நம் புத்தெழுச்சி இன எதிரிகளை மிரண்டோடச் செய்யட்டும்!!
கழகத் தோழர்களுக்குக் கழகத் தலைவரின் வேண்டுகோள்
வரும் 17 ஆம் தேதி பகுத்தறிவுப் பகலவனின் 142 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா அன்று பிரச்சாரப் பெருமழை அடைமழையாகக் கொட்டட்டும்! நம் புத்தெழுச்சி இன எதிரிகளை மிரண்டோடச் செய்யட்டும்! என்று கழகத் தோழர்களுக்குக் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கழகக் கொள்கைக் குடும்பத்தவர்களே, பகுத்தறி வாளர்களே, பெரியார் பற்றாளர்களே, திராவிடர் இயக்கத்தவர்களே, அன்பு வணக்கம்!
இவ்வாண்டு தந்தை பெரியாரின் 142 ஆவது ஆண்டு பிறந்த நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.
பகுத்தறிவு புத்திக்குக் கட்டுப்பட்டுவிட்டது!
காரணம், கரோனா கொடுந்தொற்று என்கிற கண்ணுக்குத் தெரியாத (கிருமி) எதிரியுடன் மனிதகுலம் போராட தன்னம்பிக்கையையும், தளர்வில்லாத துணிச் சலையும், பகுத்தறிவின்பாற்பட்ட அணுகுமுறையும் தான் அதை வெல்ல பயன்படும் என்பதை நாளும் அனுபவத்தால் கற்று அறிகிறோம்.
பக்தி முடங்கிவிட்டது; மதவாதிகளும், மந்திரச் சுடளன்களும்கூட முகக்கவசம் என்ற பகுத்தறிவு புத்தி காரணமாக அதற்குக் கட்டுப்பட்டுவிட்டது!
எதிர்ப்போருள்ளும் ஊடுருவி பாய்ந்துவிட்டது
‘கடவுளை மற; மனிதனை நினை' என்ற தந்தை பெரியாரின் கருத்தை ஏற்கத் தயங்குவோர் - எதிர்ப் போருள்ளும் ஊடுருவி பாய்ந்துவிட்டது.
கடவுளை மற - பக்தியை நினைத்துப் பார் - தடுக்க முடியாது; பரிசோதனை மூலமே தடுக்க முடிகிறது - டாக்டர்களை - செவிலியர்களை - துப்புரவு தூய்மைப் பணியாளர்த் தோழர்களை நினை என்பது அன்றாட காப்பு ஆகிவிட்டது!
எனவே, பகுத்தறிவுப் பகலவனின் தத்துவம், வாழ்க் கையின் விழுமியங்கள்தான் நம்மை வாழ வைக்கும் - வெற்றிகரமான வாழ்க்கைக்கு சிக்கனமும், சீரான திட்டமிடுதலும் தேவை என்பதை மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள்.
கழகத்தின் பொறுப்பாளர்கள் தேனீக்கள்போல மிகுந்த சுறுசுறுப்புடன் சுவர் எழுத்துப் பணிகள்; செய்துவருவதையும், கல்விக் கொள்கை ஆபத்து விளக்க துண்டறிக்கை விநியோகங்களும், ஆங்காங்கே காணொலிக் கூட்டங்கள் மூலம் கழகச் செயல்பாடுகள் - போட்டிப் போட்டுப் பணியாற்றுவதும் கண்டு எல்லையற்ற மகிழ்ச்சியையும், இன்பத்தையும் நாம் அடைகிறோம்.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? என்ப தற்குக் கருஞ்சட்டைப் படையும், பாசறையும் கலங்கரை வெளிச்சமாய் சுழன்று அடித்து இருள்போக்கிடும் வெளிச்சம் தருகிறது!
சுவரெழுத்து, சுவரொட்டி, துண்டறிக்கைகள் பரப்புதல் எல்லாம் தேவை!
செப்டம்பர் 17 ஆம் தேதியன்று வீடுகளில் கழகக் கொடி பறக்கவேண்டும் - அது கூரை வீடாக இருந் தாலும்கூட!
வீட்டிற்கு முன் தந்தை பெரியார் படம் வைக்கப் பட்டு, வீட்டுக் குடும்பத்தாருடன் முகக்கவசத்தோடு முழக்கமிடுதல், இனிப்பு வழங்குதல் - முதலியன தொடரட்டும்!
சிறப்புடன் செய்க!
இன எதிரிகளை மிரண்டோடச் செய்யட்டும்!
பிரச்சாரப் பெருமழை அடைமழையாகக் கொட்டட்டும்!
நம் புத்தெழுச்சி இன எதிரிகளை மிரண்டோடச் செய்யட்டும்!!
தயாராவீர்! தயாராவீர்!!
மறவாதீர்! காணொலிகள் நமக்குக் கழகத்தின் சங்கொலிகள் - முரசொலிகள்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
2.9.2020
No comments:
Post a Comment