அனைத்துக்கட்சிக் கூட்டத்தை தமிழக முதல்வர் உடனே கூட்டவேண்டும்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்!
சென்னை, ஆக. 1-- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அனைவருக்கும் கல்வி என்பதற்கு மாறாக ஒரு சிலருக்கு மட்டுமே கல்வி என்ற வர்ணாசிரமக் கோட்பாட்டை மீண்டும் புகுத்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் ஆகும். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த கூடாது என மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.
தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையின் மீது கடந்த 31.7.2019 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது கருத்துக்களை ஒரு மனுவாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ரமேஷ் போக்ரியால் அவர்களிடம் வழங்கினோம். எம்மைப் போலவே பல்வேறு கட்சிகளும் தேசிய கல்வி கொள்கை தொடர்பாகத் தமது கருத்துக்களை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளனர். அவை எதையுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் தமது வரைவு அறிக்கையில் எந்தத் திருத்தத்தையும் செய்யாமல் மீண்டும் அதே அறிக்கையை இப்பொழுது நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிக் கையைப் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்காமல் மாநில அரசுகளின் கருத்தை அறி யாமல் நடைமுறைப்படுத்த முற்படுவது முழுக்க முழுக்க மக்கள் விரோத, ஜனநாயக விரோதச் செயலாகும்.
உலகில் உள்ள படிப்பறிவற்ற மக்களில் 37 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர் என்று குளோபல் மானிட்டர் ரிப்போர்ட் 2013--14 இல் வெளியிட்ட அறிக்கை கூறியுள்ளது. விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு இந்தியாவில் கல்வி புறக்கணிக்கப்படுகிறது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது. ஏழை-எளிய மக்களும் படிப்பறிவு பெறுவதற்கு 2080ஆம் ஆண்டு வரை ஆகலாம் என அது சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் அறிமுகப்படுத்தப்படும் இந்த தேசிய கல்விக் கொள்கையில் அனைவருக்கும் கல்வி வழங்குவது பற்றி எந்தவித குறிப்பான திட்ட மும் இல்லை. அது மட்டுமில்லாமல் மூன்றாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வைத்து ஏற்கனவே படிப்பவர்களையும் இடை நிறுத்தம் செய்வதற்கு இந்த கல்விக் கொள்கை வழிவகுக்கிறது.
மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி துவக்கக் கல்வியில் (Primary) 22.3 %; ஆரம்பக் கல்வியில் (Elementary) 40.8%; உயர்நிலைக் கல்வியில் (Secondary) 50.3% - மாணவர்கள் கல்வியை இடைநிறுத்தம் செய்து விடுகின்றனர் என்று தெரிவித்துள்ளது. இப்படி ஏற்கனவே இடைநிற்றல் சதவீதம் மிக அதிகமாக இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக பொதுத் தேர்வுகளை வைப்பது மேலும் இதை அதிகரிக்கவே வழி வகுக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக மும்மொழிக் கொள் கையை இந்த தேசிய கல்விக் கொள்கை திணிக்கிறது. எந்தவொரு வளர்ச்சியடைந்த நாட்டிலும் மும் மொழிக்கொள்கை என்பது பின்பற்றப்படவில்லை. ஒரு மொழிக் கொள்கை, இருமொழிக் கொள்கை மட்டுமே இருக்கின்றன. இந்நிலையில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் பிறர் மீது திணிக்க முயல்வது ஏற்புடையதல்ல. குறிப்பாக, தமிழ்நாட்டு மக்கள் இந்தித் திணிப்பை ஒருகாலும் ஏற்கமாட்டார்கள்.
உயர் கல்வியை முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்வதற்கு இந்த கல்விக் கொள்கை வழிவகுக்கிறது. மருத்துவப் படிப்பைப்போலவே எல்லா விதமான பட்டப் படிப்புகளுக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வைக் கொண்டுவருவது பெரும் பாலானவர்களை உயர் கல்வி பெறாமல் தடுப்பதற் குத் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ள சூழ்ச்சியே தவிர வேறு அல்ல.
கரோனா பெருந்தொற்றின் காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள சூழலைப் பயன்படுத்திக் கொண்டு மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் விதமாகவும், கல்வியை காவிமயமாக்கும் நோக்கத்தோடும் கொண்டுவரப்படும் இந்த கல்விக் கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். இதுகுறித்து தமிழகத்தின் ஒன்றுபட்ட கருத்தை மத்திய அரசுக்குத் தெரிவிக்கும் விதமாக அனைத் துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு தமிழக முதல் வரை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
No comments:
Post a Comment