சென்னை, செப்.24 கிண்டி கிங் ஆய்வகத்தில் மட்டும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் 176 கரோனா ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 66 அரசு மருத்துவமனைகளிலும், 110 தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களிலும் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு இதுவரை 67 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. சென்னையில் மட்டும் பரிசோதனைகளின் எண்ணிக்கை 16 லட்சத்தை கடந்துள்ளது.
அதில், அதிக அளவிலான பரிசோதனைகள் கிண்டி கிங் ஆய்வகத்திலும் அதற்கு அடுத்தபடியாக, ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இது குறித்து கிண்டி கிங் ஆய்வக மருத்துவர்கள் கூறியதாவது:-
தமிழகத்தில் தினமும் 1 லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்ள சுகாதாரத் துறை இலக்கு நிர்ணயித்து உள்ளது. அதற்காக அரசு மற்றும் தனியாரில் ஆய்வகங்களில் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிண்டி கிங் ஆய்வகத்தில் மட்டும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.
வேளாண் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: கர்நாடகத்தில் வருகிற 28-ஆம் தேதி முழுஅடைப்பு
விவசாய சங்கங்கள் அறிவிப்பு
பெங்களூரு, செப்.24 மத்திய - மாநில அரசுகளின் வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கர்நாடகத்தில் வருகிற 28-ஆம் தேதி முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
மத்திய அரசு வேளாண்மை சந்தைகள் சட்டத் திருத்த மசோதா உள்பட 3 மசோதாக்களை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளது.
இதுகுறித்து கர்நாடக விவசாயிகள் சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் கூறியதாவது:-
மத்திய அரசு 3 வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. இது முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரானது. இந்த மசோதாக்கள் சட்டமாக அமலுக்கு வந்தால், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காது. தங்கள் அரசு விவசாயிகளுக்கு ஆதரவான அரசு என்று கூறிய பிரதமர் மோடி, இப்போது விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறார்.
அதனால் அந்த மசோதாக்களை கண்டித்து அய்க்கிய விவசாயிகள் போராட்ட குழு சார்பில் வருகிற 28-ஆம் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்த முடிவு செய்துள்ளோம். பல்வேறு விவசாய சங்கங்கள் ஒன்றுகூடி இந்த முடிவு எடுத்துள்ளோம். அன்றைய தினம் நாங்கள் பெங்களூருவில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும்.
இவ்வாறு கோடிஹள்ளி சந்திரசேகர் கூறினார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக
10 நீதிபதிகள் நியமனத்திற்கு ஒப்புதல்
சென்னை, செப்.24 சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 நீதிபதிகள் நியமனத்திற்கு உச்சநீதிமன்ற மன நிறைவு கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
நீதிபதிகள் சந்திரசேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம், நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முகசுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி ஆகிய 10 நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித் துள்ளது.
No comments:
Post a Comment