‘‘ஊசி  மிளகாய்'' : தேவை! 100 பெரியார்கள் தேவை!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 2, 2020

‘‘ஊசி  மிளகாய்'' : தேவை! 100 பெரியார்கள் தேவை!!

‘‘ராகு, கேது'' நம்பிக்கையாளர்களே, பகுத்தறிவை அடகு வைக்கலாமா?


ராகு-கேது உருவான வரலாறு



தேவர்கள் அமுதம் பெற பாற்கடலை கடைந்தனர். மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடல் கடையப் பெற்றது. பாம்பின் தலைப்பகுதியை அசுரர்களும், வால் பாகத்தை தேவர்களும் பற்றி இருந்தனர்.


அப்போது ஆலகால விஷம் தோன்றியது. சிவபெருமான் அந்த விஷத்தை உண்டார். விஷம் அவரது கண்டத்துக்கு (கழுத்துக்கு) கீழே போகவிடாமல் பார்வதி தடுத்தாள். பின்னர் அமுதத்தை வழங்க விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்தார். தேவர்களையும், அசுரர்களையும் தனித்தனியாக அமரும்படி மோகினி கூறினாள்.


இதை நம்பி ஜோதிடர்களின் பிழைப்பு ‘ஓகோ'வென்று கரோனா காலத்திலும் நடைபெறுகிறது.


எந்த ஜோதிடரும் ‘கரோனா' என்ற ஒரு கொடிய நோய் வந்து உலகில் பற்பல நாடுகளில் பரவி சுமார் 8,61,286 (2.9.2020) உயிர்களை பலி வாங்கும் என்று கூறியிருக்கிறாரா? ஜோதிடர், அர்ச்சகர் உள்பட  எவரும் கரோனா பலிக்கு விலக்கு அல்ல என்ற வேதனைதானே நடப்பில்?


இந்தக் கதையை நம்புகிறீர்களா? நாம் எந்த நூற்றாண்டில் வாழுகிறோம்? எல்லோரும் ‘செல்'லும் கையுமாக, தொலைக்காட்சியும் கண்ணுமாக உள்ளார்களே, இதற்கும் ராகு -கேதுவுக்கும், பாற்கடலுக்கும், பரந்தாமனுக்கும் என்ன சம்பந்தம்? யோசிக்கவே மாட்டீர்களா?


முன்பு இருந்ததாகக் கூறப்படும் பாற்கடல் - இப்போது எங்கே?


கடலை கடைந்தனர் - மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு கடைந்தனர்- அமுதம் வந்தது என்று கயிறு திரிக்கிறார்களே, இதை ஒரு சிறு குழந்தையிடம் சொன்னால்கூடநம்புமா? கடலை, மந்தார மலையை மத்தாகக் கொண்டு கடைந்தார்களாம்!.


அதில்கூட தேவர்கள் (ஆரியர்கள்) பாம்பின் வால் பக்கம்;  (அதாவது வால் பிடிக்கக் கூடியவர்கள்) (ஆரியர்கள் - திராவிடர்கள்  உருவகப்படுத்தப்பட்டது) தலைப்பக்கம்  அசுரர் அதாவது திராவிடர்களுக்கு! ஆபத்தான பகுதி அசுரர்களுக்கு  - ஆபத்து அதிகம் இல்லாத பகுதி ‘தேவர்களுக்கு' எவ்வளவு, சூழ்ச்சி, தந்திரம்!


சிவபெருமான் (ஹரன்), மகாவிஷ்ணு  (ஹரி)பாற்கடல்  என்பதெல்லாம் ஏதோ கதை அவ்வளவுதான். விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்தார் - அமுதத்தை வழங்க.  தேவர் - அசுரர் எனத் தனித்தனியே அமர வைத்தனர் - ஸ்வர்ணபானு என்னும் அசுரன் தேவர்கள் வரிசையில் அமர்ந்து அமுதத்தை உண்டது தெரிய வர மோகினி அவதாரம் விஷ்ணு, ஸ்வர்ணபானு அசுரனை அடித்தான் - அப்போது தலை வேறு - உடல்வேறு துண்டானது!


திருமாலை நோக்கி இவன் கடும் தவம் புரிந்தான் - உடலும், தலையும் வெவ்வேறானதால், செத்துவிட்டான் என்றுதானே அர்த்தம்! அப்புறம் எப்படி கடும் தவம் - அட மண்டூக மாங்காய் மடத்தன மாபெரும் நம்பிக்கையாளர்களே,


விஷ்ணு மகிழ்ந்து, பாம்பின் தலைகொண்ட மனிதன், மனிதத் தலை கொண்ட பாம்பு என்று இரண்டு உருவானதுதான் ராகுவும், கேதுவும்!


ராகுவும், கேதுவும் சாயாகிரகங்கள் - இதை நம்பி  நாசமாகிப் போன - பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், கோவில் வழிபாடு -  இல்லாத ஆகாசக் கோட்டையில் வாசஞ்செய்யும் மூடத்தனத்தின் முடைநாற்றம்!


அறிவியல் பரப்பிட வேண்டிய கருவிகள், இப்படி மூடநம்பிக்கையை மூலதனமாக்கி வியாபாரம் செய்து கொழுக்கலாமா? என்று கேட்க, இன்னும் 100 பெரியார்கள் தேவை அல்லவா? இதுதான் ஞானபூமியாம்!


அட ஞானசூன்யங்களே, பரிதாபப்படுவதைத் தவிர வேறு என்ன செய்வது?


No comments:

Post a Comment