புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் புதிய காவிக் கொள்கையை மத்திய பா.ஜ.க. அரசு அறிமுகம் செய்துள்ளது. ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி என்ற தேன் தடவப்பட்டு மற்ற அனைத்தும் தேளாய்க்கொட்டுகிறது.
கொரோனா எனப்படும் ஊரடங்கு காலத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி தனது ரகசியத் திட்டங்கள் அனைத்தையும் விவாதம் இல்லாமல், மக்கள் கருத்து இல்லாமல், மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், நாடாளுமன்றம் இல்லாமல் நிறைவேற்றிக் கொள்ளும் எதேச்சதிகார மத்திய பா.ஜ.க. அரசு கல்வித் துறையில் புகுத்தி இருப்பது, அனை வருக்குமான கல்வி அல்ல. அவர்கள் சிலருக்கு மட்டுமான கல்வியா கவே காலப் போக்கில் மாறப் போகிறது.
புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க 14.7.2019 அன்று வல்லுநர் குழு அமைத்தார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். இதன் அறிக்கை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரிடம் 28.7.2019 அன்று தரப்பட்டது. "அரசியல் சட்டத்திற்கு எதிரான, மாண வர்களுக்கு எதிரான, மக்களுக்கு எதிரான 2019 வரைவு தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. அதை திரும்பப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டது. இதேபோல் வந்த எந்தக் கருத்தையும் ஏற்காமல் தன்னிச்சையாக ஒரு கொள்கையை அமல் படுத்தத் துடிக்கிறது மத்திய அரசு.
தமிழகத்தில் இரு மொழித் திட்டம் அமலில் இருக்கிறது. ஆனால் இந்த புதிய கல்விக் கொள்கையானது, மும்மொழித் திட்டத்தை முன்மொழிகிறது. இதன் மூலமாக இந்தியை புறவாசல் வழியாகத் திணிக்க முயற்சிக்கிறார்கள். மாணவர்கள் விரும்பும் மொழியைத் தேர்வு செய்து கொள்ளலாம்என்று சொல்லிவிட்டு சமஸ்கிருதம் படிப்பதற்கான வழியாக அந்த மொழியை முன்மொழிந்துள்ளார்கள்.
‘முதலில் இந்தித் திணிப்பார்கள். இந்தி அந்த இடத்தில் வந்து உட்கார்ந்ததும் சமஸ்கிருதத்தை வைப்பார்கள்' என்றார் தந்தை பெரியார். இதுதான் தங்களுடைய மறைமுக நோக்கம் என்று இராஜாஜியும் அந்தக் காலத்தில் சொன்னார். தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிராக வீறு கொண்டு போராட்டம் நடக்கக் காரணம் இதுதான். ஒரு மொழியைப் படிப்பதும் படிக்காமல் போவதும் அவர வர் விருப்பம். ஆனால் ஒரு அரசாங்கம் ஒரு மொழியைத் திணிப் பதும், அதைத்தான் படிக்க வேண்டும் என்பதும் ஆதிக்க மனோ பாவம். அந்த மொழி ஆதிக்கத்துக்கு எதிராகத்தான் திராவிட இயக் கம் போராடியது.
அப்போது திராவிட இயக்கம் சார்பில் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்திப் பேசினார்கள். ஆங்கிலம் தேவையா என்பதும் விவாதம் வைக்கப் பட்டது.அப்போது தங்களை அழைத்துப் பேசிய பெருந்தலைவர் காமராசர், ‘நீங்க ஆங்கிலத்தை எதிர்த்தா அந்த இடத்துல இந்தி வந்து குந்திக்கும்னேன்' என்று சொன்னதாக பல மேடைகளில் முத்தமிழறி ஞர் கலைஞர் பேசி இருக்கிறார்.
அதாவது ஆங்கிலத்தை அங்கிருந்து அகற்றுவதும், அந்த இடத்தில் இந்தியையும், அதன் பிறகு சமஸ்கிருதத்தையும் உட்கார வைப்பதுதான் சனாதன சதித் திட்டத்தின் சங்கிலித் தொடரான செய்கைகள். அதற்காகத் தான் 1 முதல் 5 வரை தாய்மொழிக் கல்வி என்ற தேன் தடவல்கள்.
"சமஸ்கிருத மொழிக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத் துவம், ஏனைய இந்திய மொழிகள் மீது கொண்டுள்ள மாற்றாந்தாய் மனப்பான்மையை உணர்த்துகிறது" என்று தி.மு.க. தீர்மானம் போட்டுக் கண்டித்துள்ளது. இந்தியா பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், பண்பாடுகள் கொண்ட ஒன்றியம். இங்கே ஒரே ஒருமொழி எப்படி தேசிய மொழியாக இருக்க முடியும்? சமஸ்கிருதக் கல்வி எதற்காக? அதன் பயன்பாடு என்ன? சமஸ்கிருதத்தைத் தாய்மொழி யாகக் கொண்டவர்கள் எத்தனை பேர்? சமஸ்கிருதம் வேண்டும் என்று சொல்கிற யாருக்காவது சமஸ்கிருதத்தில் பேசத் தெரியுமா? வாசிக்கத் தெரியுமா? சமஸ்கிருதத்தில் பத்திரிக்கை நடத்தும் தைரியம் உண்டா?
"மழலையர் பருவத்தில் முறைசார்ந்த கல்வி, 3, 5, 8-ம் வகுப்பு களுக்குத் தேர்வு, தமிழகத்தில் வெற்றிகரமாக இயங்கும் ‘பிளஸ் டூ’ கல்வி முறையில் மாற்றம், தமிழகத்தில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ‘குலக்கல்வி’த் திட்டத்தின் மறு வடிவமான தொழிற்கல்வி, இருக்கின்ற பள்ளிகளை மூட வழி வகுக்கும் பள்ளி வளாகங்கள், ஆசிரியர் தேர்வு, ஆசிரியர் பணி குறித்த தர நிர்ணயம் உள்ளிட்டவை, மாநிலங் களிடம் எஞ்சியிருக்கும் கல்வி உரிமையிலும் தேவையே இல்லாமல் தலையிட்டு - மத்திய அரசைத் தவிர மாநிலங்களுக்கு கல்விச் சீர்திருத்தம் பற்றி எதுவுமே தெரியாது என்று நினைப்பது மேலாதிக்கப் போக்காகும்" என்றும் தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஏற்கனவே "நீட்" தேர்வு கொண்டு வரப்பட்டு மருத்துவக் கல்வி யில் பெரும்பான்மை மக்களின் கனவு சிதைக்கப்பட்டது. இதேபோல் அனைத்து உயர்கல்விக்கும் பொது நுழைவுத் தேர்வைக் கொண்டு வரப்போகிறார்கள்.இனி பள்ளிக் கல்வியுடன் ஒடுக்கப்பட்ட சமுதாயம் ஒடுக்கப்பட்டு விடும்.அவர்களை உயர்கல்வி நிலையங்களுக்குள் நுழைய விடமாட்டார்கள்.மருத்துவம் படிப்பவர்களுக்கும் சமஸ்கிரு தம் தெரிந்திருக்க வேண்டும் என்று ஒரு காலத்தில் விதி வைத் திருந் தார்கள். நீதிக்கட்சி ஆட்சியில் பனகல் அரசர் சென்னையின் பிரிமிய ராக இருந்தபோது, அன்று நீதிக்கட்சியில் இருந்த முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் சொல்லி அந்த விதி நீக்கப்பட்டது வரலாறு. இப்போது மீண்டும் அநீதியின் ஆட்சியை அமல்படுத்தத் துடிக் கிறார்கள்.
தனது கல்வி பாணி எது என்பதற்கு உதாரணமாக இக்கொள் கையில் காட்டும் நெறிமுறை பாடத்திட்டங்கள் அனைத்தும் ‘வேத காலத்துக்கு’ திரும்ப நினைப்பதாகவே இருக்கிறது. அதனால் தான், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கல்விப் பிரிவானது இந்தப் புதிய கல்விக் கொள்கையை மனப்பூர்வமாக வரவேற்றுள்ளது. வரவேற்றது அதிர்ச் சிக்குரியது அல்ல. ‘நாங்கள் கொடுத்ததில் 60 சதவிகித கருத்துக்களை ஏற்றுக் கொண்டு விட்டார்கள்’ என்று சொல்லி இருக்கிறார்கள். இது ஒன்றே போதும் இது புதிய காவிக்கொள்கை என்று சொல்வதற்கு?!
நன்றி: 'முரசொலி', தலையங்கம் 1.8.2020
No comments:
Post a Comment