர் வெங்கிடு அவர்களின் மகன் மணிமாறனிடம் தொலைபேசியின் வழி இரங்கல் தெரிவித்தார்.
No comments:
Post a Comment