சிறப்புக் கேள்வி
ப.அப்துல் சமது,
பொதுச் செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி
தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு...
கேள்வி 1: பிராமணியத்தின் சதித் திட்டங்களை வெளிப்படுத்தி உண்மை முகத்தைத் தோலுரிக்கும் போதெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிவிடுகிறார்களே... எதிர்கொள்வது எப்படி?
பதில்: நன்றி திரு.அப்துல் சமது அவர்களே!
வன்முறைக்கு வன்முறை ஒரு போதும் பதிலாகாது என்பதை நன்கு உணர்ந்தவர்கள் நாம்.
அனைவரும் ஓரணியில் திரண்டு பார்ப்பன சூழ்ச்சியையும், நடைமுறை ஆபத்துகளையும் கொள்கை ரீதியாக அனைத்து மக்களுக்கும்
விளக்க வேண்டும்.
மதச் சாயமோ, வேறு எந்தச் சாயமோ பூசிட காவிகள் வைக்கும் கண்ணி வெடிகளையும் கவனமான வியூகம் வகுத்து, வெளியே எடுத்து செயலிழக்கச் செய்ய வேண்டும். ஒன்றுபட்டுத் தீர்வு காண வேண்டும்!
கேள்வி 2: “பெரியாரின் போர்முறை, மூல பலத்தையே முறியடிப்பது தான்” என்கிறார்அண்ணா. பிரச்சனையின் ஆணி வேரை ஆட்டங் காணச் செய்யும் பெரியாரின் போராட்ட முறையைத் தமிழக மக்கள் கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறதா? அப்படியானால் இது மற்ற மாநிலங்களுக்குப் பரவும் வாய்ப்புள்ளதா?
பதில்: தமிழ்நாட்டு மக்கள் தெளிவானவர்கள்! எப்போது எப்படி எழ வேண்டுமோ அப்போது எழுவதற்குப் பக்குவப்பட்டவர்கள்!
மற்ற மாநிலங்களும் தமிழ்நாட்டு உணர்வுகளை - எழுச்சியைக் கண்டு பாடம் பெறுவார்கள் - அது காலத்தின் கட்டாயம்! கொதிநிலை கூடக் கூட என்னவாகும் மக்கள் மன்றத்திற்கு - வரலாறு கூறுகிறதே!
சூழ்ச்சிகளும், பின்னல்களும் புரியவைக்கப்பட தொடர்ந்து பிரச்சாரமும்,
அறப் போராட்டங்களும் தேவை!
கேள்வி: சென்னை கிண்டியில் இயங்கும் தமிழ்நாடு காகித ஆலை தலைமையக முகப்பில் இன்னும் “மவுண்ட் ரோடு” என்றுள்ளது. பல முறை முறையிட்டும் இன்னும் மாறவில்லை. மாற்ற என்ன செய்திட வேண்டும்?
- அ.இரா.முல்லைக்கோ, பெங்களூரு-43
பதில்: மீண்டும் ஒரு முறை சம்பந்தப்பட்ட மாநகராட்சிக்கு எழுதி, அதன் பிறகு உரிய நடவடிக்கை தேவைப்படின் மேற்கொள்ளத் தயங்க மாட்டோம்.
கேள்வி: மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அகில இந்திய ஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மத்திய பி.ஜே.பி அரசு முறையாகச் செயல்படுத்துமா? - சீ.இலட்சுமிபதி, தாம்பரம்.
பதில்: பொறுத்திருந்து பாருங்கள்! பொறுத்திருந்து பார்ப்போம்!
கேள்வி: கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது என்ன காரணம்? - அ.தமிழ்க் குமரன், ஈரோடு
பதில்: மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி, வாட் உள்ளிட்ட வரிகளைக் குறைக்காததே மூலகாரணம்.
கேள்வி: வீட்டில், வெளியில் தாங்கள் பேசுவது தமிழாக இருந்தாலும், பார்ப்பனியம், இந்தி, சமஸ்கிருதத்தைத் திணித்து தமிழை அழிக்கத் துடிப்பது ஏன்?
- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்
பதில்: வாடகை வீட்டில் குடியிருப்பவர்க்கு வீட்டின் மீது என்ன தனிப் பற்று? உரிமையாளருக்குத் தான் பற்று இருக்கும்.
சென்னை மொழியில் சொன்னால் ‘தமிழ்’ -அவாளுக்கு வாடகை வீட்டு 'குடக்கூலி' இடம் அவ்வளவுதான்!
உள்ளார்ந்த பற்று, அவாளுக்கு ‘தேவ பாஷை' மீதுதான்! ‘நீச்ச பாஷையை' உண்மையாக நேசிக்க முடியுமா?
கேள்வி: பார்ப்பனியத்தின் நச்சு தோய்ந்த அம்பாகிய ஜாதியத்தைத் தூக்கிப் பிடிக்கும் போலித் தமிழ்த் தேசியவாதிகள் ஒரு புறம், ‘சமூகநீதி என்ற நாணயத்தின் இரண்டு பக்கங்களான’ அய்யாவையும் அண்ணலையும் பிரித்தாளும் குறுகிய பார்வை கொண்ட சுயநலவாதிகள் மறுபுறம் என உட்பகை அதிகரித்துள்ளதே அய்யா? - ச.செல்வம், பஹ்ரைன்
பதில்: இந்த ஆரியத்தின் வித்தைகள், அம்புகள், அரிதாரங்கள் எல்லாம் கொஞ்ச காலம்தான். இம்மாதிரி எத்தனையோ வகையறாக்களை, வக்கிரங்களை திராவிடர் இயக்கமும், பெரியாரும் கண்டவர்கள்தான்.
கேள்வி: மத்திய அரசு ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ளாதது பற்றி...
- க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி
பதில்: ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தினால், கல்வி உத்தியோக நிலைகளில் மேல் ஜாதி ஆதிக்கம் பளிச்சென விளங்கி விடும்; விழிப்புணர்வுக்கு வழி வகை ஏற்படக் கூடும் என்பதால் அதை மத்திய அரசு நடத்த மறுக்கிறது என்பதே உண்மை!
கேள்வி: EIA 2020 வரைவு அறிக்கையை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்க்கின்றனரே, தங்கள் கருத்து என்ன?
- இளையராஜா, பிலாக்குறிச்சி
பதில்: தி.மு.க. தலைமையில் கூடிய அனைத்துக் கட்சி கூட்டத்தின் தீர்மானங்களில் ஒன்றே தெளிவாக விளக்குகிறதே! அதில் நாமும் தானே அங்கம்!
இந்த வரைவை அமல்படுத்தி, கார்ப்பரேட் முதலாளிகளுக்காக விவசாயிகளின் உரிமைகள், இலவச மின்சாரம் உட்பட பலவற்றைப் பறிக்கும் முயற்சியை, கொரோனா தொற்று ஊரடங்குக் காலத்தில் நாடாளுமன்றத்தினைக் கூட்டாமலும் விவாதிக்காமலும் ‘தானடித்தமூப்பாக' ஆர்.எஸ்.எஸ். உத்தரவுப்படி மத்திய அரசு செய்கிறது. மக்கள் எதிர்ப்பு மலைபோல் ஓங்குவதைக் கண்டு, புரிந்து, பின்வாங்க வேண்டும் இந்த வரைவு அறிக்கையை!
கேள்வி: அய்ந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கதுதானே?
- எஸ்.பத்ரா, வந்தவாசி
பதில்: இது விஷ உருண்டைக்கு சர்க்கரைப் பூச்சு! மும்மொழித் திட்டத்தினைத் திணித்து சமஸ்கிருதத்தை நாடெங்கும் பரப்பத்தான் இந்த வியூகம்-ஏற்பாடு!
‘மேலே தாய்மொழி; உள்ளே சமஸ்கிருதத் திணிப்பு’ என்று அதுவும் திட்டமிட்ட சூழ்ச்சி!
இதைப் புரிந்து கொள்ளவே ஒரு தனித் தெளிவு தேவைப்படும்!
No comments:
Post a Comment