முதுநிலை  மருத்துவப் படிப்புகளில் மாநில அரசுகள் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 1, 2020

முதுநிலை  மருத்துவப் படிப்புகளில் மாநில அரசுகள் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கலாம்

இதனை எதிர்க்க இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என்ற


உச்சநீதிமன்ற தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்க தீர்ப்பாகும்


‘நீட்’ செல்லாது என்பதற்கு இத்தீர்ப்பு முன்னோட்டமாகக் கருதலாம்



கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் மாநில அரசுகள் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம்; இதனை எதிர்க்க இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அதி காரம் இல்லை என்ற உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையில் அளித்துள்ள தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்க தீர்ப்பாகும் என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதலியவற்றில் பணிபுரிந்து பிறகு மேற்பட்ட படிப்பு,. (எம்.டி., எம்.எஸ். போன்றவைகள்) படிக்க முன் வரும் டாக்டர்களுக்கு தனி இடஒதுக்கீடு தருவதற்கு தமிழ்நாடு அரசுக்கு - மாநில அரசுக்கு (50 சதவிகிதம் ஒதுக்கீடு)  முழு அதிகாரம் உண்டு என்றும், இதில் தேவையின்றி தனது மூக்கை நுழைத்து, மாநில அரசு அதிகாரத்தைப் பறிக்கும் உரிமை இந்திய மெடிக்கல் கவுன்சிலுக்குக் கிடையாது என்றும், மாநில அரசுகளே சிறப்பு ஒதுக்கீடு செய்து கொள்ள முழு உரிமை பெற்றவைகள் என்பதையும் தெளிவுபடுத்தி நேற்று (31.8.2020) உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையில் அளித்துள்ள தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கதாகும்!


கூடுதல் மதிப்பெண்


தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பில் சேருவதற்கு, அரசு மருத்துவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்க ஏதுவான அரசாணை பிறக்கப்பட்டுள்ளது. இதன்படி, மருத்துவ மேற்படிப்பில் சேருவதற்கு - தொலைதூர பகுதி - மற்றும்  எளிதில் அணுகமுடியாத பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 10 முதல் 30 சதவிகிதம் வரை கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுகிறது.


இதனால் தனியார் மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ள தாகவும், இது பாகுபாட்டை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் கூறி, தனியார் மருத்துவர்கள் தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டன.


மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு


இந்த வழக்கை ஏற்கெனவே 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்தபோது, இவ்வாறு கூடுதல் மதிப்பெண் வழங்கு வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா என்ற சட்டப் பிரச்சினை எழுப்பப்பட்டது. இதையொட்டி, இந்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இது மாற்றப் பட்டு அருண்மிஸ்ரா தலைமையிலான இந்த அமர்வு விசாரித்து நேற்று அளித்த தீர்ப்பில்,


மெடிக்கல் கவுன்சில்


தடை செய்ய முடியாது


சேவை மனப்பான்மையோடு பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உண்டு. இதனை எதிர்க்க இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை; எனவே அதை மெடிக்கல் கவுன்சில் தடை செய்ய முடியாது. இந்திய மெடிக்கல் கவுன்சில் என்பது  இந்திய அரசமைப்புச் சட்டத்தின் Entry 66 list I 8th constitution கீழ் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு; அதன் பங்கு மருத்துவக் கல்வியின் தரத்தை நிர்ண யிப்பதும், ஒருங்கிணைப்பதும் மட்டும்தான் என்று திட்ட வட்டமாகக் கூறி, அதைத் தாண்டி அதன் அதிகாரத்தை நீட்ட முடியாது - கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.


(இதே வாதத்தைப் பொருத்தினால் சட்டப்படி நீட் தேர்வு நடத்தவோ, இடஒதுக்கீடுகளை மறுக்கவோ, மெடிக்கல் கவுன்சிலுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்பதும், இந்த5 நீதிபதிகள் அமர்வின் வரலாற்றுத் தீர்ப்பின்மூலம் தீர்வு காண வேண்டியதும் உறுதி)


சட்டபூர்வ அதிகாரம் உண்டு


மாநில அரசுகள் அவைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட சட்டப்படியான இடஒதுக்கீட்டுக்குள் இந்த மேற்பட்டப் படிப்பு,  பட்டயப் படிப்புகளை நிரப்பிட அதற்கு சட்ட பூர்வ அதிகாரம் (Legislative Competence) உண்டு என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.


இது அருமையான திருப்புமுனை தீர்ப்பு; ஏற்கெனவே இதே அமர்வு இரண்டு நாட்களுக்கு முன் அளித்த அருந்ததியர் உள் ஒதுக்கீடு சம்பந்தமான தீர்ப்பில் இடஒதுக்கீட்டினை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை - அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு என்பதைத் திட்டவட்டமாகக் கூறி தமிழ்நாட்டு அருந்ததியருக்கான இடஒதுக்கீடு (3%) செல்லும் என்று ஆக்கியதை வரவேற்றுள்ளோம்.


நமது முக்கிய வேண்டுகோள்!


இந்த ஆண்டு மேற்பட்டப் படிப்புகளுக்கு சேர்க்கை முடிந்துவிட்ட காரணத்தால் வரும் கல்வி ஆண்டிலிருந்து அமல்படுத்துவது உசிதம் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய முக்கிய செய்தி என்ன வென்றால், Super Speciality  என்ற மேற்பட்டப்படிப்பை தாண்டிய படிப்புகளுக்கு மாணவர்களுக்கான சேர்க்கையில் இந்த ஆண்டே நிரப்ப எல்லா முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது நமது முக்கிய வேண்டுகோளாகும்.


வரலாற்றைப் படைத்திடும் தீர்ப்பு


 மாநில அரசுக்குள்ள இடஒதுக்கீடு உரிமை பற்றி மேலும் உறுதிப்படுத்தியுள்ள  இந்த 5 நீதிபதி அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்றைப் படைத்திடும்.


மெடிக்கல் கவுன்சில் தனது “ஆக்டோபஸ்” அவ தாரத்தை நிறுத்திக் கொள்ள மறைமுகமாக எச்சரிக்கை மணி அடிக்கிறதுபோன்றது இத்தீர்ப்பு.


இதன் மூலம் இனி ‘நீட்’டுக்கும் புதிய வழி திறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளடக்கமாக உள்ளது. உண்மை இறுதியாய் வெல்லும் என்பது நிச்சயம் - சமூகநீதியை சாய்த்து விடும் சதி வெற்றிபெறாது!


 


 


கி. வீரமணி,


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


1.9.2020


No comments:

Post a Comment