பெரியாருடைய தத்துவத்தை, திராவிடத்தினுடைய தத்துவத்தை நிலை நிறுத்தியவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 1, 2020

பெரியாருடைய தத்துவத்தை, திராவிடத்தினுடைய தத்துவத்தை நிலை நிறுத்தியவர்

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.இராசா அவர்களின் உரை



சென்னை, செ. 1- தந்தை பெரியாருடைய தத்துவத்தை, திராவிடத்தினுடைய தத்துவத்தை நிலை நிறுத்தியவர் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினரு மான ஆ.இராசா அவர்கள் உரையாற்றினார்.


கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் சமூகநீதி கருத்தரங்கம்


கடந்த 7.8.2020 அன்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் சமூகநீதி கருத்தரங்கத்தில்' (காணொலிமூலம்) திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினரு மான ஆ.இராசா அவர்கள் நினைவுரையாற்றினார்.


அவரது நினைவுரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


வாக்கு வங்கி அரசியல் என்கின்ற


ஒரு சிறிய சிப்பிக்குள் அடங்காதவர்


ஏனென்றால், இதே சட்டத்தை 1951 அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி அம்பேத்கர் அவர்கள் நாடாளு மன்றத்தில் கொண்டு வந்தபொழுது, பிரதமர் நேரு ஒப்புக்கொண்டார், நல்ல சட்டம், நல்ல திட்டம் என்று. ஆனால், இராஜேந்திர பிரசாத் உள்பட (பிராமணர்கள்) உயர்ந்த ஜாதிக்காரர்கள், அது இந்துக் கட்டுமானத்தில், இந்து குடும்ப அமைப்பில், ஒரு மிகப்பெரிய சிதறலை, சேதாரத்தை, சிராய்ப்பை உண்டு செய்யும் என்று சொல்லி, அன்றைக்கு அதைத் தூக்கி எறிந்தார்கள். அந்தச் சட்டத்தை அம்பேத்கர் அவர்களால் கொண்டு வர முடியவில்லை. அதற்காகவே அவர் தன்னுடைய அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். ஆனால், 1951 ஆம் ஆண்டு அம்பேத்கர் அவர்களால் கொண்டுவர முடியாத சட்டத்தை, 38 ஆண்டுகள் கழித்து முதல மைச்சராக வந்த கலைஞர் அவர்கள் நிறைவேற்றினார். செங்கல்பட்டு மாநாட்டில் பெரியார் கொண்டு வந்த தீர்மானத்தை மனதில் வைத்துக்கொண்டு, அம்பேத் கர் நாடாளுமன்றத்தில் பட்ட அவமானத்தை மனதில் கொண்டு, வாக்கு வங்கி அரசியலுக்கு அப்பாற்பட்டு, மக்களிடம் சொல்லாமல், தேர்தல் அறிக்கையில் சொல்லாமல், அதைப்பற்றிய சங்கதிகளை வெளியே சொல்லாமல், ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, பெரியாரை, அம்பேத்கரை, அண்ணாவை மனதில் கொண்ட கலைஞர்தான், வாக்கு வங்கி அரசியல் என்கின்ற ஒரு சிறிய சிப்பிக்குள் அடங்காமல், ஒரு மிகப்பெரிய ஆளுமையாக உயர்ந்து பெண்களுக்கு சொத்துரிமை சட்டத்தைக் கொண்டு வந்தார்.


அதேபோல, இங்கே உரையாற்றிய எல்லோரும் சொன்னார்கள்; அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பற்றி.


எப்படி இங்கே ஜாதி உருவாக்கப்பட்டது? எல்லா நாடுகளிலேயேயும், டிவிஷன் ஆஃப் லேபர் என்று உண்டு. தொழிலைப் பிரிப்பது என்பது உண்மைதான். ஒருவரே எல்லாத் தொழிலையும் செய்ய முடியாது. எனக்கு நானே முடி வெட்டிக்கொள்ள முடியாது; நானே துணிகளைத் துவைத்துக் கொள்ள முடியாது; அரிசி உற்பத்தியை நானே செய்துகொள்ள முடியாது.


ஒருவரே உற்பத்தி செய்து - ஒருவரே நெய்து - ஒருவரே உடுத்தி - ஒருவரே எல்லா வேலைகளையும் செய்துகொள்ள வேண்டும் என்று சொன்னால், இந்த உலகத்தில் எல்லோரும் அம்மணமாகத்தான் இருக்க வேண்டும் என்று ஓர் அறிஞன் சொன்னதாக எனக்கு ஞாபகம்.


எனவே, எனக்கான உடையை, எங்கோ ஒரு நெச வாளி - எங்கோ ஒரு விவசாயி பருத்தி உற்பத்தி செய் கிறார். அவர் உற்பத்தி செய்த பருத்தியை எவரோ ஒருவர் நெய்கிறார்; அதற்குப் பிறகுதான் நமக்கு அழகான ஆடையாக வருகிறது.


எங்கோ எனக்காக ஒருவர் நெல்லைப் பயிர் செய்கிறார்; அதிலிருந்து வருகின்ற அரிசியைத்தான் நான் வாங்கி சாப்பிடுகிறேன்.


எல்லாத் தொழிலும் சேர்ந்து ஒரு சமூகத்திற்குப் பயன்படும் என்பது உண்மைதான்!


ஆக, இந்த சமூகத்தில் நான் உடுத்துகிற உடை, உண்ணுகின்ற உணவு எல்லாவற்றிற்கும் எங்கோ உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த உழைப்பிற் குப் பெயர் டிவிஷன் ஆஃப் லேபர். தொழிலைப் பிரிப்பது. பிரித்துப் பிரித்து செய்தால்தான், எல்லாத் தொழிலும் சேர்ந்து ஒரு சமூகத்திற்குப் பயன்படும் என்பது உண்மைதான். ஆனால், அந்த டிவிஷன் ஆஃப் லேபர் என்று சொல்கின்ற, தொழிலால் பிரிப் பதை, பிறப்பின் அடிப்படையில் எந்த நாடும் சொல்ல வில்லை.


அங்கேயும் சவரம் செய்கின்ற தொழிலாளி இருப் பார்கள்; ஆனால், பிறப்பின் அடிப்படையில் அவர் சவரத் தொழிலாளியல்ல. அன்றைக்கு அவர் சவரத் தொழிலாளி. அடுத்த நாள், அவர் வேறு ஒரு தொழி லுக்குப் போய்விடலாம். அங்கே ஜாதியில்லை - தொழில் இருந்தது.


ஆனால், இங்கேதான் டிவிஷன் ஆஃப் லேபர் என்பதற்குப் பதிலாக, டிவிஷன் ஆஃப் லேபரர் என்று பிரித்தார்கள் என்று ஜாதியைப்பற்றிய ஆய் வில் வரும்.


இங்கே தொழிலைப் பிரிக்கவில்லை; தொழிலாளர் களை, பிறப்பின் அடிப்படையில் பிரித்தார்கள். அது தான் மற்ற நாடுகளுக்கும், இந்தியாவிற்கும், குறிப்பாக இந்து மதத்தில் இருக்கின்ற இந்த ஜாதிய அமைப் பிற்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடு என்பதை ஆய்வுகள் இன்றைக்குத் தெரிவிக்கின்றன.


ஆனால், அந்த டிவிஷன் ஆஃப் லேபரர் என்று சொல்லுகின்ற பிராமண, சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற இந்த நான்கு அடுக்குகளில், மூன்று அடுக்குகள் ஏறத்தாழ இன்றைக்கு இட ஒதுக்கீட்டால், அறிவியல் விந்தையால், தொழில்நுட்பத்தால், கரைந்து போய்விட்டன.


சூத்திரனாகப் பிறந்த ஒருவர், மேஜராக ஆகி விடலாம்; ஜாதிய அமைப்பில் சத்திரியராகக் கருதப் பட்ட ஒருவர், இன்றைக்கு ஒரு பியூன் வேலை போதும் என்று வந்துவிட்டால், அவர் சூத்திரனாக மாறிவிடுவார்.


அதேபோல, வணிகம் செய்யவேண்டிய வைசியர் பிரிவில் பிறந்த ஒருவர், அய்.ஏ.எஸ். ஆகி, ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துவிடுகிறார்.


ஆக, சூத்திரர், சத்திரியராகவோ, வைசியராகவோ, வைசியர் சூத்திரராகவோ, சத்திரியராகவோ மாறு கின்ற இன்டர் சேஞ்ஜபிள் என்று சொல்லுகின்ற உள் மாற்றத்திற்கு இன்றைக்கு இருக்கின்ற அமைப்பு - இவற்றுக்குக் காரணம் நாம் கொண்டு வந்திருக்கின்ற அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் - அதேபோல, பெரியாரும், அம்பேத்கரும், அண்ணாவும், கலை ஞரும் ஏற்படுத்தி இருக்கின்ற தாக்கங்கள்.


வாக்கு வங்கி அரசியலுக்கு


அப்பாற்பட்டு நிற்கிறார்!


ஆனால், பிராமணர்களுக்கு என்று உரிய இடம் இருக்கிறதே, அந்த அர்ச்சகர் தொழில். டிவிஷன் ஆஃப் லேபரர் என்று சொல்லுகின்ற நான்கு அடுக் கில், ஓர் அடுக்கில் இருக்கும் மக்கள் மட்டும் கோவில் கருவறைக்குள் போகலாம் என்பதைத் தடுத்து நிறுத்தி, அதற்கும் சட்டத்தைக் கொண்டு வந்தவர் கலைஞர் என்கிற காரணத்தினால், அங்கேயும் வாக்கு வங்கி அரசியலுக்கு அப்பாற்பட்டு நிற்கிறார்.


பெரியார் நெஞ்சிலே தைத்த முள் என்பது உண்மை. ஆனால், அந்த முள்ளை நான் எடுக்கப் போகிறேன் என்று தலைவர் கலைஞர் சொல்லியிருந்தால், விமர்சனம் வந்திருக்கவேண்டும்; வந்தி ருக்கக் கூடும். அதையும் தாண்டி அவர் வெற்றி பெறு வார் என்பது வேறு செய்தி.


பெரியாருடைய தத்துவத்தை, திராவிடத்தினுடைய தத்துவத்தை நிலை நிறுத்தியவர்


அதற்குக் காரணம், அவர் தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா ஆகிய இருவருடைய கொள்கை களின் அடித்தளத்தில் நின்ற காரணத்தினால்தான், வாக்கு வங்கி அரசியலுக்கு அப்பாற்பட்ட, பெரியா ருடைய தத்துவத்தை, திராவிடத்தினுடைய தத்து வத்தை நிலை நிறுத்திய ஒரு ஆளுமை மிக்க தலைவராக அவர் இருக்கிறார்.


இன்றைக்குத் தெளிவாக இருக்கிறது இந்தியா. நான் இப்படி சொல்லுவது நான் ஏதோ மகிழ்ச்சியோடு சொல்கிறேன் என்ற பொருளில் அல்ல. இன்றைக்கு சித்தாந்த ரீதியான தெளிவு வந்துவிட்டது.


ஆர்.எஸ்.எஸ்.சினுடைய மறுவடிவமாக இருக் கின்ற பி.ஜே.பி.யினுடைய ஆட்சி.


எல்லோரும் சமம் என்று சொல்லுகின்ற


திராவிட சித்தாந்தம்


அதேபோல, இன்றைக்குத் திராவிடர் கழகம் - அதனுடைய அரசியல் ஆளுமையாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகம் - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் - இடதுசாரி கட்சிகள்.


இந்த இருவேறு சிந்தனைகள்தான் இன்றைக்கு இந்தியாவில், எதிரெதிர் தளத்தில் நின்று இயங்கு கின்றன. பலருக்குப் புரியவில்லை. மேற்கு வங்காளத் திலோ அல்லது உத்திரப்பிரதேசத்திலோ அல்லது ஒடி சாவிலோ அல்லது குஜராத்திலோ இருக்கின்ற பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட தலைவர்களுக்கு சித் தாந்தத் தெளிவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.


இரண்டு சித்தாந்தங்கள் இந்த மண்ணிலே இருக் கின்றன. எல்லோரும் சமம் என்று சொல்லுகின்ற திராவிட சித்தாந்தம்.


“கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலை யாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்று பலவாகிடினும்'' என்று சொன்னாரே, மனோன்மணி யம் சுந்தரம்பிள்ளை.


அப்படி இந்தத் திராவிடக் குடும்பங்களை உள்ள டக்கிய, அந்த மொழியின் அடிப்படையில் இயங்கு கின்ற திராவிட சித்தாந்தம் இன்றைக்கு மிகத் தெளி வாக இருக்கிறது. இங்கே சமத்துவம் வேண்டும் - எல்லோரும் சமம் என்று சொல்லுகின்றது.


நேர் எதிர்தளத்தில், சமஸ்கிருதத்தை அடிப்படை யாகக் கொண்ட - ஆரியத்தை அடிப்படையாகக் கொண்ட பி.ஜே.பி.யும், சங் பரிவாரும், ஆர்.எஸ்.எசும் நிற்கின்றன.


எனவே, சித்தாந்த ரீதியான  போட்டியான என்பது திராவிடத்திற்கும் - ஆரியத்திற்கும் இருக்கிறது என் றால், ஒரு பக்கம் வடநாட்டில் இந்த ஆதிக்கவாதிகள் இருக்கிறார்கள்; இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் நாம்தான் இருக்கிறோம்.


எனவே, இந்திய அரசியலில் ஒரு தெளிவு ஏற்படவேண்டும் என்று சொன்னால், நான் மிகுந்த கவனத்தோடு சொல்கிறேன், எல்லாக் கட்சிகளுக்கும் ஒரு மிகப்பெரிய மரியாதை, இருக்கவேண்டிய இடம் எல்லாம் இருக்கிறது. ஆனால், சித்தாந்தத் தெளிவு என்பது என்னவென்று சொன்னால்,


இன்றைக்கு இரண்டு மிகப்பெரிய சித்தாந்தங்களாக இருக்கின்றன.


ஒன்று, நேர் எதிர்மறையான ஆரியமும் - சமஸ் கிருதமும்; இன்னொன்று திராவிடமும் - தமிழும்!


எனவே, இந்தச் சித்தாந்தத்திற்குத் தலைமை ஏற் றிருக்கின்ற பெரியாரை, அண்ணாவை, கலைஞரை நாம் முன்னிறுத்தவேண்டும்.


அவர்கள் ஹெட்கேவரை, மோகன்பகவத்தை, ஆர்.எஸ்.எஸ்.சினுடைய தலைவர்களை, ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய மோடியை, அமித் ஷாவை போன்றவர்களை அவர்கள் முன்னிறுத்து கிறார்கள்.


மிகப்பெரிய ஒரு பேராபத்தைத் தடுக்கவேண்டிய மகத்தான கடமை!


எனவே, இரண்டு வேறு சித்தாந்தங்கள். அந்த சித்தாந்தங்களின் அடிப்படையில் வந்திருக்கின்ற தலைவர்கள். அந்தத் தலைவர்கள் தந்திருக்கின்ற நமக்கான புரிதல்கள். இவற்றைக் கொண்டு இன் றைக்கு இந்தியாவில் இருக்கிற மிகப்பெரிய ஒரு பேராபத்தைத் தடுக்கவேண்டிய மகத்தான கடமை - தமிழ்நாட்டில் இருக்கின்ற நம்முடைய தலை வர்களுக்குத்தான் இருக்கின்றது.


பெரியார் செய்தார் - அண்ணா செய்தார் - கலை ஞர் செய்துகாட்டினார். அந்த வழியில், இங்கே உரை யாற்றிய அருமைமிகு தலைவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து, கலைஞரைப் போல் ஒரு தலைமைப் பண்போடு, இந்தக் கூட்டணியை அழைத்துச் சென்று, இந்தியாவில் ஒரு மாற்றத்தை - தமிழ்நாட்டு அரசிய லில் மாற்றம் என்பது வேறு. அது கட்டாயமாக வரும். இன்றைக்கு இங்கே உள்ள ஒரு ஆட்சி அடிமை ஆட்சி என்பதுதான் உண்மை. மத்திய அரசாங்கத்தின் எல்லாத் திட்டங்களுக்கும், எல்லாக் கொள்கைகளுக் கும் தலையாட்டுகின்ற, தமிழர்களின் உரிமையை விட்டுக் கொடுக்கின்ற ஒரு அடிமைத்தமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது - ஊழல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் அறிந்திருக்கிறார்கள்.


தமிழ்நாட்டினுடைய ஆட்சி மாற்றம்,


ஏறத்தாழ அறுதியிட்ட ஒன்று!


எனவே, தமிழ்நாட்டினுடைய ஆட்சி மாற்றம், ஏறத்தாழ அறுதியிட்ட ஒன்று என்று நாம் எழுதி வைத்துக் கொள்ளலாம். அதற்காக நாம் கவனக் குறைவாக இருந்துவிடக்கூடாது; அதற்காக நாம் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது.


ஆனால், இந்த சித்தாந்த ரீதியான Ideological war which has been sharpened India between Dravidians and Aryanism என்று சொல்லு கின்ற இந்த இரு வேறு பண்பாட்டுக் கொள்கை சித்தாந்த மோதல்களுக்கிடையே நடைபெறுகின்ற மிகப்பெரிய போரில், இந்தியா முழுவதும் உள்ள மற்ற தலைவர்களை, மதச்சார்பின்மைக்கும், திராவிடத் தத்துவத்திற்கும் ஏற்ப, கட்டமைத்து, இந்தக் கூட்டணி தமிழ்நாடோடு மட்டும் நின்றுவிடாமல், இந்தியா முழுக்க சித்தாந்த ரீதியாக விரிவடைய வேண்டும். பேதமுள்ள சமுதாயமாக அமைக்கவேண்டும் என்று இன்னமும் கங்கணம் கட்டிக்கொண்டு, புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வை மாநில சுயாட்சியைப் பறிக் கின்ற எல்லா காரியங்களையும் செய்து கொண்டிருக் கின்ற ஆரியத்திற்கும், சமஸ்கிருதத்திற்கும் மாற்றாக, இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கின்ற திராவிட இயக்கங்களும், இடதுசாரி இயக்கங்களும்தான் போதிய புரிதலோடு இருக்கின்றன.


இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற நாடாக


மீண்டும் மீட்டெடுப்போம்!


எனவே, நாம்தான் இதர மாநிலங்களுக்கும் வழிகாட்டவேண்டும். இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னால், அதற்கு கலைஞர் காட்டிய வழியில், அண்ணா காட்டிய வழியில், தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொண்டு, இன் றைக்கு இருக்கின்ற வணக்கத்திற்குரிய திராவிட முன் னேற்றக் கழகத் தலைவர் மதிப்பிற்குரிய அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களை முன்னிறுத்தி, ஒரு மகத்தான மாற்றத்தைத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியத் துணைக் கண்டத்திலேயே ஏற்படுத்த வேண்டிய தலையாய பணியும், பொறுப்பும் நமக்குத் தான் இருக்கிறது என்கின்ற அந்த உணர்வோடு,


கலைஞர் வாழ்க!


அவரைப் பின்பற்றுவோம் -


அவரைப் பின்பற்றி, மாநில சுயாட்சியைக் கொண்டு வருவோம்!


அவரைப் பின்பற்றி இந்தியாவை ஒரு மதச்சார் பற்ற நாடாக மீண்டும் மீட்டெடுப்போம் என்கின்ற உறுதியை நாம் ஏற்கவேண்டும் என்று சொல்லி, என்னுரையை நிறைவு செய்கிறேன்.


நன்றி, வணக்கம்!


- இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா அவர்கள் உரையாற்றி னார்.


No comments:

Post a Comment