இந்துத்துவா கும்பலின் அராஜகம் ‘ஜெய் சிறீராம்' சொல்லச் சொல்லி கிறிஸ்துவ இளைஞர்மீது தாக்குதல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 27, 2020

இந்துத்துவா கும்பலின் அராஜகம் ‘ஜெய் சிறீராம்' சொல்லச் சொல்லி கிறிஸ்துவ இளைஞர்மீது தாக்குதல்!


ராஞ்சி, செப்.27 ஜார்கண்ட் மாநிலத்தில் ‘ஜெய் சிறீராம்'  என சொல்லச் சொல்லி கிறிஸ்துவ பழங்குடி இளைஞர் மீது இந்துத்வா கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தி யுள்ளது. இது தொடர்பாக விசுவ இந்துபரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் மீது புகார் தரப்பட்டுள்ளது.


மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு 2 ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதி கரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இந்துத்துவா கும்பல் நடத்தும் தாக்குதலை பா.ஜ.க. அரசு ஊக்குவிக்கிறது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளும் எழுந்துவருகிறது.


 இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தின்  சிம்டேகாவில் உள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் பெரிகுடர் என்ற கிராமத்திற்குள்  பயங்கர ஆயுதங்கள் மற்றும் தடியுடன், இந்துத்வாவினர்  நுழைந்தனர்.


அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், அங் கிருந்த மக்களின் வீடுகளை சூறையாடினர். அப்போது அதைத் தட்டிக் கேட்ட பழங்குடி கிறிஸ்துவரான தீபக் குலு (வயது 26) என்ற இளைஞரை கொடூரமாகத் தாக்கினர்.


இது தொடர்பாக அவர் கூறும்போது,


‘‘ உங்கள் ஊரில் உள்ளவர்கள் பசுமாட்டை வெட்டி விருந்து வைத்துள்ளனர். அதற்கான காணொலி ஒன்று எங்களுக்கு அனுப்பி யுள்ளனர். ஆகையால் பசுக்களை கொன்ற வர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கி றோம்'' என்று கூறினர்.  ஆனால், அது வேறு எங்கோ எடுக்கப்பட்ட பழைய காணொலி என அப்பகுதி மக்கள் கூறியும் அவர்கள் கேட்கவில்லை.


இந்தத்  தாக்குதலின் போது, ‘‘என்னையும் மற்ற ஆறு கிறிஸ்தவ பழங்குடியினரையும் கிராமத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகாடோ டோலா என்ற கிராமத்திற்கு இழுத்துச் சென்றனர். ஒரு மரத்தின் கீழ் கட்டிவைத்து தாக்குதல் நடத்தினார்கள். அப்போது, ‘ஜெய்சிறீராம்' என சொல்லச் சொல்லி எங்கள் தலையை  அந்தக் கும்பல் மொட்டையடித்தனர்'' என்று தீபக் குற்றம் சாட்டினார்.


தீபக் மேலும் கூறுகையில்,


‘‘தாக்குதல் நடத்தியவர்கள் உள்ளூர் காவல் நிலையத்தில், நாங்கள் மாடுகளைக் கொன்றதாகப் புகார் கூறியுள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் எங்களை கைது செய்து, எங்கள் வீடுகளில் சோதனையிட்டனர். ஆனால், அவர்களுக்கு எதுவும் சிக்கவில்லை. ஆகையால் காவல் துறையினர் எங்களை விடுதலை செய்தனர்'' என்று கூறினார். இதனையடுத்து  பாதிக்கப் பட்டவர்கள் சிம்டேகா காவல் நிலையத்தில் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளித்துள்ளனர்.


புகாரின் அடிப்படையில் இந்து அமைப் பைச் சேர்ந்த குற்றவாளிகள் 7 பேரில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது.


மேற்குவங்கத்தில்


இஸ்லாமிய மதபோதகர்மீது தாக்குதல்!


கடந்த மார்ச் மாதம் மேற்கு வங்கத்தில் ‘ஜெய் சிறீராம்' என்று கூற மறுத்ததற்காக இஸ்லாமிய மதபோதகரை ரயிலில் இருந்து இந்துத்துவா கும்பல் ஒன்று தள்ளிவிட்டது. அடுத்து மராட்டிய மாநிலத்தில்  திவா என்ற பகுதியில் இஸ்லாமிய இளைஞர் ஒருவரை  ‘ஜெய் சிறீராம்'  என்று கோஷமிட்டால் விடு விப்பதாகக் கூறி மிரட்டி, அவரின் காரை சேதப்படுத்தி, அவரையும் அடித்து வன்முறை யில் இந்துத்துவா கும்பல் ஈடுபட்டது.


பின்னர், உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் அருகே கித்வாய் நகரைச் சேர்ந்த முகமது தாஜுதீன் என்ற 16 வயது முஸ்லிம் சிறுவனையும், 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகத் தாக்கியதோடு மட்டுமில்லாமல், குல்லா அணியக் கூடாது என்றும் மிரட்டி யுள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தில் பைக் திருட வந்ததாகக் கூறி இஸ்லாமிய இளைஞர் ஒருவர் மீது மதவாதக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த இளைஞரிடம் 'ஜெய் சிறீராம்' என சொல்லச் சொல்லி, ஏழு மணிநேரம் கட்டி வைத்து அடித்ததில் மயக்கமடைந்து அவர் உயிரி ழந்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில மாதங்களாக அமைதியாக இருந்த இந்து அமைப்பினர் மீண்டும் தற்போது தாக்குதலை நடத்த புறப்பட்டுவிட்டனர்.


No comments:

Post a Comment