மாம்பல சாஸ்திரியின் - ஜாதி மண்டைக் கனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 1, 2020

மாம்பல சாஸ்திரியின் - ஜாதி மண்டைக் கனம்

சென்னை மாம்பலம் ஆரிய கவுடா சாலையில் உள்ள கோயில் ஒன்றில் நடந்த கதாகாலட்சேபத்தின் போது - சாஸ்திரி ஒருவர் பேசிய பேச்சு சமூக வலைதளத்தில் ஓகோ என்று பரவிக் கொண்டு இருக்கிறது.


"அனைவரும், கோயில் உள்ளே ஓடினால் சாஸ்திரம், சம்பிரதாயம் கெட்டுப் போயிருக்கும். ஆகையால் நான் கோயிலுக்குச் செல்லுவதை விட்டு விட்டேன். இதைச் சொல்லுவதால் யாரும் வருத்தப்பட வேண்டாம்" என்று பேசி யிருக்கிறார்.


ஹிந்துக்களே, ஒன்று சேருங்கள் - நாம் அனைவரும் ஒன்றல்லவா என்று குரல் கொடுக்கும் ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி. உள்ளிட்ட சங்கிகள் வாய்த் திறப்பார்களா?


ஹிந்து மதத்தில் வருணாசிரம தர்மம் மிகவும் உன்னதமானது என்று கூறும் தமிழக பா.ஜ.க. தலைவர் திருவாளர் முருகன் இது குறித்து வாய்த் திறப்பாரா?


மாம்பலம் கோயிலில் கதாகாலட்சேபம் கூறிய பார்ப்பனர் கூறியது கண்டு கோபப்படுவதை விட - அவர் சொன்னதுதான் உண்மையான ஹிந்து மதத்தின் நிலைப்பாடு.


சிதம்பரம் நடராஜனைத் தரிசிக்க மன்றாடிக் கிடந்த தோழர் நந்தன் கெதி என்னாயிற்று?


சிதம்பரம் தீட்சதர் கனவில் நடராஜர் தோன்றி ‘நந்தனை தீக்குழியில் இறங்கி வரச் சொல்ல - அவன் தீட்டுக் கழிந்து விடும்' என்ற கதைக்கிறார்கள் அல்லவா! - அதன் பொருள் என்ன?


தாழ்த்தப்பட்ட சமூக நந்தன் கோயிலுக்குள் வரக்கூடாது; தீயில் குளித்து - தீட்டைப் போக்கிய பிறகு தான் கோயிலுக்குள் வர முடியும் என்பதுதானே சிதம் பரம் நடராஜக் கடவுளின் எண்ணமாக இருந்திருக்கிறது.


அப்படியே பார்த்தாலும் ஸ்ரீமான் நடராஜப் பெருமான் யார் கனவில் தோன்றியிருக்க வேண்டும்?


கோரிக்கை வைக்கும் நந்தன் கனவில் தானே தோன்றியிருக்க வேண்டும், மாறாக - யார் நந்தனை கோயிலுக்குள் வரக்கூடாது என்று தடுத்தார்களோ, அந்தத் தீட்சதர் கனவில் ஸ்ரீமான் நடராஜப் பெருமான் தோன்றினான் என்பது எப்படி சரியாகும், நடராசன் தீட்சதர் கனவில் தோன்றினார் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?


அனைத்துச் ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையைப் பெற்றுத் தருவதற்காக - தமது வாழ்நாளில் இறுதிப் போராட்டத்தை அறிவித்தார் தந்தை பெரியார். முதல் அமைச்சர் மானமிகு கலைஞர் - தந்தை பெரியார் போராட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தாமல் தனியே சட்டம் செய்தார். அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றவர்கள் அத்தனைப் பேரும் பார்ப்பனர் தானே - ஆகமங்களை சாட்சியமாகக் காட்டினார்களே - பிராமணர் அல்லாதார் (சூத்திரர்கள்) கருவறைக்குள் நுழைந்தால் சாமி தீட்டாகிவிடும் - செத்து விடும் என்று சொல்லவில்லையா?


ஒரு சாமி சாகும் என்றால், அது என்ன சாமி? அதற்கு சக்தி என்று சொல்லுவது எல்லாம் சுத்தப் புரட்டு என்பது விளங்கவில்லையா?


‘நந்தனைத் தீயில் மூழ்கி வரச் சொன்னாரே - கடவுளுக்கே ஜாதி வேற்றுமையுண்டா?' என்ற ஒரு கேள்விக்கு ‘தினமணிக்கதிர்' (16.9.1984) சொன்ன சமாதானம் என்ன தெரியுமா?


‘இங்கே அந்தணனாகி வருக என்றால் வேத ஞானம் பெற்று வருக என்று பொருள்' என்று தினமணிக்கதிர் மிகவும் சாமர்த்தியம் என்று நினைத்துக் கொண்டு உளறிக் கொட்டியதுண்டு.


ஒரு தாழ்த்தப்பட்ட தோழன் தீயில் குளித்து எழுந்தால் அவன் முழு வேத ஞானம் கற்றவன் ஆகிவிடுவானா? அப்படி என்றால் பார்ப்பனர்கள் தீயில் குளித்தெழுந்துதான் வேத ஞானம் பெற்றார்களா?


நந்தன் காலம் முதல் சென்னை மாம்பலம் சாஸ்திரி காலம் வரை ஒரு சிறு பார்ப்பனப் புல் பூண்டு கூட திருந்தவில்லை என்பதை நம் அப்பாவி சூத்திரர், பஞ்சமர் (பிஜேபி தலைவர் முருகன் உட்பட) மக்கள் உணர்வார்களா?


No comments:

Post a Comment