பிறழாத சமூக நீதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 1, 2020

பிறழாத சமூக நீதி

நானும், என் நண்பர்களும் கோவையில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள இக்ரிசாட் (ICRISAT) நிறுவனத்திற்கு, நேர்முகத் தேர்வுக்கு நீலகிரி விரைவு வண்டியில் செல்லப் பயணமானோம். நான் அப்போது (1980) முதலாம் ஆண்டு முனைவர் படிப்பு படித்துக் கொண்டிருந்தேன். நண்பர்களுடன் அப்படியே ஹைதராபாத் எல்லாம் சுற்றிப் பார்த்து விட்டுவரலாமே என்பதும்தான் திட்டம்.


சென்னையில் இருந்து ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் அடுத்த நாள் காலையில் பிடிக்க வேண்டும். இன்றைய மாலை நீலகிரி ரயில் நிரம்பி வழிந்தது. அன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் தின விழாக் கொண்டாட்டங்கள்.  அதில் உரையாற்ற அடையாறு தொழிலாளர் நல இயக்குநர் வரவழைக்கப்பட்டார். அந்த விழா முடிந்ததும், அவர் எங்களுடன் அதே படுக்கைப் பெட்டியில் சென்னை வர நேர்ந்தது. நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டபின், அன்றைய காலை இந்து நாளிதழின் தலைப்புச் செய்தி பற்றிப் பேச்சு வந்தது.


"பாத்தேளா, ஒரு பொண்ணு, பிரசிடென்சி காலேஜூல வெறும் பிஎஸ்சி ஃபிசிக்ஸ்தான் படிச்சிருக்குறா, தேசிய அளவில் அய்.ஏ.எஸ்.ல முதலாவதா வந்துருக்குறா. இந்தச் சின்ன வயசுல என்ன ஒரு உழைப்பு, எவ்ளோ சந்தோஷமா இருக்குத் தெரியுமா!" என்றார், இயக்குநர்.


"ஆமாம், சார். உண்மையிலேயே சாதனைதான். அந்தப் பொண்ணுக்குப் பாராட்டுகள்" என்றனர், என் நண்பர்கள்.  நான், "இந்தியாவிலேயே  UPSCஇல் எங்கள் பல்கலைக்கழக மாணவர்கள்தான் அதிகமாகத் தேர்வு ஆகிறார்கள். சென்ற ஆண்டு இறுதியில், நானும் மற்றும் சில நண்பர்களும் எங்கள் வகுப்பு மாணவர் ஒருவருக்கு மாதிரி நேர்முகத்தேர்வு நடத்தி, உண்மையான அய்.ஏ.எஸ். நேர்முகத் தேர்வுக்கு அனுப்பி வைத்தோம். அவர் பெயர் விஜயகுமார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த அவர், கோவை சுக்கிரவாரப் பேட்டையில் ஒரு பெட்டிக் கடை வைத்திருப்பவரின் மகன்" என்றேன்.


"என்ன ரேங்க் வந்தது, அவருக்கு" என்று கேட்டார் இயக்குநர்.


"அகில இந்திய அளவில் 21வது ரேங்க் வந்தது," என்றேன்.


அதற்கு அவர், "பரவாயில்லையே, ஆனால், எந்த பேப்பரிலும் அந்தச் செய்தி வந்த மாதிரி தெரியவில்லையே" என்றார்.


"ஆமாம், வரவில்லைதான்" என்றேன். "எப்பவுமே போட மாட்டாங்க சார்! எங்கள் நண்பன், விஜயகுமார், உழவியல் மூதறிவியல் படித்தவர், தமிழகத்தில் அய்.ஏ.எஸ். இல் முதலிடம் மட்டுமல்ல இந்தியாவிலேயே முதலிடம் கூட! (முதல் 20 யூபிஎஸ்சி இடங்கள் சாதாரணமாக அய்.எஃப்.எஸ் ஆகிவிடுவார்கள்)."


"ஒரு தினத்தந்தி, மாலைமுரசு கூடச் சீந்தவில்லை இந்த மகிழ்வுச் செய்தியை! ஆனால் யூபிஎஸ்சி தேர்வில் வந்த, அந்த அய்யர் பெண், அதுவும் பிஎஸ்சி ஃபிசிக்ஸ் படித்து விட்டு, முதல் முயற்சியிலேயே அய்ஏஎஸ் தேர்வில் முதலாவதாக வந்தார் என்று ஒரு பத்திரிகை விடாமல் எழுதித் தீர்த்து ஒரு வழியாக ஓய்ந்து போயின."


"இதில் என்ன வேடிக்கை என்றால், அந்த அய்யர் பெண்ணின்  அப்பா அய்ஏஎஸ், ரிசர்வ் பேங்க் கவர்ன ராக ஒரு ரூபாய் நோட்டில் கையெழுத்துப் போட்டவர்; குடும்பத்தில், அண்ணன், தம்பி, மாமன், மச்சான், சித்தப்பா, பெரியப்பா உள்பட பல பேர் அய்ஏஎஸ். அந்தக் குடும்பத்தில் இருந்து ஒரு பெண் அய்ஏஎஸ் ஆவது பெரிய மேட்டர் இல்லை என்று இந்த அம்மாஞ்சிப் பத்திரிகைகளுக்குத் தெரியாது, புரியாது."


"ஒரு சிறு வியாபாரியின் மகன் அல்லது மகள் தன் கடின உழைப்பினால் மட்டும் படித்துப் பட்டம் பெற்று, பல பார்ப்பனர்களின் சமூக வில்லத் தனங்களையும் இலகுவாகக் கடந்து, அவர்களே மெச்சும் வகையில், அய்ஏஎஸ்-இல் ஒரு உயர்ந்த இடத்தைப் பிடித்துத் திகழ்வதுதான் சமூக நீதி பிறழாத ஒரு மகிழ்வுச் செய்தி!  இந்த உண்மை நம் பார்ப்பனப் பத்திரிகைகளுக்கு என்றும் உரைக்கப் போவதில்லை!" என்றேன். அந்த பார்ப்பன இயக்குநரின் முகத்தில் லிட்டர் லிட்டராக வழிந்தது, அசடு.


ஹைதராபாத் போன நாங்கள் யாரும் நேர்முகத் தேர்வில் செலக்ட் ஆகவில்லை என்பது தெரிந்ததுதான்! சலார் ஜங் மியூசியம், கோல்கொண்டாக்கோட்டை பாத்ததுதான் மிச்சம்.


நண்பர் விஜயகுமார் அய்.ஏ.எஸ், கர்நாடகா கேடரில் சேர்ந்து இப்போது ஓய்வும் பெற்று விட்டார் என்று அறிகிறோம்.


தேசிய அளவில் அய்.ஏ.எஸ்-இல் முதலாவதாக வந்த அந்த பார்ப்பனப் பெண் தமிழ்நாட்டை ‘ஆண்ட’ போது பார்ப்பனப் பண்ணயம் எப்படி இருந்தது என்பதை அண்மையில் பார்த்தோமே!


இன்றும் கூட, சாதனைகள் பல செய்தும் ஊடகங் களால் கண்டுகொள்ளப் படாமல் புறக்கணிக்கப்படும், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த எண்ணற்றோரை நாம் காண்கிறோமே!


பொன்.பாலசுப்ரமணியன்,


ஓய்வு பெற்ற இயக்குநர்,


தாவர மூலக்கூறு உயிரிய ஆய்வு மையம்,


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை.


No comments:

Post a Comment