பள்ளிப்பாளையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு கோகுல்ராஜ் என்ற தாழ்த்தப்பட்ட இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி யுவராஜ், சிறையில் உள்ளார்.
யுவராஜ் ஜாமீன் கேட்டுத் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. யுவராஜ் சார்பில் வழக்குரைஞர் நாகமுத்து ஆஜரானார். தலைமை நீதிபதி திரு.எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்றது.
"உத்தரப்பிரதேசம் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் ஆணவக் கொலைகள் நடப்பது தெரியும். தமிழ்நாட்டிலும் கவுரவக் கொலைகள் நடக்கிறதா?ஆச்சரியமாக உள்ளதே!" என்று வருத்தம் தோய்ந்த குரலில் தெரிவித்த தலைமை நீதிபதி திரு. எல்.ஏ.பாப்டே, அந்த ஜாமீன் மனுவைப் பரிசீலனை செய்யக்கூட மறுத்து விட்டார்.
"குற்றவாளி என்ன செய்துள்ளார்? ஒருவர் இந்த பூமியில் வாழ்ந்ததற்கு அடையாளமே தெரியாமல் செய்துள்ளார். இவர் போன்ற ஆட்களுக்கு ஏன் ஜாமீன் வழங்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து விட்டார். தமிழகத்தில் 2016-ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு 22 பதிவு செய்யப்பட்ட ஆணவக் கொலைகள் நடந்துள்ளன. இதில் உடுமலை சங்கர் கொலை மற்றும் ஒசூர் நந்தீஷ் - சுவாதி கொலைகள் இந்தியாவையே உலுக்க வைத்தவை. 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம்தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் ஒசூரில் நடத்தப்பட்ட ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் இந்த இருவரின் பெயரால் நினைவுக் கருத்தரங்கம் நடத்தப்பட்டு - ஆணவப் படுகொலைகள் தமிழக மண்ணில் நடத்தப்படும் கொலை வெறிப் போக்கைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தலைமை நீதிபதி தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடந்துள்ளதா என்று 'கருத்து கேள்வி' எழுப்பியுள்ளார்.
நீதிபதி அப்படி கேட்பதில் ஆழமான பொருள் உண்டு. காரணம் தமிழ் மண்ணில் தான் தந்தை பெரியார் பிறந்தார் - சுயமரியாதை இயக்கம் கண்டார் - திராவிடர் கழகத்தை உருவாக்கினார். ஜாதி ஒழிப்பு என்பது இந்த அமைப்புகளின் தலையாய கொள்கை.
திராவிடர் கழகத்தின் அணுகுமுறை இரண்டு. ஒன்று பிரச்சாரம் - மற்றொன்று போராட்டம். பிரச்சாரம் என்று வரும்போது ஜாதி ஒழிப்புக்கு முன்னுரிமை - ஜாதி ஒழிப்புக்காகக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்கள் பற்பல.
ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 25,26ஆம் பிரிவைக் கூடக் கொளுத்தி மூன்றாண்டுகள் வரை பத்தாயிரம் பேர் சிறை சென்ற வரலாற்றை உருவாக்கிய இயக்கம் திராவிடர் கழகம்.
தன் பெயருக்குப் பின் ஜாதிப் பட்டம் போடுவதை ஒழித்துக் கட்டியதும் இந்த இயக்கம்தான். ஜாதி மறுப்புத் திருமணங்களை செய்து கொள்வதிலும் ஆர்வம் இங்கு அதிகம்.
"அப்படிப்பட்ட மண்ணில் ஆணவக் கொலைகளா?" என்று உச்சநீதிமன்ற நீதிபதி எழுப்பிய கேள்வி நியாயப் பூர்வமானது.
ஜாதியை மய்யப்படுத்தி அரசியல் நடத்துவதும், ஜாதி உணர்வைத் தூண்டுவதும் இதற்கொரு முக்கிய காரணமாகும்.
ஆணவக் கொலைகள் நடக்கும் பகுதிகளில் எல்லாம் கழகம் தன் ஜாதி ஒழிப்புப் பணியை உடனடியாக மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்தத் திசையில் கழகப் பணி அதிகம் தேவை என்ற அடிப்படையில் கழகம் தீவிரமாகப் பணியாற்றும்; பெரும்பாலும் கழகக் குடும்பங்களில் ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெற்றுதான் வருகின்றன. நீதிபதியின் எதிர்பார்ப்பை மேலும் செழுமைப்படுத்துவோம்!
No comments:
Post a Comment