துணைத் தலைவர்
பதவி ரெடி!
பா.ஜ.க.வில் சேர்ந்தால் மாநிலத் துணைத் தலைவர் பதவி.
பிற கட்சியிலிருந்து கொஞ்சம் விளம்பரம் ஆனவர்களோ, அதுபோலவே, அதிகாரிகளாகயிருந்தவர்களோ பா.ஜ.க.வில் சேர்ந்தால், உடனடியாக பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் பதவி ரெடி, ரெடி.
இதுவரை அப்படி 10 மாநிலத் துணைத் தலைவர்கள்.
ஓ, இந்தப் பதவி அப்படியொரு 'சீப்'போ (Cheap).
என்ன காரணம்?
தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் மட்டும் கரோனா தொற்று 6,495. இதில் சென்னையில் மட்டும் 1249.
கொஞ்சம் குறைந்ததுபோல 'பாவலா' காட்டிய கரோனா மீண்டும் பாய்ந்துள்ளதற்கு என்ன காரணம்? பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்ததாலா? ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தாலா? தொற்றிலும் வயது வரம்புபற்றிய தகவல் மாறி மாறி வருவதால், அனைத்துத் தரப்பு வயதினருமே பாதுகாப்புடன் இருப்பது அவசியமே!
யார் கண்டது?
பா.ஜ.க. கட்டுப்பாட்டில் 'வாட்ஸ் அப்' என்று அமெரிக்காவின் 'டைம்' ஏடு கூறுகிறது!
ஏற்கெனவே முகநூல்பற்றி அப்படியொரு தகவல் வெளியானது. இப்பொழுது 'வாட்ஸ் அப்'பும் அந்தப் பட்டியலில் சேர்ந்துகொண்டுள்ளது. (இரண்டும் ஒரே நிறுவனத்தை சேர்ந்தவையே).
இதில் என்ன? ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பதோடு நின்று விடுமா? ஒரே கட்சி - அதிலும் ஒரே தலைவர் என்பதுதானே அவர்களின் திட்டம்.
ஊடகங்களில் முக்கிய பொறுப்புகளில் யார் இருக்கவேண்டும் என்று தீர்மானிப்பதுவரை பா.ஜ.க.வின் கைகள் நீண்டு விட்டனவே!
அடுத்து ஒரே மதம், ஒரே உணவு, ஒரே உடை என்று அறிவித்தாலும் அறிவிப்பார்கள் - யார் கண்டது?
கொச்சைப்படுத்தாதீர்கள்!
கரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் நுரையீரல் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது.
எதுக்கும் கடவுள் கடாட்சம் இருந்திருக்கும் என்று சொல்லி டாக்டர்களின் சாதனையைக் கொச்சைப்படுத்தாதீர்கள் அல்லது அந்தக் காலத்திலேயே கடவுள் சிவன், யானையின் தலையை வெட்டி, வேறு ஓர் உருவத்திற்கு (விநாயகருக்கு)ப் பொருத்தியிருக்கிறார் - அதாவது உறுப்பு மாற்று - பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார் என்று மும்பை விஞ்ஞானிகள் மாநாட்டில் பிரதமர் கூறியதை நினைத்து சிரிக்காமலும் இருக்காதீர்கள்!
No comments:
Post a Comment