மாமிசம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 1, 2020

மாமிசம்

பேராசிரியர் எஸ்.ரவிச்சந்திரன்,


இராஜபாளையம்



ஒரு நகரத்தில், அந்நகர மக்களின் அன்றாட உணவு முறையில் முக்கியப் பங்கு வகிக்கும் இறைச்சிக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மக்கள் கலக்கமடைகிறார்கள். பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. கலகங்கள் உருவாகலாம் எனப் பேசப்பட்டது. ஆனால், வழக்கமான மிரட்டல்களைத் தாண்டி அப்படி எதுவும் நடந்துவிடவில்லை. வெகுவிரைவிலேயே காய்கறிகளை உண்டு மக்கள் தங்களைத் தகவமைத்துக் கொண்டனர்.


ஆனால், அந் நகரத்தில் இதைப்பற்றி எவ்விதக் கவலையும் இன்றி ஒருவன் இருக்கிறான். அவன் தான் அன்சோல்டா. ஒரு நீளமான கத்தியைத் தீட்டி நுனிவிரலில் பதம் பார்த்தவன், பேண்டை நன்றாகவே இறக்கிவிட்ட பின் இடதுபுறம் பிருஷ்டப் பகுதியிலிருந்து பதமாக இரண்டு துண்டுக் கறியை வெட்டியெடுத்தான். அவற்றை நன்றாகச்சுத்தம் செய்து மசாலா சேர்த்து இரும்புச் சட்டியில் எண்ணை ஊற்றி அவற்றை வறுத்தெடுத்து தட்டில் வைத்து சாப்பிட அமர்ந்தான்.


அவன் சாப்பிடத் தொடங்கும் போது பக்கத்து வீட்டுக்காரர் உள்ளே வந்துவிட்டார். தனது துயரங்களை இவனிடம் புலம்பினால் கொஞ்சம் நிம்மதி கிடைக்கும் என்ற நோக்கத்தில் அவர் வந்தார். வந்தவரிடம் அன்சோல்டா இறைச்சித் துண்டுகளைக் காண்பிக்க அவர் நெகிழ்ந்து போனார். உடனடியாக வெளியே சென்றவர் சிறிது நேரத்தில் அந்நகர மேயரைக் கையோடு அழைத்து வந்தார். மேயருக்கோ மிக்க மகிழ்ச்சி. பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிட்டதென அவர் அகமகிழ்ந்தார். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த மாமிசத்தையே உண்டு பசியாறும் சுயசார்புக் கொள்கையை அன்சோல்டாவிடமிருந்து அறிந்து கொண்டதாகக் கூறினார். நகரமெங்கும் செய்தி பரவியது. இக் கொள்கைக்கு அறிவுஜீவிகள் சிலரிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. அதன்பின்னர், பொதுமக்கள் அதிகம் கூடும் மைதானத்தில், அன்சோல்டா பொதுமக்களுக்குச் செய்முறை பயிற்சியொன்றைச் செய்து காட்டினான்.


ஒரு கொக்கியில் பிளாஸ்டரால் செய்யப்பட்ட இறைச்சி போன்ற ஒரு பொருள் தொங்கவிடப்பட்டிருந்தது. அதைப் பயன்படுத்தி ஒவ்வொருவரும் தங்கள் பிருஷ்டப் பாகங்களிலுள்ள சதைப்பகுதியை எவ்வாறு பக்குவமாக வெட்டியெடுக்கலாம் என்பதை அன்சோல்டா செய்து காட்டினான். இதைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் முதலில் தங்களின் பிருஷ்டப் பாகத்திலிருந்த சதையை வெட்டியெடுக்கத் துவங்கினர். அக்கண்கொள்ளாக் காட்சியை ஒளிபரப்பத் தடைவிதிக்கப்பட்டது. இவ்வாறு பெறப்படும் சுயசார்பு மாமிசத்தைக் கொண்டு நகரம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினையை எத்தனை நாட்களுக்கு வெற்றிரகமாகச் சமாளிக்க இயலும் என்பது கணக்கிடப்பட்டு புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டன. 80 கிலோ எடையுள்ள ஒரு மனிதனின் குடல் குந்தாணி போன்ற கழிவு உறுப்புகளை விலக்கினால் அவரது உடல் எடை 60 கிலோ. நாளொன்றுக்கு அரைக் கிலோ வீதம் அவர் 120 நாட்கள் தன்னையே சாப்பிட்டு உயிர்வாழ முடியுமென ஒரு புகழ்பெற்ற மருத்துவர் அறிவித்தார்.


அன்சோல்டாவின் யோசனை பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பல பெண்கள் தங்களுடைய மார்பகங்களைத் தின்றுவிட்டதால் அவர்களுக்கு மேலாடை தேவையில்லாமலாயிற்று. இதனால் பாதிப்புக்குள்ளான தையல் கலைஞர்கள், தங்கள் சங்கத்தின் மூலமாக உரிய அதிகாரிகளிடம் எதிர்ப்பைப் பதிவு செய்து நிவாரணம் கோரினர். அது மறுக்கப்பட்டது. சில பெண்கள் தங்கள் நாக்குகளை விழுங்கிவிட்டதால் அவர்களால் பேச முடியவில்லை. (நாக்கைச் சாப்பிடுவது என்பது அதுவரையிலும் மேட்டுக்குடி மக்கள் மட்டுமே அனுபவித்த வந்த சிறப்புரிமையாகும்.) பல விநோதமான காட்சிகள் அரங்கேறின.


நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சந்தித்துக் கொண்ட பெண் நண்பர்களால் ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால், அவர்கள் தங்களுடைய உதடுகளை ருசியான குழம்பு வைத்துச் சாப்பிட்டுவிட்டனர். சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் ஒரு கைதியின் மரண தண்டனை உத்தரவில் கையெழுத்திட இயலவில்லை. காரணம் அவர், விரல்களிலிருந்த சதைகளை ஏற்கனவே சாப்பிட்டுவிட்டார். (“விரல் சூப்புதல் நலம்” எனும் பழமொழி இவர்களைப் போன்றவர்களைப் பார்த்துத் தான் உருவாக்கப்பட்டது.)


இவைகளைக் காட்டிலும் சுவாரசியமான செய்தி ஒரு நாட்டியக் கலைஞன் தன் கால் விரல்களைச் சாப்பிட்டு முடித்திருந்ததுதான். கலைமீது கொண்டிருந்த அளப்பரிய பக்தியின் காரணமாக, அவர் கால் விரல் நுனியிலிருந்த சதையை மட்டும் விட்டு வைத்திருந்தார். மன நிம்மதி இல்லாமல் அவர் தவித்து வருவதாக அண்டை வீட்டுக்காரர்கள் செய்தி சொல்ல, அவருடைய நண்பர்கள் அவரைக் காண வந்தனர். கொடூரமான அச்சூழலில் அக்கலைஞன் கால்விரல் நுனியில் ஒட்டிக் கொண்டிருந்த சதையை வெட்டி எடுத்து, முன்பு வாயிருந்த இடத்தில், தற்போதிருந்த துளையில் போட்டுக் கொண்டான். கூடியிருந்தவர்கள் இறுக்கமானார்கள்.


ஆனாலும், அந்நகர மக்களின் வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. அதுதான் மிக முக்கிய விசயம். நடனக் கலைஞனின் காலணிகள் நினைவுச் சின்னமாக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன. அந் நகரில் மிகப் பருமனான நபர் ஒருவர் இருந்தார். அவரின் உடல் எடை 120 கிலோ. இயல்பாகவே சாப்பாடு, சிறுதீனிப் பிரியரான அவர் பத்துப் பதினைந்து நாட்களில் தன்னை முழுவதுமாக சாப்பிட்டு முடித்துவிட்டார். சிறிது நாட்களுக்குப் பின்னர், அவர் காணாமல் போனார். அவர் மட்டுமல்ல, பல நபர்கள் காணாமல் போனார்கள். தாயொருத்தி தனது மகனைக் காணவில்லையென புகார் கொடுத்தாள். தான் கூப்பிட்டபோது பதில் அளிக்காமல் காது மடல்களை மென்று கொண்டிருந்ததாகக் கூறினார். காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் நிபுணர் வரவழைக்கப்பட்டனர். காணாமல் போனவன் கடைசியாக, காணாமல் போவதற்கு முன்பு அமர்ந்திருந்த நாற்காலியில் சில கழிவுப் பொருட்கள் கிடப்பதை மட்டுமே அந்நிபுணர் காண நேர்ந்தது. ஆனால், இச் சிறுசிறு தொந்தரவுகள் அடிக்கடி நேர்ந்தாலும் அது அந் நகர மக்களின் சந்தோசத்தைப் பாதிக்கவேயில்லை. தனது இருப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட நகரம் இவற்றைத் தவறென்று எப்படிச் சொல்லும். இறைச்சிப் பற்றாக்குறையால் சமூக ஒழுங்கிற்கு ஏற்பட்டிருந்த நெருக்கடி தீர்க்கப்பட்டுவிட்டது. நாளடைவில் நகரத்தின் மக்கள் தொகை மளமளவெனக் குறைந்தது. ஆனாலும், அந்நகர மக்கள் தங்கள்  வாழ்வாதாரத்தைக் கண்டடைவதில் கொண்டிருந்த உறுதிப்பாட்டை அது எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.


மாமிசம் என்பது ஒரு குறியீடு மட்டுமே. இதை அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.


No comments:

Post a Comment