ஒத்த ரூபாய் தீர்ப்பும் பூஷனின் உச்ச நீதிமன்ற வாக்குமூலமும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 2, 2020

ஒத்த ரூபாய் தீர்ப்பும் பூஷனின் உச்ச நீதிமன்ற வாக்குமூலமும்!

தி.லஜபதி ராய்


வழக்குரைஞர் பூஷனின் கருத்தாழமிக்க வாக்கு மூலம் காலத்தால் அழியாதது. 02.08.2020 அன்று வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் தன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 175 பத்திகளையும் 134 பக்கங் களையும் கொண்ட உறுதிமொழித்தாள் ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் அளித்தார். அதில் கூறப்பட்ட விவரங்கள் நீதியின்பால் நம்பிக்கை கொண்டோருக்கு பலத்த அதிர்ச்சியை அளிக்கும்.


பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட காரணமான புகார் அளித்த மஹேக் மகேஸ்வரியின் புகார் நகல் தனக்கு தரப்படவில்லை என்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அவரது கருத்து அரசியல மைப்புச் சட்டத்தில் கூறப்பட்ட கருத்துரிமைக்கு உட்பட்டது என்றும், நீதிபதியின் மீதான தனிப்பட்ட அவதூறும் நீதிமன்ற அவமதிப்பும் வேறு வேறென்றும், நல்லெண்ணம் கொண்டு நீதித்துறையை விமர்சிக்கும் உரிமை குடிமக்களுக்கு உள்ளது எனவும் பூஷன் குறிப்பிட்டார்.


இதுதவிர இந்தியன் எக்ஸ்பிரஸ், தி இந்து, தி வயர்,தி குயின்ட் போன்ற ஊடகங்களில் கருத்து உரிமைக்கு ஆதரவாக வெளியான செய்திகளையும் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி ஷா போன்ற சட்ட மேதைகளின் கருத்துக்களையும், விமர்சனங்களை ஒடுக்குவதன் மூலம் நீதித்துறையை மதிப்பார்கள் என்பது தவறான எண்ணம் என்றும் சுட்டிக்காட்டினார்.


காவிக் குழுக்களால் கொல்லப்பட்டனர்


பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொடர் புடைய சிறுசிறு காவி குழுக்களால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மற்றும்  சிறுபான்மையினர் கொல்லப்பட்ட தையும் அதன் பின்னணியில் அரசியல் சக்திகள் இருந் ததையும், காவல்துறை மிக அரிதாகவே நடவடிக்கை எடுத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.


பொய் தகவல்களும் போலி செய்திகளும் இஸ்லா மியர்களுக்கு எதிராக பரப்பப்பட்டு அவர்கள் இரண் டாம் தரக் குடிமக்களாக்கப் பட்டதையும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியன சிறுபான்மையினருக்கும் பட்டியல் இனத்தவருக்கும் எதிராகவும் பயன்படுத்தப் பட்டதையும் சுட்டிக்காட்டினார் பூஷன்.


2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச்சட்டம் மதத் தின் அடிப்படையில் அரசு பாகுபாடு காட்டுவதையும் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்டதையும் பூஷன் பதிவு செய்தார்.


மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர்


குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அற வழியில் போராடிய மக்கள் மீது பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டதை யும், ஜாமியா கல்வி வளாகத்தில் மாணவர்கள் கொடூ ரமாக தாக்கப்பட்டதையும் அத்தாக்குதலை காவல் துறையினரே முன்னின்று நடத்தியதையும் அவர் தனது வாக்குமூலத்தில் சுட்டிக்காட்டினார்.


டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆயுதம் தாங்கிய குண்டர்கள்  காவல்துறையினரின் பார்வையின் கீழ் அனுமதிக்கப்பட்டு அவர்கள் மாண வர்களையும் ஆசிரியர்களையும் அடித்து நொறுக்கிய தையும் பின்னர் காவல்துறையினர் அவர்களை பாது காத்து பத்திரமாக, இரகசியமாக வெளியே அனுப் பியதையும், காணொலி காட்சிகள் மூலம் மாணவர்கள் மீதான மூர்க்கத்தனமான தாக்குதல்கள் நிகழ்ந்தது அம்பலமானதையும் பதிவு செய்தார் . ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அம்மாநிலம் மூன்றாக பிளக்கப்பட்டு, குடியாட்சியின் சிறு சிறு உரிமைகளைக் கூட பெறாமல் முன்னாள் காஷ்மீர் முதலமைச்சர் சிறையிலடைக்கப்பட்டதையும் பூஷன்  குறிப்பிட்டார்.


வேலையில்லா திண்டாட்டம்


- வேலை இழப்பு


கடந்த ஆறு வருடங்களில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வேலை இழப்பு ஆகிய இரண்டும் உச்சத்தைத் தொட்டு கோவிட்-19 காலகட்டத்தில் 10 கோடிக்கு மேலானோர் தங்கள் வேலைகளை இழந் துள்ளதையும் பூஷன் பதிவு செய்தார். அரசியலமைப்பு சட்டத்தின் அங்கங்களான தேர்தல் ஆணையம், தலைமை கணக்காயர்,  சி.பி.அய்.,  நடுவண் விழிப்பு ணர்வு ஆணையம், போன்ற பொது அமைப்புகள் சீரழிக்கப்பட்டதையும் அவர் பதிவு செய்தார்.


தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களாக பிரத மருக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் நெருக் கமானவர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையையும் சுதந்திரமும் மிகப்பெரிய கேள்விக்குறியானதையும், விதிகளை பிற்போக்குத் தனமாக மாற்றியதன் மூலம் ஜனநாயகத்தை பண நாயகமாக மாற்றியதும் முன்னர் 7.5 விழுக்காடு உச்ச வரம்பு பெருநிறுவன நன்கொடைகள் வழங்கும் நிலை மாறி எவ்வித கட்டுப்பாடுமற்ற ரகசிய அரசியல் நன் கொடையை ஊக்குவிக்கும் வழிகளையும் தேர்தல் பத்திரங்கள் மூலம் மறைமுகமாக நன்கொடை அளிக் கும் திட்டத்தை செயல்படுத்திய பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில் தேர்தல் நன்கொடை மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கடந்த மூன்று வருடத்தில் பெற்றதையும், மொத்த நன்கொடைகளில் 90 விழுக்காட்டைப்  பெற்றதையும் சுட்டிக்காட்டினார்.


தலைமை கணக்காயர் அலுவலம் அரசுக்கு பணிந்தது


இத்தகைய சட்டத் திருத்தங்கள் மறைமுகமாக பண மசோதா என்ற வடிவில் கொண்டு வரப்பட்டு பாரதிய ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லாத மாநிலங்களவை யில் எவ்வித விவாதமும் இன்றி சட்டப் புறம்பானவழி யில் நிறைவேற்றப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.


ரஃபேல் ஒப்பந்தம் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட குறிப்பு தலைமை கணக்காயர் அறிக் கைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அரசால் உச்சநீதிமன்றத்தில் தரப்பட்டது பற்றியும் நாடாளுமன்ற குழுவிற்கு முழு விபரங்களையும் தராமல் அரைகுறை அறிக்கையை கொடுத்தது பற்றியும், தலைமை கணக்காயர் அலுவலகம் அரசுக்கு பணிந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.


லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் லோக்பால் பொறுப்பிற்கு உறுப்பினர்களை தேர்ந் தெடுக்கும் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை எனவும் லோக்பால் அமைப்பு ஒரு வழக்கைக் கூட விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை எனவும்  லஞ்ச ஊழலை கண்டு பிடிப்பவரின் பாதுகாப்பிற்காக கொண்டு வரப்பட்ட விசில் புளோயர் சட்டம் என்ற சட்டத்தை நடைமுறைப் படுத்தாமையையும் சுட்டிக்காட்டியுள்ளார். ரஃபேல்  ஒப்பந்தத்தில் அலுவலக ரகசியங்களை பாதுகாக்கும் காலனிய கால சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுமென ரஃபேல் ஊழலை வெளிக்கொண்டு வந்தவர்கள் மிரட்டப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்


சி.பி.அய். இயக்குநர் வெளியேற்றப்பட்டார்


சி.பி.அய் அமைப்பின் சுதந்திரம் தரம் தாழ்ந்து போனதும், சிபிஅய் இயக்குநர்  ஒருவர் ரஃபேல் ஒப்பந் தத்தை விசாரிக்க முனைந்ததால் ஒரே இரவில் வெளி யேற்றப்பட்டதையும் அவருக்கு பதிலாக நாகேஸ்வர ராவ்  என்பவர்  இயக்குநராக  நியமிக்கப்பட்டதையும் அவர் ஒரே நாளில் 40 பேரை அரசுக்கு ஆதரவாக  இட மாற்றம் செய்ததையும் குறிப்பிட்டார்.


மத்திய விழிப்புணர்வு ஆணையத்தின் தலைமையிலிருந்து தலைமை அதிகாரி  பல  வருடங்களாக நடத் திய சோதனைகளில் சகாரா மற்றும் பிர்லா குழுமங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பிரதமர் மற்றும் பாரதிய  ஜனதா கட்சி அமைச்சர்கள் கணக்கில் வராத பணத்தை பெருமளவில் பெற்றதை காட்டும் ஆவணங்கள் மறைக்கப்பட்டதையும் குறிப்பிட்டார்


மனித உரிமை போராளிகள் மீது வழக்கு


தேசியப்  புலனாய்வு  குழுவானது  இந்நாட்டின்  மிக  நேர்மையான மனித உரிமைப் போராளிகள் மீதும், அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்கள் மீதும்  வழக்குத் தொடுக்கும் கருவியாக மாறியது எனவும் எவ்வித கட்டுப்பாடுமற்ற பெருமுதலாளிகள் நாட்டின் வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் ஏமாற்றி லட்சக்கணக்கான கோடிகளை சூறையாடினர் எனவும் இவர்கள் லண்டன்  அல்லது  ஆண்டிகுவா  அல்லது பெர்முடா போன்ற வரி ஏய்ப்பு  சரணாலய  நாடுகளில் குடி புகுந்தனர் எனவும், அரசு அவர்களை இந்நாட்டிற்கு பிடித்து வருவதற்காக வெறும் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது எனவும் மத்திய ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் அழிக்கப்பட்டது  எனவும்  ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் நீக்கப்பட்டதும் அவருக்குப் பிறகு நியமிக்கப்பட்ட உர்ஜித் பட்டேலும்  வெளி யேற்றப்பட்டார் எனவும், ரகுராம் ராஜன் கடன் மோசடி செய்தவர்களின் சொத்துக்கள் குறித்து விசாரிக்க முயன்றதாலும், உர்ஜித் பட்டேல்  ரிசர்வ்  வங்கியின்  ஒரு லட்சம்  கோடி பணத்தை அரசுக்குத்  தர மறுத்த தாலும் வெளியேற்றப்பட்டார் எனவும், 90 விழுக்காடு வெகுஜன ஊடகங்கள் அரசின் பிரச்சார நிறுவனங் களாக மாற்றப்பட்டன எனவும் குறிப்பிட்டார்.


நியாயப்படுத்த முடியாத அரசின் நடவடிக்கைகள் மூடத்தனமாக நியாயப்படுத்தப்பட்டன எனவும் கோவிட்-19 முழுஅடைப்பு, பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்பட்டன எனவும், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு ஊடகங்களால் விசிறி விடப்பட்டது எனவும், நூற்றுக்கணக்கான கோடி அரசு விளம்பரங்கள் மூலம் ஊடகங்கள் கைப்பற்றப் பட்டன எனவும், மறுக்கும் ஊடகங்கள் மிரட்டப்பட்டு வழிக்கு கொண்டு வரப்பட்டன எனவும், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவை அரசால் கட்டுப்படுத்தப்பட்டன எனவும் குறிப்பிட்டார்.


மக்களுடைய உரிமைகள் நசுக்கப்பட்டன


கடந்த நான்கு தலைமை நீதிபதிகளின் காலகட்டத் தில் மக்களுடைய உரிமைகள் நசுக்கப்பட்டன எனவும், அரசின் ஒடுக்குமுறை போக்கை உச்சநீதிமன்றம்  கட்டுப்படுத்த  தவறியது  எனவும்


கொலிஜியம் என்ற நீதிபதிகளை நியமிக்கும் உரிமை கொண்ட முதுநிலை நீதிபதிகள் குழுவானது செயலிழந்ததையும், கொலிஜியத்தால் பரிந்துரைக்கப் பட்ட 43 பரிந்துரைகள் ஏற்கப்படாததையும் அவர் சுட்டிக்காட்டினார். நீதிபதி இர்ஷாத் அலி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட பரிந்துரை நிரகாரிக்கப்பட்டதையும், குஜராத் உயர்நீதி மன்றத்தின் நீதிபதி அகில்குரேசி முதலாவதாக பம் பாய்க்கும் பின்னர் மத்திய பிரதேச தலைமை நீதிபதி யாக மாற்றப்பட்டதையும் அதன் பின்னர் அவர் திரிபுரா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பட்டதையும் அவர்  சுட்டிக்காட்டினார்.


அமித்ஷாவின் கொலைச் சதி வழக்கு


காஷ்மீரில் இன்டர்நெட் வசதிகள் தடுக்கப்பட்ட வழக்கையும், ஆட்கொணர்வு நீதிப்பேராணை தொடர் பாகவும், ஜவகர்லால் நேரு கல்லூரி  மாணவர்கள்  தாக் கப்பட்டது தொடர்பாகவும் தொடுக்கப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாததையும் திரு.அமித்ஷா அவர்களின் கொலைச் சதி வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா அடையாளம் தெரியாத முறையில் இறந்தது தொடர்பான வழக்கையும், ரஃபேல் ஊழல் தொடர்பான வழக்கையும் விசாரிக்கும் போது மூடி முத்திரை இடப்பட்ட உறையில் ஆவணங்களை நீதிமன்றத்திற்கு மட்டும் கொடுத்து எதிர் தரப்பிற்கு அவ்வழக்கு ஆவணங்கள் தரப்படாமலேயே அவ் வழக்குகள் முடிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட் டினார்.


2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முன்னாள் தலைமை நீதிபதி கோகாய் சஹாரா பிர்லா புலனாய்வு தொடர்புடைய வழக்கின் போது, சஹாரா குழுமத்தில் கைப்பற்றிய ஆவணங்களில் ஒன்றில் அன்றைய குஜராத் முதல்வருக்கு 25 கோடி கொடுத்தற்கான குறிப்பு ஒன்று கிடைத்தது எனவும், ஆனால் அந்த ஆவணங்களைப் பெற்ற வருமான வரித்துறையானது சி.பி.அய்-க்கு  அவற்றினை கொடுத்திருக்க  வேண்டும் எனவும், ஆனால் அவ்வாறு  நடக்கவில்லை  எனவும்,  மன் மோகன்சிங் தலைமையிலான அரசானது இவ்வழக்கை சரிவர தொடராதது ஆச்சரியம் அளிக்கவில்லை எனவும், அதில் தொடர்புடைய  அனைவரும்  அவரது ஆட்சிக்கால அதிகாரிகள் எனவும்,  ஆனால்  அடுத்து  வந்த அரசும், அவற்றை கிடப்பில் போட்டனர்  எனவும் தற்போதைய பிரதமர் தனது தேர்தல் கூட்டங்களில் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்றால் திருமதி.ஜெயந்தி நடராஜன் அவர்களுக்கு ஜெயந்தி வரி கொடுக்க வேண்டும் என்று பேசினார், எனவே பிர்லா  குழுமம்  டைரி குறிப்புகள் பற்றி அவர் அறிந் திருக்கவேண்டும் எனவும், ஆனால் அன்றைய குஜராத் முதல்வருக்கு 25 கோடிகள் கொடுக்கப்பட்டதாக சொல்லும் டைரி குறிப்பே தற்போதைய அரசு அவ் வழக்கின் விசாரணையை தொடராமல் இருப்பதற்கு காரணம் எனவும்,


குஜராத் முதல்வருக்கு


ரூ.40 கோடி கொடுக்கப்பட்டது


இது தவிர நவம்பர் 2014ஆம் ஆண்டு திருவாளர் மோடி அவர்கள் அரசாங்கம் அமைந்த  போது வரு மான வரித்துறை சஹாரா குழுமத்தை சோதனையிட்டது என்றும் பணமாக மட்டும் 137 கோடி கைப்பற்றப்பட்டது  எனவும் 113  கோடி  ரூபாய் என்று,யாரால், எவ்வாறு, எந்த இடத்தில் கொடுக்கப்பட்டது என்ற குறிப்புகளைக் கொண்ட தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன எனவும்,  குஜராத்  முதல்வர் திருவாளர் மோடி அவர்களுக்கு 40 கோடி ரூபாய் 9 தடவைகளாக கொடுக்கப்பட்டதாக குறிப்புகளில் கண்டிருந்ததையையும் பூஷன் சுட்டிக் காட்டினார்.


இது தவிர காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சித், மத் திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் போன்ற வர்களும் பயன்பெற்றதைக் காட்டும் குறிப்புகளும் கைப்பற்றப்பட்டன எனவும்,  ஆனால் இந்த ஆவ ணங்கள் சி.பி.அய். வசம் ஒப்படைக்கப்படவில்லை எனவும், மேற்சொன்ன ஆவணங்கள் லஞ்சம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் குற்றம்  நடந்ததை தெளிவாக காட்டிய பின்னும், வழக்கில் இவ்வாறான டைரி குற்றவியல் புலன் விசாரணைக்கு போதுமானது என உச்சநீதி மன்றத்தின் முன் தீர்ப்புகள் இருந்த போதிலும் பிர்லா சஹாரா தாள்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படவேயில்லை  எனவும்,  அந்த விசாரணைக்கு பொறுப்பாக இருந்த கே.வி.சவுத்திரி என்ற வருமானவரி உறுப்பினர் தலைமை கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்ட போது அதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிபதிகள் ஜகதீஷ் சிங் கேகர்  மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தன எனவும், அவ்வழக்கானது நீதிபதிகள் கேகர் அமர்வில் இருந்து மாற்றப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது எனவும், அவ்வழக்கின் தீர்ப்பு தவறானது என உச்சநீதி மன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் துஷ்யந்தவே அவர்கள் எழுதிய  கட்டுரையும்  அவர்  குறிப்பிட்டார்.


சஹாரா வழக்கில் பயன்பெற்றது


நீதிபதி அருண்மிஸ்ரா தனது மருமகன் திரும ணத்தை டெல்லி அரசு ஒதுக்கீடு செய்த வீட்டிலும், குவாலியரிலும் நடத்திய போது மத்திய பிரதேச  முதல்வர்  சிவராஜ்  சிங் சவுஹான் அத்திருமண வர வேற்பு நிகழ்வில் குவாலியரில்  கலந்து கொண்டதையும் சஹாரா வழக்கு தீர்ப்பில் அவர் பயன்பெற்றதையும் பூசன் குறிப்பிட்டார்.


உச்சநீதிமன்றம் தனது நடத்தை விதிகளை வகுத் துள்ளது எனவும் அதன்படி அரசியல் வாதிகளுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும் எனவும்,  அவ்வாறான நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது அவ்வாறான விதிகளுக்கு மாறாக தனது வீட்டு திருமணத்தில் பங்கு பெற்ற ஒருவரது வழக்கை கையாண்டது  சரியல்ல என்றும் குறிப்பிட்டார்.


அருணாச்சல பிரதேச முதல்வர் தற்கொலை


09.08.2016 அன்று அருணாச்சல பிரதேச முதல்வர் கலிக்கோபுல் தற்கொலை  செய்து  கொண்டார். அதற்கு மூன்று வாரங்கள் முன்னதாக நீதிபதி கேகர் மற்றும் திபக் மிஸ்ரா இருவரும் அவரை பதவி நீக்கம் செய்யும் முக்கிய தீர்ப்பை வழங்கி இருந்தனர் எனவும், தற்கொலை செய்த கலிக்கோபுல் தனது தற்கொலை கடிதத்தில் நீதிபதியின் கேகரின் மகன் 49 கோடி ரூபாய் கொடுத் தால் சாதகமான தீர்ப்பு எழுத முடியுமென அவரிடம் கூறியதாகவும் நீதிபதி தீபக் மிஸ்ரா 37 கோடிகள்  கேட்டதாகவும் தற்கொலை கடிதத்தில் சொல்லியிருந்ததையும்  சுட்டிக்காட்டினார்.  ஆனால் இன்று வரை அது தொடர்பான  புலனாய்வோ  விசாரணையோ  நடக்கவில்லை.


(தொடரும்)


- முகநூலிலிருந்து...


No comments:

Post a Comment