கரோனா பயத்தைப் பயன்படுத்தி சிறப்புப் பூஜைகள் என்றும், பரிகாரம் என்றும், யாகம் என்றும் மக்களைச் சுரண்டும் பக்தி வியாபாரத்திற்குப் பலியாக வேண்டாம்- மக்கள் விழிப் புடனும், கட்டுப்பாட்டுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கை வருமாறு:
கரோனா என்ற கொடிய தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் 10 லட்சம் பேர் கரோனா வால் பலி என்பது வேதனை தரும் மைல் கல்!' என்று அய்.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தம் வேத னையை வெளிப்படுத்தியுள்ளார்.
இரண்டாம் இடத்தில் இந்தியா!
இந்தியாவோ கரோனா பாதிப்பில் உலகில் இரண்டாம் இடத்திற்குத் தாவியுள்ளது.
அரசுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. டாக்டர்களும், மருத் துவப் பணியாளர்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களைக் காப்பாற்றும் அரிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதான் சந்தர்ப்பம் என்று மத வியாபாரிகள் தங்கள் சுரண்டல் தொழிலில் வேக வேகமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பரிகாரப் பூஜை என்றும், யாகம் என்றும் தங்கள் தொழிலைத் தொடங்கிவிட்டார்கள்.
வாரணாசி சிவனுக்கே முகக்கவசம் போட்டுள்ளனர். பூரி ஜெகந்நாதர் உடல் நலம் எப்படி இருக்கிறது என்று டாக்டர் பரிசோதனை செய்த செய்தியும், படங்கள் ஊடகங்களில் வெளிவந்ததுண்டு.
கோவில் அர்ச்சகர்களுக்கு கரோனா
திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர் கரோனாவுக்குப் பலியானார் என்றும், சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சதர்கள் பலர் கரோனாவால் பாதிக்கப் பட்டனர் என்றும், ராமஜென்மப் பூமி அறக்கட்டளை தலைவர் (ராமஜென்மப் பூமி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற மறுநாளே) கரோனாவால் பாதிக்கப்பட்டார் என்றும் செய்திகள் வந்த வண்ணம் உள் ளன. பூரி ஜெகந்நாதர் கோவில் ஊழியர்கள் 404 பேருக்குக் கரோனா என்றும், திருவண்ணாமலையில் கிரிவலத்துக்குத் தடையென்றும் இன்றைய நாளேடுகளில் செய்திகள் வந்துள்ளன.
இதற்கு மேலும் கரோனாவில் இருந்து கடவுள் காப்பாற்றுவார் என்று நம்பி மக்கள் தங்கள் அறிவையும், பொருளையும், நேரத் தையும் பாழடிக்கலாமா?
மத வியாபாரிகள் தங்கள் பிழைப்புக்காக - கரோனாவால் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள அச்சத்தையும், பக்தியையும் பகடைக் காயாக்கி, புதுப்புது வண்ணங்களில், சிறப்புப் பூஜைகள் என்றும், சிறப்பு யாகங் கள் என்றும் புதுப்புதுக் கரடிகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டுதான் இருப்பார்கள் - இருக்கிறார்கள். அவற்றை நம்பி ஏமாறவேண்டாம். இந்தச் சூழலில் கோவிலுக்குச் சென்று கரோனா தொற்றுக்கு ஆளாக வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மனிதாபிமான உணர்வோடு - வேண்டுகோளாக வைக்கின்றோம்
கடவுள் மறுப்பாளர்கள் என்கிற முறையில் இதனைச் சொல்லவில்லை. மக்கள் உயிர், மூடநம்பிக்கை என்னும் கொடிய கரோனாவால் பலியாகக் கூடாது என்ற மனிதாபிமான உணர்வோடு இதனை ஒரு வேண்டுகோளாக வைக்கின்றோம் - மக்கள் சிந்திப்பார்களாக!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
30.9.2020
No comments:
Post a Comment