'நீட்’டாக ஒழிக்கவே நீட்?
* கலி.பூங்குன்றன்
கல்வி மாநிலங்கள் பட்டியலில் இருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு (Concurrent) வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்ட காலந்தொட்டு (1976) கல்வி என்பது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்து விட்டது. வெறும் மத்திய அரசுப் பட்டியலைச் சார்ந்தது போன்ற ஒரு நிலை ஏற்பட்டு விட்டது.
எடுத்துக்காட்டுக்கு இரண்டு!
எடுத்துக்காட்டுக்கு வேறு ஒன்றும் தேவையில்லை ‘நீட்’ தேர்வும் தேசிய கல்விக் கொள்கை என்ற இந்த இரண்டுமே போதுமானது.
‘நீட்’ தேர்வு செல்லாது - மருத்துவக் கவுன்சிலுக்குத் தேர்வு நடத்தும் உரிமையும் கிடையாது என்று உச்சநீதிமன்றம் 2013இல் தெளிவாக திட்டமிட்ட வகையில் தீர்ப்புக் கூறிய நிலயில் அதற்கு மீண்டும் புத்தூயிர் கொடுத்த அமலுக்குக் கொண்டு வந்தது பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசே.
தமிழ்நாடு அரசின் மசோதா?
தமிழ்நாட்டிற்கு விதி விலக்கு வேண்டும் என்று கூறி தமிழ்நாடுசட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாகளை ஓசையின்றிக் கழுத்தை முறித்ததும் மத்திய பிஜேபி அரசே!
இதனை வெளியில் கூடச் சொல்லவில்லை - சட்டத்தை நிறைவேற்றிய அதிமுக அரசு.
12 வருடங்கள் படித்து, அரசு தேர்வு எழுதி வெறும் மதிப்பெண்களுக்கு மதிப்புக் கிடையாதாம்.
தனியாகத் தேர்வு நடத்தி, அதில் பெறும் வெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் இடம் என்பது எந்த வகையில் சரி?
12 வருடப் படிப்புப் பாழுக்குத்தானா?
ஆண்டாண்டுக் காலமாகக் கல்வி உரிமை மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய கிராமப்புற மக்கள் கொஞ்சம் சுதாரித்து +2 தேர்வில் மதிப்பெண்கள் போதிய அளவு பெற்று, மருத்துவக் கல்லூரிகளில் நுழைய தலைப்பட்டு விட்டனர் என்ற நிலையில், அதனைத் தடுத்து நிறுத்த திணிக்கப்படுவதுதான் இந்த ‘நீட்’ தேர்வு.
‘நீட்’ தேர்வு எழுதாமல் +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்றவர்கள் எல்லாம் தகுதியற்றவர்களா? அதற்கு ஏதாவத ஆதாரம் உண்டா? அப்படிப்படித்தவர்கள் சிறப்பாக உலகம் முழுவதும் பரிணமிக்கின்றார்களே!
பல லட்சம் செலவு செய்து தனிப் பயிற்சி (Coaching Centre) நிறுவனங்களில் படித்தவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்பதற்கென்றே ஓர் அரசே ஒரு திட்டத்தை வகுப்பது - எவ்வளவு மக்கள் விரோத ஜனநாயக விரோத சமூகநீதி விரோத செயலாகும்!
ஊழலுக்கு அப்பாற்பட்டதா நீட்?
‘நீட்’ என்பது ஊழலுக்கு அப்பாற்பட்டதுதானா?
தெலங்கானா ராஷ்டிரிய சமிதியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் பூரா. நர்சையா கவுட் ‘நீட்’ தேர்வு தொடர்பாக 2.4.2018 அன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி:
மருத்துவ மேல்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேர்வினை நடத்தும் புரோமெட்ரிக் எனும் அமெரிக்க நிறுவனம் தேர்வு தொடர்பான மென் பொருளை கையாட முடியும் என்று ஒப்புக் கொண்டுள்ளதா? என்று வினா எழுப்பினார்.
மத்திய மனிதவளத் துறையின் இணையமைச்சர் டாக்டர் சத்யபால்சிங் மக்களவையில் அளித்த பதில் 2017 ஆண்டுக்கான மருத்துவ மேற்படிப்பு சேருவதற்கான ‘நீட்’ தேர்வை, அமெரிக்க நிறுவனமான புரோமெட்ரிக் நிறுவனம் நடத்தியது.
இத்தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக மத்திய தேர்வு குழுமம் - கொடுத்த புகாரின் பெயரில், டில்லி குற்றப்பிரிவு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
இந்தப் புகார் தொடர்பான குற்றப் பத்திரிகையில், விசாரணையின்போது, அமெரிக்க நிறுவனமான புரோ மெட்ரிக் நிறுவனத்துடன் நடைபெற்ற தொலைப்பேசி உரையாடலில் தங்களதுமென்பொருள் கையாடப்பட்டதை அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் டில்லி உயர்நீதிமன்றத்திலும், அறிக்கையை அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
அதற்குப்பின் நடந்தது என்ன? தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட்டார்களா?
கேள்விகள் மூலம் பயன் அடைந்த மாணவர்கள் யார் யார்? அவர்களின் தேர்வு ரத்து செய்யப்பட்டதா? எல்லாம் மூடி மறைக்கப்பட்டு விட்டன. கேட்டால் ஒளிவு மறைவு இல்லாத ஆட்சி (Transparency) என்று பிரதமர்தன் முதுகைத் தானே தட்டிக் கொள்வர்.
சம அளவுகோல் உண்டா?
‘நீட்’ தேர்வு என்பது சம அளவுகோலில் நடத்தப்படுகிற ஒன்றா? ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வொரு வகையான வினாத்தாள்கள்?
குஜராத் மாநிலத்திற்கு மட்டும் எளிதான வினாத்தாள்கள் இவை எல்லாம் நமது கற்பனையல்ல - வெட்ட வெளிச்சமாக ஏடுகளில் ஊடகங்களில் வெளிவந்து சிரிப்பாய்ச் சிரிக்கவில்லையா?
நடந்து முடிந்த ‘நீட்’ தேர்வால் பயன் அடைந்தவர்கள் யார்? யார்?
2018-19 ஆண்டு மருத்துவப் படிப்பில், நீட் தேர்வை ஓராண்டு காத்திருந்து எழுதியவர்களில் அரசுக் கல்லூரியில், 1277 மாணவர்கள், தனியார் கல்லூரியில், 557 மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள். சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரியில் 611 மாணவர்கள், தனியார் கல்லூரியில் 283 மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள். ஆனால், தமிழ் நாடு அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் 27 பேர் மட்டுமே அரசுக் கல்லூரியிலும், 4 மாணவர்கள் தனியார் கல்லூரியிலும் சேர்ந்துள்ளனர்.
நீட் தேர்வு சாதாரண எளிய குடும்ப மாணவர்களுக்கு எதிரானது என்பதை நாம் மட்டும் கூறவில்லை. சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மாண்பமை என்.கிருபாகரன், பி.வேல்முருகன் அடங்கிய அமர்வு, தமிழ் நாடு அரசை நோக்கி, நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது என்பதை பொட்டில் அடித்தாற்போல் ஆதாரத்துடன் கூறியுள்ளது. (தி இந்து 5.11.2019).
நீதியரசர்கள் தங்களது கருத்தில், “2019-ஆம் ஆண்டு மருத்துவப் படிப்புச் சேர்க்கையில், தமிழ் நாட்டில் மொத்தம் 3081 மாணவர்கள், 23 அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் நீட் தேர்வு பயிற்சி பெற்றதனால் சேர்ந்த மாணவர்கள் 98.4%. (அரசுக் கல்லூரி), 96.9% (தனியார் கல்லூரி). இது மட்டுமல்ல, நீட் தேர்வில் ஒரே தடவையிலேயே தேர்ச்சி பெற்று, இடம் பிடித்த மாணவர்கள் 33.8% (அரசுக் கல்லூரி), 35.6% (தனியார் கல்லூரி). அப்படி என்றால், ஒரு முறைக்கு மேலும் நீட் தேர்வை எழுத தொடந்து பயிற்சி பெற்று, மறு ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தோர் விகிதம் 66.2% (அரசுக் கல்லூரி), 64.4% (தனியார் கல்லூரி). இந்தப் புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டுவது என்னவென்றால், மருத்துவக் கல்லூரியின் கதவுகள், ஏழைகளுக்குச் சாத்தப்பட்டுவிட்டது என்பது தான்” என்பதை வேதனையோடு குறிப்பிட்டுள்ளார்கள்.
நீட்-2020 தேர்வு எழுத, தமிழ் நாட்டில் விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, 17 சதவீதம் 2018-19- கல்வி ஆண்டை விட குறைந்துள்ளது. (டைம்ஸ் ஆப் இந்தியா 17.1.2020)
இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருந்து பயன் என்ன?
இந்தஇடங்கள் எல்லாம் வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கும், தலைமுறை தலைமுறையாக படித்த உயர்ஜாதி பார்ப்பனர்களுக்கு வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தாரை வார்க்கப்படுவதற்குத்தானா?
எத்தனை எத்தனை போராட்டங்கள்!
போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வந்திருக்கிறோம்.
தலைநகர் டில்லியிலும் கருத்தரங்கங்களையும், போராட்டத்தையும் நடத்தியிருக்கிறோம். நாம் கோரியது நிறைவேறவில்லை என்பதால் நாம் சோர்ந்துவிட வேண்டிய அவசியமில்லை.
வீதிமன்றம் சாதிக்கும்!
இதற்கு முன்பும்கூட அனுபவங்கள் பல நமக்கு உண்டு எந்த மன்றமும் சாதிக்காததை வீதிமன்றம் மக்கள் மன்றம் சாதித்தது என்பதுதான் வரலாறு!
அவர்களோ சிலர் - நாமோ பலர்!
அவர்களோ சிலர் - ஆனால் அதிகாரத்தில் இருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களோ மிகப் பலர் - அதிகாரத்தில் இல்லை என்றாலும் அதிகாரத்தில் யாரை அமர வைக்க வேண்டும் என்ற சக்தியை உடையவர்கள் நாம் என்பதை மறந்துவிட வேண்டாம்.
போராடுவோம் - வெற்றி பெறுவோம் என்ற உறுதியோடு மீண்டும் மீண்டும் களத்தில் இறங்குவோம் - போராடுவோம் - வெற்றிகிட்டும் வரை நமது சமூக நீதிப் போராட்டம் நடைபெறும். நடைபெற்றதாகவும் வேண்டும்.
அனேகமாக ‘நீட்’ மற்றும் தேசிக் கல்விக் கொள்கை இரண்டுமே மதவாத மத்திய அரசை புதைக் குழிக்குள் தள்ளும்! இது கல்லின்மேல் எழுத்து.
No comments:
Post a Comment